சுயமரியாதை இயக்கத்திற்கான
அடிப்படைக் காரணம் ஜாதி ஒழிப்பு (4)
அடிப்படைக் காரணம் ஜாதி ஒழிப்பு (4)
சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்திற்கான அடிப்படைக் காரணம் ஜாதி ஒழிப்பு! ஜாதி ஒழியாமல் சமதர்மம் இயலாது என்று கணித்து, சுயமரியாதை இயக்கத்தின் சமதர்மப் பாதையைப் பெரியார் உருவாக்கியதை தன் கட்டுரையின் தொடக்கத்தில் காட்டுகிறார் கட்டுரையாளர்
ப. திருமாவேலன்.
- சுயமரியாதை இயக்கத்திற்கான அடிப்படைக் காரணம் ஜாதி ஒழிப்பு (4)
- ‘சுயமரியாதைச் சமதர்மப் பாதை’
- ‘திருக்குறளும் – திராவிடர் கழகமும்’
- ‘பெரியார் : புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர்!’
- ‘பெரியாரின் மலாயா (மலேசியா) வருகையும், தமிழர்களின் எழுச்சியும்!’
- ‘இணையத்தால்… இளையோர் இதயத்தில் பெரியார்!’
- ‘கோலார் தங்க வயலில் பெரியார் பிரச்சாரம்’
‘சுயமரியாதைச் சமதர்மப் பாதை’
“சுயமரியாதைச் சமதர்மப் பாதை” எனும் கட்டுரையில் கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியர் – திராவிட இயக்க எழுத்தாளர் ப.திருமாவேலன் இவ்வாறு கூறுகிறார்.
“பேதமில்லா இடமே மனித சமூகத்திற்கு இன்பமாக வாழ ஏற்ற இடம்” என்ற தந்தை பெரியார்.
“இந்த இழிதன்மையும் அவமானமும்தான் என்னை வருத்துகிறது. நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது. நெஞ்சம் குமுறுகிறது” என்றும் சொன்னார்.
‘ஜாதி ஏற்றத்தாழ்வு’,
‘பொருளாதார ஏற்றத்தாழ்வு’,
‘ஆண் – பெண் ஏற்றத்தாழ்வு’– ஆகிய ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கக் களம் கண்டார்.
“ஜாதியும் மதமும் கடுகளவு மீதம் இருந்தாலும் எப்படிப்பட்ட சமதர்மமும் ஒரு நிமிடத்தில் கவிழ்ந்து போகும்” என்று பெரியார் கூறியதை தனது கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டு “சுயமரியாதை – சமதர்மம்” குறித்து இக்கட்டுரையில் மிக ஆழமான கருத்துகளை எடுத்து வைத்து அலசுகிறார் என்றால் அஃது மிகையில்லை.
உடலுழைப்புக்கும் – பஞ்சம, சூத்திரத் தன்மைக்கும் இடையே இருப்பதை நுட்பமான அடையாளம் கண்டு கூறியவர் பெரியார் ஒருவரே!
‘கூலி உயர்வதால் தொழிலாளியின் வாழ்வு உயர்வது இல்லை’ என்பதும்,
‘தொழில் மூலம் வரும் இலாபத்தை முதலுக்கும் – தொழிலுக்கும் சரியாய்ப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்’ என்பதும், அதாவது ‘தொழிலாளியும் – முதலாளியும் பங்குதாரர்களே’ என்பதே பெரியாரின் பொதுவுடைமைப் பார்வை.
‘சுயமரியாதை இயக்கம் எதுவரை இருக்கும்?’, ‘சமதர்மக் கொள்கை திட்டம்’, ‘பொதுவுடைமைப் பிரச்சாரத்தை கை விட்டாரா பெரியார்?’, ‘பெரியாரும் சமதர்மப் பிரச்சாரமும்’, ‘ஸ்டாலின் மறைவு – பெரியார் கருத்து’
இப்படி பல்வேறு தலைப்புகளில் கருத்துகளின் தொகுப்பாக – திருமாவேலன் அவர்களின் கட்டுரை இடம் பெற்றுள்ளது. ஊன்றிப் படித்து – ஆழ்ந்து சிந்தித்து அறிய வேண்டிய கருத்துக் கருவூலமாக கட்டுரை உள்ளது.
