சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

9 Min Read

கண்ணியமிக்க காயிதே மில்லத், அறிஞர் அண்ணா, கலைஞர் காலத்திலும் சரி,
‘திராவிட மாடல்’ ஆட்சியின் இன்ைறய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலத்திலும் சரி,
இஸ்லாமிய சமுதாயத்துடனான எங்கள் உறவு என்றென்றைக்கும் பிரிக்கப்பட முடியாத ஒன்றாகும்!
அதற்கு அடித்தளம் வெறும் நட்போ, கூட்டணி இடங்களோ அல்ல நண்பர்களே, கொள்கைதான்!

சென்னை,  அக்.30 –   கண்ணியமிக்க காயிதே மில்லத், அறிஞர் அண்ணா, கலைஞர் காலத்திலும் சரி, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இன்ைறய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலத்திலும் சரி, இஸ்லாமிய சமுதாயத்துடனான எங்கள் உறவு என்றென்றைக்கும் பிரிக்கப்பட முடியாத ஒன்றாகும். அப்படிப்பட்ட ஓர் உறவை, அவர்கள் ஏற்படுத்தியதற்கு அடித்தளம் என்னவென்று சொன்னால், வெறும் நட்போ, கூட்டணி இடங்களோ அல்ல நண்பர்களே, கொள்கைதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்களின் நூற்றாண்டு விழா!

கடந்த 26.10.2025 அன்று சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் இந்திய யூனியன் முசுலீம் லீக் அமைப்பின் சார்பில் நடைபெற்ற, சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்களின் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

ஒரு கொள்கைக் குடும்ப விழா!

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஒப்பற்ற தலைவர்  சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்களுடைய நூற்றாண்டு விழா என்பது ஒரு கொள்கைக் குடும்ப விழா!

இவ்விழாவில், நான், வைகோ, அருமை நண்பர் திருச்சி சிவா, பீட்டர் அல்போன்ஸ் போன்ற வர்கள் கலந்துகொள்கிறோம் என்றால், விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவில்லை, உங்கள்  குடும்ப உறுப்பி னர்களாக, உங்களில் ஒருவராகக் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு நூற்றாண்டு என்றால், எங்கள் சதையெல்லாம் ஆடும்; எங்கள் உணர்வெல்லாம் மிகப்பெரிய அளவில் பூரித்து இருக்கும்.

அதுபோல, இந்த நூற்றாண்டு விழாவில், ஒரு குடும்ப உறவோடு நாங்கள் இருக்கின்றோம் என்ற குதூகலத்தோடு என்னுரையைத் தொடங்குகின்றேன்.

‘தகைசால் தமிழர்’  அன்பிற்கும்,
பாராட்டுதலுக்கும் உரிய பேராசிரியர் பெருமகனார்!

இவ்விழாவிற்குத் தலைமையேற்று இருக்கின்ற இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் என்றென்றைக்கும்  பண்பின் சிகரமாக இருக்கக்கூடியவர். அவர், யாரையும் சங்கடப்படுத்தவோ, புண்படுத்தவோ மாட்டார். அப்படிப்பட்ட ‘தகைசால் தமிழர்’ இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைப்பின் ஆற்றல்மிகு தலைவர் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய பேராசிரியர் பெருமகனார் அவர்களே,

இங்கே வரவேற்புரையாற்றிய, எப்போதும் நம் நட்புறவாக இருக்கக்கூடிய, சட்டமன்றத்தில் உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, ஒன்றே போல் மதிக்கப்படக்கூடிய பாராட்டப்படக்கூடிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைப்பின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய  முகமது அபுபக்கர் அவர்களே,

கருத்துரையாற்றியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களே,

“உலக அரங்கில் சிராஜுல் மில்லத்”

நம்முடைய அருமை நண்பர், சிங்கப்பூரில் செம்மொழி ஆசிரியராக இருந்து, சிறந்த இலக்கியவாதியாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்ற தோழர் இலியாஸ் அவர்கள், பொருள் பொதிந்த ஒரு பொக்கிஷத்தைக் கொடுத்திருக்கிறார் இந்த நூற்றாண்டு விழாவில், “உலக அரங்கில் சிராஜுல் மில்லத்” என்ற தலைப்பில் அருமையான இந்த  நூல். இந்நூலாசிரியர் என்னுடைய நண்பர் – இலக்கியவாதி, சிங்கப்பூரில் சிறப்பாகத் தொண்டாற்றக்கூடிய ஒரு செம்மல். அந்நூலைப் பெறுவதற்குரிய தகுதி உள்ளவர்கள் இங்கே இருக்கக்கூடிய இளைய தலைமுறையினர். ஆனால், இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், இந்நூலை வெளியிட்டபோது, அந்நூலை அப்துல் சமது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது, தந்தை பெரியார் அவர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு குடும்பம் என்றால், அது ஈரோட்டில் புகழ்பெற்ற  முதலாளி சாயுபு குடும்பம்தான்.

