புதுடில்லி, அக். 26- 2025 ஆண் டுக்கான உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலிலும் வழக்கம் போல அய்ரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
முதல் 10 நாடுகளில் 7 நாடுகள் அய்ரோப்பாவைச் சேர்ந்தவையாகவே உள்ளன. மேலும், இந்த பட்டியலில் இந்தியா எங்கு உள்ளது. இந்தியாவில் மக்களுக்கு உள்ள பிரதானச் சவால்கள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்!
இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் புவிசார் பதற்றம், போர், மோதல்கள் அதிகரித்து வருகிறது. எப்போதும் இதுபோன்ற சூழல்களில் அப்பாவி பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள். 2025 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நாடுகள் பட்டியலும் கூட நமக்கு அதையே காட்டுகிறது. இது உலக மக்களின் வாழ்க்கைத் தரத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
மகிழ்ச்சியான நாடுகள்
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் நலவாழ்வு ஆராய்ச்சி மய்யம், கேலப் மற்றும் அய்.நா.வின் வளர்ச்சி மய்யத்துடன் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), ஆரோக்கியமான ஆயுள் எதிர்பார்ப்பு, சமூக ஆதரவு, பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், தாராள மனப்பான்மை, மற்றும் ஊழல் குறித்த கருத்துகள் ஆகியவை அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப் பட்டுள்ளது.
யார் முதலிடம்?
பொதுவாகவே இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் எப்போதும் அய்ரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தும். நடப்பு ஆண்டில் கூட அது விதிவிலக்கு இல்லை. 2025 உலக மகிழ்ச்சி கணக்கெடுப்பில் பின்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. பின்லாந்து தொடர்ந்து 8ஆவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள விரிவான நலத்திட்ட அமைப்பு உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
பின்லாந்தை தொடர்ந்து டென்மார்க் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சமத்துவம், அனைத்துச் சமூ கத்தினரையும் உள்ளடக்குவது, சமச்சீர் வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆகியவை இதற்குப் பிரதானக் காரணமாகச் சொல்லப்படுகிறது.. அடுத்து மூன்றாவது இடத்தில் அய்ஸ்லாந்து உள்ளது. அதன் சமூகப் பிணைப்புகள் மற்றும் அற்புதமான இயற்கைச் சூழல் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கிறது.
நான்காவது இடத்தில் ஸ்வீடன் இருக்கிறது. முற் போக்கான கொள்கைகள் மற்றும் வேலை வாழ்க்கை ஆகியவற்றுக்கு அதிக முக்கி யத்துவம் அளிப்பதே இதற்குக் காரணமாகும். தொடர்ந்து அய்ந்தாவது இடத்தில் நெதர்லாந்து உள்ளது.. மனநல விழிப்புணர்வு மற்றும் தரமான கல்வி ஆகியவையே இதற்குப் பிரதானக் காரணமாகும். இப்படி மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதல் 5 இடங்களுமே அய்ரோப்பிய நாடுகளுக்குத் தான் செல்கிறது.
ஆறாவது இடத்தில் தான் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா வருகிறது. மேலும், இது அமெரிக்கக் கண்டத்திலேயே மகிழ்ச்சியான நாடாகத் தொடர்கிறது. அமைதி மற்றும் நிலைத்தன்மைக்குப் பெயர் பெற்ற கோஸ்டாரிகா, இந்த பட்டியலிலும் 6ஆவது இடத்தில் இருக்கிறது.
தொடர்ந்து ஏழாவது இடத்தில் சமச்சீர் செல்வம், தூய்மையான, நிலையான சுற்றுச்சூழல் ஆகியவைக்கு பெயர்போன நார்வே இருக்கிறது.
எட்டாவது இடத்தில் இஸ்ரேல் உள்ளது. பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் இருந்தபோதிலும், இஸ்ரேல் தொடர்ந்து அதிக மதிப்பெண்களைப் பெற்று வருகிறது.
உலக நாடுகள்
இதில் பொருளாதார உறுதித்தன்மை மற்றும் உயர்தர வாழ்க்கை முறையை வழங்கும் லக்சம்பர்க் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து 10ஆவது இடத்தில் மெக்சிகோ வருகிறது. பொருளாதாரச் சவால்கள் இருந்தாலும், செழுமையான கலாச்சாரம் மற்றும் குடும்பத்திற்கு ஆழமான மதிப்புகளைக் கொடுப்பது மெக்சிகோவை மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கொண்டு வந்துள்ளது. முதல் 10 இடங்களில் மெக்சிகோ வருவது இதுவே முதல்முறையாகும். ஒட்டுமொத்தமாக முதல் 10இல் கோஸ்டாரிகா, மெக்சிகோ, இஸ்ரேல் தவிர மற்ற 7 நாடுகள் அய்ரோப்பாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா எங்கே?
147 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில், இந்தியா 118வது இடத்தைப் பிடித்துள்ளது, கடந்த 2024ஆம் ஆண்டில் 126வது இடத்தில் இந்தியா இருந்த நிலையில், ஒரே ஆண்டில் கணிசமாக முன்னேறி இருக்கிறது. மனநலம், வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் சமூக உதவிகள் கிடைப்பதில் உள்ள சிக்கல் இந்தியாவின் பிரதானச் சவாலாக இருக்கிறது.