‘திருக்குறளும் – திராவிடர் கழகமும்’
‘திருக்குறளும் – திராவிடர் கழகமும்!’ என்ற தலைப்பில் பேராசிரியர் ப.காளிமுத்து அவர்கள் சிறப்பான கட்டுரையை எழுதியுள்ளார்.
திருக்குறள் திராவிடர்களின் அறிவு பலத்தை விளக்கும் முப்பால்.
இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரியம் புகுந்து வர்ண தர்மத்தின் ஜாதி வேரை ஊன்றியபோதே “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருவள்ளுவர் எழுதினார்.
திருக்குறளின் சிறப்பறிந்த பார்ப்பனர்கள் திருவள்ளுவரின் அறிவின் ஆழம் அறிந்து – அவர் ‘‘திராவிடர் இனமல்ல ஆரியர்’’ என்று பொய் கூறி கதை அளந்தனர். பார்ப்பனருக்கும் புலைப் பெண்ணுக்கும் பிறந்தவரே திருவள்ளுவர் என்றனர். ஆரியத்தை வள்ளுவர் கண்டித்ததால், அவரைச் சண்டாளர் ஆக்கிவிட்டதை பேரா. காளிமுத்து பதிவு செய்கிறார்.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் எனும் பார்ப்பனர், மநுவின் மறுபதிப்பு திருக்குறளைச் சித்தரிப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
‘ஆரியப் பண்பாட்டுக்குத் திராவிடர்கள் ஆட்பட்டிருந்த அக்காலத்தில் திராவிடர்களை விடுவிக்க திராவிடப் பெரியார் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்ட நூல்தான் திருக்குறள் ஆகும்’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார் என்று உரிய பல ஆதாரங்களோடு பல செய்திகளைப் பதிவு செய்வதோடு, தந்தை பெரியாரும் – திராவிடர் கழகமும் – கழகத் தோழர்களும் திருக்குறள் பரப்பும் பணியில் மேற்கொண்டுள்ள பணிகளை நிரம்ப எடுத்துக்காட்டியுள்ளார்.
திராவிடர் இயக்க ஆட்சியில் தொடக்கப்பள்ளி முதல் குறள் இடம் பெற்றுள்ளதோடு பல்கலைக்கழகம் வரை கற்பிக்கப்படுவதையும்…. ஏன்? திருவள்ளுவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகமே இயங்குவதையும் சிறப்பாக இக்கட்டுரையில் எழுதியுள்ளார். திருக்குறளும் – பெரியாரும் குறித்து பல செய்திகளை தெரிந்துகொள்ள கட்டுரையை வாசியுங்கள். கட்டுரை ஒரு கருத்துப் பேழை.
‘பெரியார் :
புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர்!’
புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர்!’
‘பெரியார் : புனிதங்களை சுட்டுப் பொசுக்கியவர்!’ என்ற கட்டுரையின் ஆசிரியர் சுனில் கில்லானி (பிபிசி தமிழ் இணையம்) மிகச் சிறந்த வரலாற்றாசிரியராவார். இக்கட்டுரை தந்தை பெரியாரை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு தாண்டி, இந்திய அளவில் மதிப்பிடுகிறது. கட்டுரையாளர் இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன இந்தியாவை உருவாக்கிய 50 ஆளுமைகளின் வரலாற்றை, ‘Incarnations: A History of India in Fifty Lives’ என்று எழுதப்பட்ட நூலில், பெரியார் குறித்து எழுதப்பட்ட கட்டுரைதான் இம்மலரில் இடம் பெற்றுள்ளது. “Sniper of the sacred cow” என்ற இக்கட்டுரை இங்கு தமிழில் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கில நூலை ‘Allen lane’ என்ற இலண்டனைச் சேர்ந்த பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தமிழில் ‘சத்யா பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது; முரளிதரன் காசி விஸ்வநாதன் தமிழாக்கம் செய்துள்ளார்.