ஏதோ அலங்காரத்திற்காக உங்கள் குடும்பத்தில் ஒருவராக வந்திருக்கின்றேன் என்று மேடைக்காகப் பேசவில்லை.

‘பிராமண பெரிய அக்கிரகாரம்’ என்று ஈரோட்டிற்குப் பக்கத்தில் இருந்தது. ஆனால், அங்கே பெரும்பாலும் இஸ்லாமிய சமுதாயத்தினர்தான் இருந்தனர். அந்தப் பகுதியில் வேற்றுமையே கிடையாது.

மதத்தைச் சார்ந்தது அல்ல;
மனதைச் சார்ந்தது!

அங்கே இருக்கின்ற அத்துணை குடும்ப நிகழ்வுகளிலும், பெரியார், அன்னை மணியம்மை யார், அதற்குப் பிறகு நான்.  அங்கே இருக்கின்ற இஸ்லாமிய சகோதரிகள்கூட எங்களை அன்போடு உள்ளே அழைத்துப் போவார்கள்.

இது மதத்தைச் சார்ந்தது அல்ல; மனதைச் சார்ந்தது.

மதம் பிரிக்கலாம் மற்றவர்களை; ஆனால், மனம் ஒன்றாகும். அந்த மனதோடுதான் இந்த நூற்றாண்டு விழாவை நாம் அழகாகக் கொண்டாடு கின்றோம்.

ஒரு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்ற நேரத்தில், உங்கள் அனைவரையும் வருக! வருக! வருக! என்று பெரியார் திடலுக்கு உங்களை நான் வரவேற்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

இந்த நூற்றாண்டு விழா, வேறு இடத்தில் நடப்பதைவிட, பெரியார் திடலில் நடத்தக்கூடிய வாய்ப்பு என்பது மிகவும் சிறப்பானதாகும். அது வரலாற்றுப்பூர்வமான ஓர் இணைப்பு – இயல்பாக அமைந்துவிட்டது.

69 ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று வாழ்த்தியவன்!

அதுமட்டுமல்ல, சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்களின் 69 ஆவது பிறந்த நாள் விழாவில், நான் பங்கேற்று வாழ்த்தியவன்; இன்றைக்கு நடைபெறுகின்ற அவருடைய நூற்றாண்டு விழாவில் பங்கேற்று இருக்கி றேன்.

எத்தனை ஆண்டுகள்? எத்தனை ஆண்டுகள் ஆனா லும், எங்கள் உறவு என்றைக்கும் பலப்படுமே தவிர, ஒருபோதும் அது சிதையாது, சீர்பெறும்.

இங்கே நம்முடைய சகோதரிகளையெல்லாம் பார்க்கின்ற நேரத்தில் ஏற்படுகின்ற ஓர் அற்புதமான உணர்வு.

எங்களுடைய திராவிட இயக்கத்தினுடைய போர் வாள் – இந்தப் போர் வாள் எப்போதும் உறையில் இருக்காது. நாடாளுமன்றத்தில் இருந்தால், அங்கே நீளும். மக்கள் மன்றத்தில் இருந்தால், எப்போதும் சுழன்றுகொண்டே இருக்கும்.

அதுபோலவே, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணைப் பொதுச்செயலாளரும், ஒப்பற்ற நாடாளுமன்றவாதியும், நாடாளுமன்றத்தில் அவர் எழுந்தால், எதிரிகள் கலங்கக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய சிறப்பு வாய்ந்த திருச்சி சிவா அவர்களே,

அதுபோலவே, மதத்தால் பிரிக்க முடியாது என்பதற்கு அடையாளம்தான்; எங்கள் அன்பிற்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவருமான அருமைச் சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களே,

அதேபோல, நாடாளுமன்ற உறுப்பினரும், நம்மு டைய பாராட்டுதலுக்கும் உரிய நவாஸ்கனி அவர்களே,

எங்கள் குடும்பச் செல்வங்களில் ஒருவர் ஏ.எஸ்.பாத்திமா முசப்பர்

தேசிய செயலாளர் அப்துல் பாசித் அவர்களே, தேசிய துணை செயலாளர் அன்பிற்குரிய எங்கள் செல்வம் ஏ.எஸ்.பாத்திமா முசப்பர் அவர்களே, இவர் எங்கள் குடும்பச் செல்வங்களில் ஒருவர் – அவரைப் பாராட்டுவது என்பது எங்களுக்குப் பெருமை.

