வடஇந்திய அய்.ஏ.எஸ். அதிகாரி புகழாரம்
மும்பை, அக்.30– இந்திய கடல்சார் வார மாநாடு மும்பையில் 27ஆம் தேதி தொடங்கியது. துறைமுகங்களை கொண்ட ஒவ்வொரு மாநிலமும் இந்த மாநாட்டில் தனித்தனி அமர்வுகளை அமைத்து தங்களின் மாநிலத்திற்கு தொழில் தொடங்க வரும்படி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
அந்த வரிசையில் தமிழ்நாடு அரசின் அமர்வு நேற்று நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சென்னை மற்றும் காமராஜர் துறை முகங்கள் தலைவர் சுனில் பாலிவால், தமிழ்நாடு கடல் வாரியத்தின் துணைத் தலைவர் வெங்கடேஷ் மற்றும் தமிழ்நாடு அரசுத்துறையின் மூத்த அதிகாரிகள், துறைமுகங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது, உலகின் கடல் சார் மய்யமாக இந்தியாவை மாற்றுவதில் தமிழ்நாடு உறு துணையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
தொழில்வாய்ப்பு களின் இருப்பிடம் தமிழ்நாடு
இந்திய கடல்சார் வார மாநாட்டில் நேற்று சென்னை, காமராஜர் துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் பேசியதாவது:-
தொழில் வாய்ப்பு களின் இருப்பிடம் தமிழ்நாடு. நான் ராஜஸ்தானைச் சேர்ந்தவன். 1994ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்தேன். தமிழ்நாட்டிற்கு செல்வதென்பது ஒரு வடஇந்தியனால் விரும்பப்படாதது. ஆனால் நான் சொல்வேன், ஒருமுறை அங்கு சென்று விட்டால், அங்கிருந்து நீங்கள் திரும்பி வரமுடியாது.
தமிழ்நாடு அரசின் பணிகளை முடித்து ஒன்றிய அரசு பணிக்கு நியமிக்கப்பட்ட போதும், சென்னையைவிட்டு வெளியே வராதபடி பார்த்துக்கொண்டேன். கடல்களைக் கடந்து வர்த்தகம் செய்வது பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர் தற்போது கேள்விப்படும் நிலையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் அவ்வையார் ‘திரைகடலோடி திரவியம் தேடு’என்று பாடியிருக்கிறார். இதுதான் தமிழ்நாடு. அதனால்தான் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு அழைக்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டால் வேறு மாநிலங்களை முதலீட்டாளர்கள் தேர்வு செய்யமாட்டார்கள். சுற்றுலாக் கப்பல் போக்குவரத்தின் மய்யமாக சென்னைத் துறைமுகத்தை (ஹோம் போர்ட்) மாற்றவேண்டும் என்பதுதான் என் விருப்பம். இவ்வாறு அவர் பேசினார்
