சென்னை, மே 17- தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில், நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராகவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை செயலாளரான அன்னீ மேரி ஸ்வர்னா அரியலூர் ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரி வரி புலனாய்வு பிரிவு இணை ஆணையர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா நாமக்கல் ஆட்சியராகவும், நில ஆவணங்கள் மற்றும் கணக்கெடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநர் கலைச்செல்வி மோகன் காஞ்சிபுரம் ஆட்சி யராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேசன் மேலாண்மை இயக்குநர் கமல் கிஷோர் செங்கல்பட்டு ஆட்சியராகவும், சென்னை வணிக வரி நிர்வாகப் பிரிவு இணை ஆணையர் சங்கீதா மதுரை ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வழிகாட்டுதல் துறை செயல் இயக்குநர் ஆஷா அஜித் சிவகங்கை ஆட்சியராகவும், நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ராகுல்நாத் தூத்துக்குடி ஆட்சியராகவும், சேலம் மாநகராட்சி ஆணையர் கிருஸ்துராஜ் திருப்பூர் ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் செயல் இயக்குநர் ராஜ கோபால் சுங்கரா ஈரோடு ஆட்சியராகவும், சேலம் சாகோசேர்வ் கூட்டுறவு சொசைட்டி மேலாண்மை இயக்குநர் பூங்கொடி திண்டுக்கல் ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நாகை ஆட்சியராகவும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இணை மேலாண் இயக்குநர் சராயு கிருஷ்ணகிரி ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விதிகள் மீறலை கண்காணிக்க காவல் துறையினருக்கு நவீன வசதி
சென்னை, மே 17- சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில், ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படி, புதிய நடைமுறைகளை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவலர்கள், தங்களது உடலில் கேமராவை பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும், போக்குவரத்து காவல் வாகனங்களின் டாஷ்போர்டில் பொருத்தும் வகையிலான கேமராக்கள் மூலமும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தானியங்கி வண்டி எண் அறியும் தொழில்நுட்பம், வாகனங்களில் உள்ள எடையை அறியும் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதே போன்று, போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணித்து அபராதம் விதிக்க புதிய நடைமுறை வழிவகை செய்கிறது. மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது நேரில் வழங்கப்படும் அபராதச் சீட்டைப் பெற்றுக்கொண்டு இணையதளத்திலோ அல்லது போக்குவரத்து காவல் நிலையங்களிலோ அபராதத் தொகையை செலுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.