கொல்கத்தா அக். 29- 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை இயக்கப்பட்டது. இதில் இருநாட்டுப் பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர்.
கோவிட்டும் – மோதலும்
ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளான இந்தியா, சீனா இடையே நேரடி விமான சேவை நடந்து வந்தது. நடந்தது. ஆனால் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரசால் கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் கிழக்கு லடாக் எல்லையில் இருநாட்டு ராணுவத்துக்கு இடையே நடந்த மோதல் இந்தியா – சீனா உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. இது நேரடி விமான போக்குவரத்தை காலவரையின்றி ரத்து செய்து விட்டது. இந்த எல்லை மோதலுக்கு தீர்வு கண்டு, இரு நாட்டு உறவை மேம்படுத்த இந்தியா-சீனா தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் எல்லையில் அமைதி திரும்பியதுடன், இருதரப்பு உறவிலும் சுமூக நிலை உருவானது.
மீண்டும் விமானசேவை
எனவே இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஆகஸ்டு இறுதியில் -சீனாவில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது சீன அதிபர் ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இருநாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே இந்த மாத இறுதிக்குள் நேரடி விமான சேவை தொடங்கும் என ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா மற்றும் சீனாவின் குவாங்சு நகருக்கு இடையே விமான போக்குவரத்தை தொடங்குவதாக ‘இண்டிகோ’ நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்சு நகருக்கு, ‘இண்டிகோ’ விமானம் 26.10.2025 அன்று இரவு 10 மணியளவில் புறப்பட்டது.
வர்த்தக உறவு
அந்த விமானத்தில் இரு நாட்டு பயணிகளும் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக சீனாவின் ஷாங்காய் நகருக்கும், டில்லிக்கும் இடையே நேரடி விமான சேவையை அடுத்தமாதம் 9ஆம் தேதிமுதல் தொடங்க உள்ளதாக சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. வாரந்தோறும் புதன், சனி, ஞாயிற்றுக்கிழ மைகளில் இந்த விமான போக்குவரத்து இருக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதன் வாயிலாக, இந்தியா- சீனா இடை யேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவு விரிவடையும் என இருநாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