மவுல்வி கே.எம்.இலியாஸ் ரியாஜி அவர்களே,

நன்றியுரை கூறவிருக்கக்கூடிய பொருளாளர் ஷாஜகான் அவர்களே, சகோதரர்களே, சகோதரிகளே, தாய்மார்களே, நண்பர்களே, கட்சிகள், மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட மனிதநேய சிறப்பாளர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நூற்றாண்டு விழாவை
ஏன் கொண்டாடுகிறோம்?

நூற்றாண்டு விழாவை, ஒருவருக்கு நாம் கொண்டாடுகிறோம் என்று சொன்னால், அதை எந்த வகையில் அணுகவேண்டும்; அவருடைய சிறப்புகளைச் சொல்லிவிட்டுச் சென்றால் மட்டும் போதாது; அவருடைய தொண்டறம், சாதனை எப்படிப்பட்டது என்பதை மட்டும் பதிவு செய்தால் போதாது.

அவருடைய இலக்கு என்ன?

அவர் எதற்காகத் தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தார்?

எதற்காக சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்கள், காயிதே மில்லத் அவர்கள் விட்ட பணியைத் தொடர்ந்தார்?

நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ளுகின்ற விழாதான், இந்த நூற்றாண்டு விழா!

இன்றைக்கு ஏன் நாம் அந்தப் பணிகளைத் தொடரவேண்டும்? அந்த இலக்குகளை எப்படி அடையவேண்டும் என்பதற்கு மீண்டும் நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்ளுகின்ற விழாதான், இந்த நூற்றாண்டு விழா!

எனவே,  நூற்றாண்டு விழாவின் தத்துவமே அதுதான்.

பல விஷயங்களைப் புதிய தலைமுறையி னருக்குச் சொல்லியாகவேண்டும். ஏனென்றால், இன்றைய புதிய தலைமுறையினருக்குக் காட்சிகள் தெரிகின்றனவே தவிர, மீட்சிகள் தெரிவதில்லை.

இப்போது மீட்சிகள் தேவை என்பதுதான் மிகவும் முக்கியம்.

என்றென்றைக்கும் எங்கள் உறவு பிரிக்கப்பட முடியாத ஒன்றாகும்!

இசுலாமிய சமுதாயத்துடனான எங்களுடைய நட்புறவு என்பது இருக்கிறதே, அது எவ்வளவு என்று சொன்னால், கண்ணியமிக்க காயிதே மில்லத், அறிஞர் அண்ணா, கலைஞர் காலத்திலும் சரி, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இன்ைறய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காலத்திலும் சரி, இஸ்லாமிய சமுதாயத்துடனான எங்கள் உறவு என்றென்றைக்கும் பிரிக்கப்பட முடியாத ஒன்றாகும்.

அப்படிப்பட்ட ஓர் உறவை, அவர்கள் ஏற்படுத்தியதற்கு அடித்தளம் என்னவென்று சொன்னால், வெறும் நட்போ, கூட்டணி இடங்களோ அல்ல நண்பர்களே, கொள்கைதான்.

பிற்போக்குச் சக்திகள், ஆரிய சக்திகள் தங்கள் ஆணவத்தைச் சுழற்றுகின்றன!

இன்றைக்கு ஒரு பெருங்கொடுமை – பெரும்பான்மை – சிறுபான்மை – இப்படி ஒரு பிளவுக் கோடு போட்டு, வாழவேண்டிய ஒரு சமுதாயத்தை, எல்லோருடைய பங்களிப்பும் இருக்கவேண்டிய நிலையில், அணைக்கப்படவேண்டிய ஒரு சமுதாயத்தை, இன்றைக்கு வெறுப்பு அரசியலில் தள்ளி, அவர்களை அழித்துவிடவேண்டும், ஒழித்துவிடவேண்டும் என்று பிற்போக்குச் சக்திகள், ஆரிய சக்திகள் தங்கள் ஆணவத்தைச் சுழற்றுகின்றன.

களத்தில் நிற்பதற்கு
யாரும் பின்வாங்கியதில்லை!

