சென்னை, அக்.25 தெற்கு ரயில்வேயின் முக்கிய அடித்தள மேம்பாட்டு முயற்சிகளில் ஒன்றாக தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் தடம் அமைக்கும் திட்டம் ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலுடன் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 30.02 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த திட்டம், ரூ.757.18 கோடி மதிப்பில் உருவாக்கப்படுகிறது. திட்டம் நிறைவு பெற்றால், புறநகர் ரயில்கள் மற்றும் தென் மாவட்ட விரைவு ரயில்களுக்கு தனித்தனி வழித்தடம் கிடைக்கும் என்பதால், தென்னிந்திய ரயில் போக்குவரத்து வலையமைப்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கும்.
போதாத நிலை
சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் புறநகர் ரயில் சேவை, மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் பாதையானது, தினசரி ஆயிரக்கணக்கான பணி யாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழி லாளர்கள் பயன்படுத்தும் முக்கிய வழித்தடமாகும். தற்போதைய மூன்று தடங்களில் இரண்டு மின்சார புறநகர் ரயில்களுக்கு, மற்றொன்று விரைவு மற்றும் சரக்கு ரயில்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், மூன்று தடங்கள் போதாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நெரிசல் மற்றும் தாமத பிரச்சினைகளை சரி செய்வதற்காக நான்காவது வழித்தடம் அமைக்கப்படுகிறது.
புதிய வழித்தடம் உருவாகும் பகுதிகள் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர் வழியாக செங்கல்பட்டு வரை தொடரும். பணிகள் ஆரம்பமானதும் சில நிலையங்கள் தற்காலிக மாற்றம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், மாற்று வழித்தடங்கள் மற்றும் தற்காலிக நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்படும்.
தாமதமின்றி ரயில்கள்
திட்டத்தின் இறுதி நிலை இட ஆய்வு, மண் பரிசோதனை, பாலங்கள் மற்றும் மின்சார இணைப்புகள் போன்ற தொழில்நுட்ப மதிப்பீடுகள் முடிவடைந்துள்ளன. மேலும் புதிய தடம், 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடிய ரயில்களை இயக்கும் திறன் கொண்டதாக வடிவமைக் கப்பட உள்ளது. இதற்காக மேம் பட்ட சிக்னல் அமைப்புகள், மின் சார இணைப்புகள் மற்றும் தட அடித்தள வலுப்படுத்தும் பணிகள் செய்யப்படும்.
ரூ.757.18 கோடி மதிப்பில் திட்டம்
ரூ.757.18 கோடி மதிப்பில் திட்ட மிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகப் பெரிய முயற்சியாகக் கருதப்படுகிறது. மின்சார புறநகர் ரயில்கள் அதிகரிக்கும் நிலையில், இந்தப் புதிய வழித்தடம் எதிர்கால தேவைகளையும் சமாளிக்கக்கூடியதாக வடிவமைக் கப்படுகிறது. மேலும், புதிய ரயில் பாதை அமைப்பில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை அம்சங்களும் இணைக்கப் படவுள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
