சென்னை அக்.27– ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த இலக்கியப் படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு 11 எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதற்குத் தகுதியுள்ளவர்கள் வரும் நவம்பர் 28, 2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 11 இலக்கியப் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெளியீட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தேர்வு முறை: தேர்ந்தெடுக்கப்படும் 11 படைப்புகளில், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மதம் மாறிய ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த 9 எழுத்தாளர்கள், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பிரச்சினைகளைப் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத ஒரு எழுத்தாளர், பழங்குடியினர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத ஒரு எழுத்தாளர் ஆகிய 11 பேரின் படைப்புகளுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் வேலை நாட் களில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை, படைப்பின் இரு நகல்கள் (Two Copies) மற்றும் டிஜிட்டல் வடிவம் ஆகியவற்றுடன், உரிய படிவத்தில் கைப்பேசி எண்ணைக் குறிப்பிட்டு, நவம்பர் 28, 2025-க்குள், ஆணையர், ஆதிதிராவிடர் நலத்துறை, சென்னை-05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அரபிக்கடலில் 11 நாட்களாக
சிக்கித் தவித்த 31 மீனவர்கள் மீட்பு
மங்களூர், அக்.27– கோவாவை சேர்ந்த மீன்பிடி படகில் 31 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடி படகு செயலிழந்ததால் கொந்தளிப்பான அரபிக்கடலில் கடந்த 11 நாள்கள் சிக்கி தவித்தனர்.
மங்களூருவில் இருந்து சுமார் 100 மைல் தொலைவில் கடலில் மீன்பிடி படகு காணாமல் போனதாக வந்த தகவலை அடுத்து இந்திய கடலோர காவல் படை கஸ்தூர்பா காந்தி ரோந்து கப்பலையும், கொச்சியில் இருந்து ஒரு டோர்னியர் விமானத்தையும் அனுப்பியது. டோர்னியர் விமானம் மீன்பிடி படகை கண்டறிந்தது தகவல் தெரிவித்தது. இதை தொடர்ந்து கஸ்தூர்பா காந்தி ரோந்து கப்பல் சென்று அங்கு தந்தளித்த மீன்பிடி படகை துறைமுகத்துக்கு இழுத்து வந்தது. பின்னர் மீன்பிடி படகில் சிக்கி தவித்த 31 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