அதைத் தடுக்கவேண்டிய கட்டம் மிக முக்கிய மானதாகும். எப்போதெல்லாம் களத்தில் பிரச்சினைகள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் களம் காணுவதற்கு காயிதே மில்லத் அவர்கள், அண்ணா அவர்களுக்குத் துணையாக இருந்ததைப்போல, காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு, சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்கள், அதற்குப் பிறகு இன்றைக்கு இருக்கின்ற ‘தகைசால் தமிழர்’  அவர்கள் எல்லோரும் அந்தக் களத்தில் நிற்பதற்கு யாரும் பின்வாங்கியதில்லை.

தமிழ்நாட்டில், அழிக்கப்பட முடியாதது இட ஒதுக்கீடு, சமூகநீதி.  இஸ்லாமியர் சகோதரர்கள் உள்பட இட ஒதுக்கீடு தந்த பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு. அந்த சமூகநீதிக்கு ஆபத்து வந்தது. ரூ.9 ஆயிரம் வருமானத்திற்குள் இருந்தால்தான், பிற்படுத்தப்பட்ட வர்கள் என்று.

சமூகநீதிக்கு ஆபத்து வந்தபோது
துணை நின்றவர்கள்!

சமூகநீதிக்கு அப்படியொரு ஆபத்து வந்தபோது, அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தது, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும்தான். அதற்கு ஒரு சிலர்தான் துணையாக இருந்தார்கள். அப்படி எல்லா வகையிலும் துணையாக இருந்தவர்தான் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைப்பின் தலைவராக இருந்த சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்கள்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் துணை நின்றது.

மிகப்பெரிய அளவில் தொடர்ந்து ஓராண்டு போராட்டம் நடைபெற்றது. அதற்குப் பிறகு, தேர்தலில் எம்.ஜி.ஆர். அவர்களின் கட்சி அ.தி.மு.க. தோல்வியடைந்தது. அந்தத் தோல்வியில் பாடம் பெற்றார். அதற்குப் பிறகு இட ஒதுக்கீட்டின் அளவை 68 சதவிகிதம் என்று ஆக்கும்போது, 69 சதவிகிதம் வரவேண்டிய நிலையில், ஓர் உத்தரவு வந்தது.

எஸ்.டி. என்று சொல்லக்கூடிய மலைவாழ் மக்களுக்கு ஒரு சதவிகிதம் கொடுக்கவேண்டும் என்று.

68 + 1 சேர்ந்து 69 சதவிகிதமாயிற்று.

இதனை, சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்களின் சமூகநீதிப் பங்களிப்பை, அவரது 69 பிறந்த நாள் விழாவிலே பேசினேன் என்பதுதான் இன்னும் சிறப்பு.

69 சதவிகித இட ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் மட்டுதான்…

உங்களுக்கெல்லாம் தெரியும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுதான் 69 சதவிகித இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்போடு இருக்கிறது.

இதற்குப் பாடுபட்டவர்களில், களம் கண்டவர்களில் பலரும்,  முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் தலைமையில்,  டில்லி வரைக்கும் சென்று அன்றைய பிரதமரைச் சந்தித்தோம், அதற்காக சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்கள் ஆற்றிய பங்களிப்பை மறக்க முடியாது.

இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும்!

எங்களுடைய நட்பு நெருக்கமான நட்பு என்பதற்கு ஒரே ஓர் உதாரணத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.

சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது அவர்க ளோடு மட்டும்தான் நட்போடு இருந்தோம் என்று நினைக்கவேண்டாம். அவருடைய தந்தையாரும்,  தந்தை பெரியாரும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும்.

குரானைத் தமிழில் மொழி பெயர்த்து, அதற்கு விளக்கம் எழுதியவர்!

அவையெல்லாம் வரலாற்றுச் சுவடுகள். அந்த வரலாற்றுச் சுவட்டில் ஒரு குறிப்பு – அப்துல் சமது அவர்களின் தந்தையார் மவுலானா மவுல்வி அப்துல் ஹமீது பாகவி அவர்கள், ஒரு நூலை எழுதினார். சிறந்த சிந்தனையாளர் அவர்.

அந்த நூல் மிக முக்கியமான தத்துவ நூல்.  பாகவி அவர்கள், பல்வேறு நூலை இயற்றியவர். குரானைத் தமிழில் மொழி பெயர்த்து, அதற்கு விளக்கம் எழுதியவர்.

இஸ்லாமிய நூற் பிரச்சார சங்கப் பிரசுரம் என்று திருச்சி இஸ்லாமிய அச்சு இயந்திர சாலையில் அச்சிட்டு, 1930 இல், ‘இயற்கை மதம்’ என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

(தொடரும்)

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *