மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வாழ்த்துரை

7 Min Read

யாரும் கேள்வி கேட்காத விசயங்களை எல்லாம் கேள்வி கேட்கத் தூண்டியது சுயமரியாதை இயக்கம்!
தந்தை பெரியாருடைய கோட்பாடுகளை இன்னும் பரவலாக, விரிவாக, மக்கள் மத்தியிலே எடுத்துச் சொல்லக்கூடிய கடமையும், பொறுப்பும் நம்முடைய ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது!
சு.ம. இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடக்கூடிய இந்தத் தருணத்தில்
ஓர் உறுதிமொழியாக நாம் ஏற்றுக்கொண்டு, பெரியாருடைய பாதையிலே நடைபோடுவோம்!

மறைமலைநகர், அக்.26 யாரும் கேள்வி கேட்காத விசயங்களை எல்லாம் கேள்வி கேட்கத் தூண்டியது சுயமரியாதை இயக்கம்! தந்தை பெரியார் அவர்களுடைய கோட்பாடுகளை எல்லாம் இன்னும் பரவலாக, விரிவாக, மக்கள் மத்தியிலே எடுத்துச் சொல்லக்கூடிய கடமையும், பொறுப்பும் நம்முடைய ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அதை சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடக்கூடிய இந்தத் தருணத்தில் ஒரு உறுதிமொழியாக நாம் ஏற்றுக்கொண்டு, பெரியாருடைய பாதையிலே நடைபோடுவோம் என்றார், பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ. அவர்கள்.

கடந்த 4.10.2025 அன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில்,  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர்
எம்.எச்.ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ.  வாழ்த்துரையாற்றி
னார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்ற, தமிழர் தலைவர், திராவிடர் கழகத்தினுடைய தலைவர், நாம் பெரிதும் மதிக்கக்கூடிய ஆசிரியர் அய்யா அவர்களே! இந்த நிகழ்விலேயே பங்குகொண்டு மிகச் சிறப்பான ஓர் உரையை ஆற்றி அமர்ந்திருக்கின்ற, நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணைப் பொதுச் செயலாளருமான அருமைக்குரிய சகோதரர் ஆ.இராசா அவர்களே! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று, இந்த நிகழ்விலே மிகச் சிறப்பான உரையை ஆற்றி அமர்ந்திருக்கின்ற அருமைச் சகோதரர், தோழர் மு. வீரபாண்டியன் அவர்களே! மேடையிலே அமர்ந்திருக்கின்ற, திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கின்ற அருமை சகோதரர்களே! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா விலே, மிகத் திரளாக பங்கு கொண்டிருக்கின்ற கண்ணியத்திற்குரிய தாய்மார்களே! பெரியோர்களே! அன்பிற்கினிய சகோதரர்களே! சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு நிறைவு விழாவை, இங்கே மறைமலை நகரிலே நடத்திக் கொண்டிருக்கின்றோம். தமிழ்நாட்டினுடைய  அரசியல் திசைவழிப் போக்கை மாற்றியது சுயமரி யாதை இயக்கம் என்று நான் சொன்னால் அது மிகை யாகாது. தந்தை பெரியார் அவர்கள், ‘‘குடிஅரசு” என்ற பெயரிலே ஒரு பத்திரிகையைத் தொடங்கி, அதனு டைய தொடக்கமாகவும் இந்த சுயமரியாதை இயக்கம் அமைந்திருக்கின்றது என்று சொல்வது பொருத்தமானது.

இங்கே இந்த நிகழ்விலே பங்குகொண்டிருக்கக் கூடிய தலைவர்கள், சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி, அதனுடைய சிறப்பான பணிகளைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஒரு மூத்த எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை அவர்கள், வ.கீதா அவர்களுடன் இணைந்து, எழுதிய ஒரு நூலிலிருந்து நான்  சில மேற்கோள்களை இங்கே எடுத்துச் சொல்வது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

 எஸ்.வி.ராஜதுரையும் – கீதாவும்!

‘‘Towards a Non-Brahmin Millennium: From Iyothee Thass to Periyar”  என்ற அந்த நூலிலே
எஸ்.வி.ராஜதுரையும் – கீதாவும் என்ன சொல்கிறார்கள் என்றால், அந்த நூலினுடைய தலைப்பைத் தமி ழிலே தரவேண்டும் என்றால், ‘பார்ப்பனரல்லாத மில்லினி யத்தை நோக்கி அயோத்திதாஸ் முதல் பெரியார் வரை’ என்ற அந்த புத்தகத்தில்,

