சென்னை, அக்.27– தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக இத்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை தீவுத்திடலில் தன்னார்வ அமைப்பு சார்பில் நடைபெற்ற 16ஆவது ஆண்டு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்துப் பேசுகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த இலவச புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்தின் மூலம், இளம் வயது சிறுமிகள் கருப்பை வாய் புற்றுநோய் போன்ற அபாயங்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக 2025-2026 பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு ரூ.36 கோடி நிதி ஒதுக்கியுள்ளதும், தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