இக்கட்டுரையில் சுனில் கில்லானி தந்தை பெரியாரைப் பற்றி குறிப்பிடும்போது, பள்ளிப் படிப்பை முடிக்காதவர் – 145 ஆண்டுகளுக்கு முன் பிறந்திட்ட ஈ.வெ.ராமசாமி நாயக்கர், இந்தியாவின் சமூக – பொருளாதார மாற்றத்திற்காக மிகப் பெரும் காரணமாக விளங்குவதைக் குறிப்பிடுகிறார்.
பெண் கல்வி – பெண்கள் முன்னேற்றம் போன்றவைகள் வடஇந்தியாவைவிட தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருக்கக் காரணம் பெரியார்.
தேர்தலில் நிற்காத பெரியார் தேர்தலில் அழுத்தமான தாக்கத்தை உருவாக்கும் சக்தியாக இருக்கிறார். 1967க்குப் பிறகு திராவிடர் இயக்க அரசியல் கட்சிகளே தமிழ்நாட்டை ஆளுகிறது. 1947க்குப் பிறகு மொழி பன்மைத்துவம் குறித்த பார்வைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜாதி குறித்து பெருங்கவலை ஏற்பட – ஜாதி பெரும் தடை என்பதை ஏற்றிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பெண்களின் உரிமை – கல்வி – பாலியல் தேவை –- பாதுகாப்பு – சொத்துரிமை குறித்து சிந்தித்து முடிவெடுக்க தேவை ஏற்பட்டுள்ளது.
பெரியாரின் சமூகநீதி இன்று இந்தியா எங்கும் பரவி அரசியல் ஆக்கிரமித்துள்ளது. வைக்கம் போராட்டம் குறித்து பல புதிய செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தந்தை பெரியார் குறித்து பன்னோக்கில் – புது கோணத்தில் – பல செய்திகளை… இல்லை, இல்லை ஆய்வுகளை இக்கட்டுரையில் இடம்பெறச் செய்துள்ளார் கட்டுரையாளர். பெரியாரைப் பற்றி ஓர் இந்திய வரலாற்றாசிரியர் – இலண்டன் கல்லூரியின் இயக்குநர் – புதிய கோணத்தில் எழுதியுள்ள கட்டுரை. படிக்க வேண்டிய கட்டுரை… பரப்ப வேண்டிய கட்டுரை.
‘பெரியாரின் மலாயா (மலேசியா)
வருகையும், தமிழர்களின் எழுச்சியும்!’
வருகையும், தமிழர்களின் எழுச்சியும்!’
‘பெரியாரின் மலாயா (மலேசியா) வருகையும், தமிழர்களின் எழுச்சியும்!’ என்னும் தலைப்பில் முனைவர் மு.கோவிந்தசாமி AISP,Ph.D. (தலைவர் – பெரியார் பன்னாட்டு அமைப்பு, மலேசியா) எழுதியுள்ளார்.
1929ஆம் ஆண்டு தந்தை பெரியார் மலேசியா விற்கு 20.12.1929 அன்று பினாங்கு துறைமுகத்தை வந்து சேர்ந்தது முதல், மலேசியா நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று தமிழர்களிடையே ஆற்றிய உரை, அதன் பின் மலேசியா நாட்டிற்கு மீண்டும் சென்றது என தந்தை பெரியாரின் மலேசியா நாட்டுச் சுற்றுப் பயணத்தை – நிகழ்ச்சிகளை – ஆற்றிய உரைகளை – அம் மண்ணில் ஏற்படுத்திய தாக்கத்தினை நிரல்பட – தக்க தரவுகள் ஒளிப்படங்களுடன் எழுதியுள்ளார்.