‘‘சுயமரியாதை இயக்கம் ஒரு சித்தாந்தத் தூண்டுதலாக ஜாதிகள் மற்றும் வகுப்புகளைக் கடந்து ஆண்களையும், பெண்களையும் தீவிரமாக அணி திரட்டுவதாக; கிளர்ச்சியாக; எதிர்ப்புச் செயலாக; துணிச்சலாக வெடித்த; சமூகத்தின் ஒரு பார்வையாக; அனைத்து விசயங்களும் சந்தேகம் மற்றும் விசாரணைக்கு உட்பட்டதுதான்; அனைத்து விசயங்களும் எவ்வளவு ‘புனித’மானவை மற்றும் மீறமுடியாததாக இருந்தாலும், இடைவிடாமல் விசாரிக்கப்பட்ட போது, பெண்கள் குடும்பத்தின் கூற்றுகளையும், சமூகத்தின் பிணைப்புகளையும் புறக்கணித்த போது, இளைஞர்கள் விருப்பத்துடன் தனிப்பட்ட செல்வங்களைத் துறந்து, பெரியவர்களை மீறும் போது, இதுவரை வெறுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட ஏராளமான மக்கள் அதுவரை வெறும் தொண்டு, பரிதாபம் மற்றும் தந்தை பெரியார் வழி கருணை ஆகியவற்றின் பொருள்களாக, எல்லா வற்றுக்கும் மேலாக அவர்களின் உலகத்தைத் தலை கீழாக இயக்க உறுதி பூண்டிருந்த ஒரு போராட்டத்தின் கதாநாயகர்களாக நடிக்கக் கேட்கப்பட்ட ஏற்பட்ட ஒரு காலம்’’ என்று எஸ்.வி.ராஜதுரையும், கீதாவும் சொல்கிறார்கள்.

யாரும் கேள்வி கேட்காத விசயங்களை எல்லாம் கேள்வி கேட்கத் தூண்டியது சுயமரியாதை இயக்கம்!

இது மிக ரத்தினச் சுருக்கமாக, ‘‘சுயமரியாதை இயக்கம்” தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட மாற்றத்தை கொண்டு வந்தது என்பதை மிகத் தெளிவாகச் சொல்கி றது. அதுவரை யாரும் கேள்வி கேட்காத விசயங்களை எல்லாம் கேள்வி கேட்கத் தூண்டியது சுயமரியாதை இயக்கம்! பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்தது சுயமரியாதை இயக்கம்! பெண்களுக்குச் சொத்திலும் பங்குண்டு என்று பிரகடனப்படுத்தி அதை அமல்படுத்தியது சுயமரியாதை இயக்கம்! இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

கைம்பெண் மறுமணத்தை அங்கீகரித்த; அதை ஊக்குவித்த; ஓர் இயக்கம் சுயமரியாதை இயக்கம்!

ராஜதுரையும், கீதாவும் மட்டுமல்ல; இன்னொரு ஆசிரியர் அவர், முனைவர் மங்கள முருகேசன். அவர் எழுதிய ஒரு நூல். ‘‘Self Respect Movement in Tamilnadu 1920 to 1940.’’ இந்த நூலிலும் இந்த சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு மத்தியிலே ஒரு சுய பெருமிதத்தை ஏற்படுத்தியது! அது இங்கே மிகப்பெரிய அளவிலே கோலோச்சிய ஒரு ஜாதியின் ஆதிக்கத்தை சுக்கு நூறாக உடைத்தது! மிக முக்கியமாக, கைம்பெண்கள் மறுமணம் என்பது பேசப்படாத ஒரு பொருளாக இருந்த தமிழ்நாட்டிலே, கைம்பெண் மறுமணத்தை அங்கீகரித்த; அதை ஊக்குவித்த; ஓர் இயக்கமாக இந்த Self Respect Movement என்று சொல்லப்படக்கூடிய சுயமரியாதை இயக்கம் அமைந்தது!

பெண்களுக்கு சொத்துரிமையை அளிக்க வேண்டுமென்ற கருத்தியலை பரவலாக்கியது!

1400 ஆண்டுகளுக்கு முன்னால் நபிகளார், கைம்பெண்கள்  மறுமணத்தை மிகப்பெரிய அள விலே ஆதரித்தார்கள்! பிறந்த குழந்தை, பெண் குழந்தை என்றால் அதை புதைத்த சமூகத்தில், பெண் குழந்தையை பெற்றெடுத்தவர் மிக உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடியவர் என்று அறிவுறுத்திச் சொன்னார்கள். அதேபோன்று இந்த சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியாரால் வழிநடத்தப்பட்டு தமிழ்நாட்டிலே அது வரை Vido Marriage என்று சொல்லக்கூடிய கைம்பெண் மறுமணம் இல்லாத ஒரு சூழலிலே, அந்த கைம்பெண் மறுமணத்தை ஊக்குவித்தது! Right to divorce. அதாவது, மணவிலக்கு செய்யக்கூடிய உரிமை. அது மறுக்கப்பட்ட ஒரு சூழலில், சுயமரியாதை இயக்கம் Right to divorce என்று சொல்லக்கூடிய மணவிலக்கு செய்வதற்கான உரிமையை பெற்றுத் தந்தது! அதைவிட மிக முக்கியமாக பெண்களுக்கு சொத்துரிமையை அளிக்க வேண்டுமென்ற கருத்தியலை பரவலாக்கியது சுயமரியாதை இயக்கம் என்று சொன்னால் அது மிகையாகாது.

