புதுடில்லி, மே 17- தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளுக்கு அதிக அளவு மின் விநியோகம் செய்யும் அரசுக்கு ஒன்றிய அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் எழுதியுள்ளார்.
ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் கடந்த 11 ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில்
2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில்,
2021-2022 ஆம் ஆண்டில், அது நாளொன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருப்பதாகவும், இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், 2021-2022 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத் தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒன்றிய அரசு உதவிடும் என்றும் ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.