மலேசிய திராவிடர் கழகத் தோற்றம் – அதன் பணிகள் -– சாதனைகள் என பல செய்திகளைச் சுவைபட இக்கட்டுரையில் பயன்தரத்தக்க பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.
‘இணையத்தால்… இளையோர் இதயத்தில் பெரியார்!’
‘இணையத்தால்… இளையோர் இதயத்தில் பெரியார்!’ எனும் தலைப்பில் ஊடகவியலாளர் தி.செந்தில்வேல் எழுதியுள்ள கட்டுரையில், இணையத்தின் வழியாக – இலட்சியப் பாதையில் இமாலய வெற்றி பெற்ற தந்தை பெரியாரின் கொள்கைகளைக் கொண்டு செல்லும் இளைஞர் பெருமக்களின் சாதனைகளைச் சிறப்பாக இக்கட்டுரையில் ஊடகவியலாளர் தி.செந்தில்வேல் எழுதியுள்ளார். குறிப்பாகப் பெண்களின் பணி –- காட்சி ஊடகத்தைப் பயன்படுத்திப் பார்ப்பனர்கள் கக்கும் விஷத்தை முறித்திட நாம் ஆற்ற வேண்டிய பணிகளையும் – ‘தமிழ்த் தேசியப் போலி’களின் போக்கையும் விரிவாகத் தோலுரித்துக் காட்டுகிறார்.
‘கோலார் தங்க வயலில் பெரியார் பிரச்சாரம்’
‘கோலார் தங்க வயலில் பெரியார் பிரச்சாரம்’ என்ற கட்டுரை இரா.முல்லைக்கோ, (பெங்களூரு) அவர்களால் எழுதப்பட்டுள்ளது.கோலார் தங்கவயலில் பெரியார் மேற்கொண்ட பிரச்சாரப் பயணம் குறித்த பல பழைய நினைவுகள் – நிகழ்வுகள் குறித்து மிகச் சிறப்பான செய்திகளைப் பதிவு செய்துள்ளார் மானமிகு முல்லைக்கோ அவர்கள்.
பெரியார் – மணியம்மையார் பதிவுத் திருமணத்திற்குப் பின் சில நாட்களில் பெங்களூரு சென்ற பெரியாரின் பிரச்சாரப் பயணத்தை எடுத்துக்காட்டி, அன்றைய நாளில், (பெங்களுரு) கழகத் தோழர்கள் யாருக்கும் சொந்த வீடில்லை என்ற செய்தியைக் குறிப்பிட்டதோடு, பெங்களூரு பழைய பேட்டை நாராயணசாமிக்கு மட்டும் சொந்த வீடு இருந்ததையும், இன்று “பெரியார் நகர்” என்றே ஒன்று உருவாகி இருப்பதையும் குறிப்பிட்டு திராவிடர் கழகத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு இன்று கருநாடக மாநிலத்தில் வளர்ந்துள்ளது என்பதை பல்வேறு நிகழ்வுகள் – பல்லாண்டுகள் அங்கு அய்யா, அம்மா அவர்களைத் தொடர்ந்து ஆசிரியர் அவர்களின் பரப்புரைப் பணிகள் அதன் நிமித்தல் ஏற்பட்டுள்ள வளர்ச்சியினை தனது கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.
இன்னும் ஏராளமான கட்டுரைகள், பெட்டிச் செய்திகள், இயக்க நிகழ்வுகளால் நிரம்பியிருக்கும் பூக்காடாக மணக்கிறது ‘தந்தை பெரியார் 147ஆம் பிறந்த நாள் விடுதலை மலர்’ – படியுங்கள்! பரப்புங்கள்!!
முனைவர் அதிரடி
க.அன்பழகன்
மாநில அமைப்பாளர்,
கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம்
