புதுடில்லி, அக்.31 டில்லியின் வாசுதேவ் காட்டில் அமைக்கப்பட்ட செயற்கைக் குளத்தில் பிரதமர் நரேந்திர மோடி சத்பூஜை நடத்தி, குளிப்பதைத் தவிர்த்ததற்குப் பின்னணியில், சமூக வலைதளத்தின் சக்தி இருப்பதாகவும், மோடி முதல் முதலாக சமூக வலைதளத்தில் பரவிய சர்ச்சைக்காக தேர்தல் ஸ்டண்ட்டை ரத்து செய்திருப்பது மோடியின் மிகப்பெரிய தோல்வியாகவே கருத்தப்படுகிறது.
சமூக ஊடகங்களில்
கடுமையான விமர்சனங்கள்
பீகார் தேர்தலில், பீகாரிகளின் வாக்குகளைப் பெற மோடி என்ற தனி நபருக்காக செயற்கையாகக் குளம் வெட்டி, அதில் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான நீரை உத்தரப்பிரதேசத்தில் இருந்து கொண்டுவந்து, நீண்ட குழாய் மூலம் செயற்கை குளத்தில் நிரப்பியது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.
‘சத் பூஜை’யில் பிரதமர் பங்கேற்பதற்காக, யமுனை நதிக்கு அருகிலேயே போலிக் குளம் ஒன்றை உருவாக்கினர். உத்தரப்பிரதேசத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட RO குடிநீரை நீண்ட குழாய்கள் மூலம் கொண்டு வந்து நிரப்பப்பட்ட அந்தப் போலிக் குளம் வாசுதேவ் காட்டில் அமைக்கப்பட்டது.
இந்தச் செயற்கையான ஏற்பாடு சமூக ஊடகங்களில் பரவலாக அம்பலப்படுத்தப்பட்டு, கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
குளியல் நிகழ்ச்சி கடைசி நேரத்தில்
ரத்து செய்யப்பட்டது
சமூக ஊடகங்களில் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக, திட்டமிடப்பட்டிருந்த பிரதமரின் ‘சத் பூஜை’ பங்கேற்பு மற்றும் குளியல் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
பீகார் தேர்தலுக்குப், பீகார் மக்களின் முக்கிய விழாவான சத்பூஜையை, தான் கொண்டாடி, அதனை ஒளிபரப்பத் திட்டமிட்டிருந்தார் பிரதமர் மோடி.
ஆனால், போலியான குளம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே சமூக ஊடகங்கள் கடுமையான விமர்சனத்தை வைத்தன.
பீகார் மக்களுக்கு மோடியின் பரிசாம்!
ஆனால், இதைக் கேட்கவேண்டிய வெகுஜன ஊடகங்களோ போலிக் குளத்தில் தண்ணீரைக் காண்பித்து, பீகார் மக்களுக்கு மோடி அளித்த ‘சத்பூஜை’ பரிசு என்று கதைவிட்டுக்கொண்டு இருந்தன.
அக்டோபர் 27, 2025 மாலை வரை பிரதமர் அலு வலகம் குளத்தின் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி மோடியின் குளியல் மற்றும் உஷா அர்க்யா (சூரிய வழிபாடு) ரத்தானது.
அதாவது அவரது அரசியல் ஸ்டண்ட் சமூக ஊட கத்தின் விமர்சனங்களால் புஸ்வானமாகிப் போகவே, போலி யமுனையில் குளியலைத் தவிர்த்துவிட்டார்.
பிரதமர் மோடியின்
மிகப்பெரிய தோல்வி!
இது மோடியின் மிகப்பெரிய தோல்வி என்றே கருதப்படுகிறது. ஒட்டுமொத்த ஊடகத்தையும் கையில் வைத்துள்ள மோடி, சமூக வலைதளப் பதிவிற்கு அஞ்சி, தேர்தலுக்காக அரங்கேற்ற விருந்த நாடகத்தை ரத்து செய்துவிட்டார்.
மோடியின் ‘சத்பூஜை’ குறித்த செய்தி 28.10.2025 அன்று ‘விடுதலை’ நாளிதழ் முதல் பக்கத்தில் வெளியானது. 30.10.2025 அன்று தலையங்கமாகவும் தீட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
