மும்பை, அக்.28 மகாராட்டிரா மாநில மேனாள் முதலமைச்சரும் சிவசேனா (UBT) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- ஜனநாயகத்தில் வாக்காளர்கள் அரசை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று அரசு வாக்காளர்களை தேர்வு செய்கிறது. மக்களவை தேர்தலில் வாக்குத் திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும். அது விசாரணையை சந்திக்க வேண்டும்.
பாஜக தன்னிறைவு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், பாஜக இன்னும் தன்னிறைவு பெறவில்லை. ஏனென்றால், அது கட்சிகளை பிரித்து வாக்குகளை திருடிக் கொண்டிருக்கிறது. பாஜக தன்னைத்தானே தேசபக்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் போலிக் கும்பல். வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்யும்வரை, மகாராட்டிராவில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்திற்கு சொல்லிக் கொள்கிறேன்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்
ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
சிவகங்கை, அக்.28 செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- இன்றைய சூழ்நிலையில் எல்லாக் கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. அதிமுக பிரிந்து கிடக்கிறது; பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாசுக்கும், அன்புமணிக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்க திமுகவுக்குத் தானே வாய்ப்பிருக்கிறது. அது கண்கூடாகவே தெரிகிறது. ஆதலால் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்; நான் பேசவில்லை என்று கூறினார்.