 மறுக்க முடியாத ஓர் உண்மை!

இவற்றையெல்லாம் ஒரு சித்தாந்த ரீதியாக, ஒரு தத்துவ ரீதியாக, ஒரு கருத்துப் பரவலாக, இருந்த நிலையிலே இந்த சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து அதிலே பயணித்தவர்கள், பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, அந்தக் கட்சி தமிழ்நாட்டிலே ஆட்சிக்கு வந்து, பெரியார் எத்தகைய சுயமரியாதைக் கருத்துகளை எல்லாம் சொன்னார்களோ, அதை அவருடைய வாழும் காலத்திலேயே சட்டமாக்கி; நடைமுறைப்படுத்திய ஒரு சிறப்பு தி.மு.க.வுக்கு என்றால், அதன் பின்னணியிலே இந்த சுயமரியாதை இயக்கம் இருக்கின்றது என்பது நாம் மறுக்க முடியாத ஓர் உண்மையாக இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் பாரபட்சங்கள் பல்வேறு வகையிலே வந்து கொண்டிருக்கின்றது. உதாரணமாக நான் சொல்ல வேண்டுமென்றால், Digital inequality என்று சொல்கிறார்கள். இந்த Digital inequality என்றால், இன்று எல்லாமே இணைய வழியாக மாறிவிட்ட சூழலிலே, இணைய வழியிலேயே எல்லாம் செய்யலாம் என்ற ஒரு நிலையிலே, இன்றைக்கு இணைய வழி வசதி இல்லாத ஒரு நிலை பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு சூழலில், சுயமரியாதை இயக்கம் இந்த Digital inequality யைக் களைவதற்கான ஒரு மிகப்பெரிய பணியையும் செய்ய வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேபோல Environmental Justice  சுற்றுச்சூழல் நீதி. சுற்றுச்சூழல் வளர்ச்சி என்ற பெயரில், எல்லா வகையிலேயும் சீர்குலைக்கலாம் என்ற ஒரு நிலை, அனைத்து மக்களுக்கும், சமூகத்துக்கும் கேடு விளை விக்கக்கூடியது. சுயமரியாதை இயக்கம் நிச்சயமாக இந்த Environmental Justice என்று சொல்லக்கூடிய, இந்த சுற்றுச்சூழல் உரிமைகளுக்காகவும் இன்னும் பல முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் நின்று கொண்டு இருக்கின்றோம்.

சுயமரியாதை இயக்கத்தினுடைய
மிகப்பெரிய பங்களிப்பு!

அதே போல தொழிலாளர்களுடைய உரிமைகள், இன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு, மூன்று தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்தபோது, அதற்கு எதிராக நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், அதை ஏற்கமாட்டோம் என்ற சட்டத்தை இயற்றினார்கள். இருந்தாலும் கூட, இந்தத் தொழிலாளர் உரிமைகளை எல்லாம் பேணி காப்பதும், நிச்சயமாக சுயமரியாதை இயக்கத்தினுடைய மிகப்பெரிய பங்களிப்பு என்று நான் கருதுகிறேன்.

எனவே, பெரியார் அவர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1925 இல், இந்த சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்கள். இன்று பலர் பேசலாம். திராவிடர் கழகத்தைப் பற்றி; பெரியாரைப் பற்றியெல்லாம் பலர் – தாங்கள் பட்டதாரிகளாக இருக்கின்றோம் – இந்த அளவுக்கு மேடையில் ஏறி பேசுகின்றோம் என்றால், அது பெரியாருடைய சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கத்தினால்தான் என்பதை மறந்துவிட்டு, வலம் வந்து கொண்டிருக்கக் கூடியவர்களை எல்லாம் பார்க்கின்றோம்.

பெரியாருடைய பாதையிலே நடைபோடுவோம்!

இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களு டைய அந்தக் கோட்பாடுகளை எல்லாம் இன்னும் பரவலாக, விரிவாக, மக்கள் மத்தியிலே எடுத்துச் சொல்லக்கூடிய கடமையும், பொறுப்பும் நம்முடைய ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அதை சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடக்கூடிய இந்தத் தருணத்தில் ஓர் உறுதிமொழியாக நாம் ஏற்றுக்கொண்டு பெரியாருடைய பாதையிலே நடைபோடுவோமாக என்று சொல்லி விடைபெறுகின்றேன். நன்றி!

– இவ்வாறு  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்து ரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *