புதுடில்லி, அக்.25- 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுடன் தொடர்புடைய சொத்து விற்பனை தொடர்பாக உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.
மைனர்களின்
பெயரில் மனை
கருநாடக மாநிலத்தை சேர்ந்த ருத்ரப்பா என்பவர் கடந்த 1971-ஆம் ஆண்டு, 18 வயதுக்குகீழ் (மைனர்) உள்ள தனது 3 மகன்களின் பெயரில் 2 மனைகளை வாங்கி இருந்தார்.
பின்னர் மகன்கள் 18 வயதை எட்டுவதற்கு முன்னரே அந்த சொத்துகளை 3-ஆம் நபருக்கு விற் பனை செய்தார். இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் அனு மதியும் பெறவில்லை.
ஆனால் மகன்கள் வளர்ந்த பிறகு, அவர்கள் தங்கள் தாயுடன் சேர்ந்து 2 மனைகளையும் மற்றொருவருக்கு விற்பனை செய்தனர். இதனால் இந்த சொத்துகள் தொடர்பாக கருநாடக நீதிமன்றங்களில் சிவில் வழக்கு நடந்தது. இதில் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவு பிறப் பித்த உயர்நீதிமன்றம் ருத்ரப்பாவின் மகன்கள் தங்கள் தந்தையின் விற்பனையை ரத்து செய்ய நீதிமன்றத்தில் முறைப்படி வழக்கு தாக்கல் செய்யாததால் ருத்ரப்பா செய்த விற்பனை செல்லும் என அறிவித்தது.
நீதிபதிகள் உத்தரவு
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இதை நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் பிரசன்னா வரலே அமர்வு விசா ரித்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் புதிய உத்தரவு ஒன்றை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
அதாவது 18 வயதுக்கு உட் பட்டவர்களுடன் தொடர்புடைய சொத்து விற்பனையை ரத்து செய்வதற்கு வழக்கு தொடர வேண்டியது கட்டாயம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறியதாவது:-
இந்து சிறுபான்மை மற்றும் பாதுகாவலர் சட்டப்பிரிவு 7 மற்றும் 8-இன்படி, ஒருமைனரின் இயற்கையான பாதுகாவலரால், மைனரின் அசையாச் சொத்தின் எந்தப் பகுதியையும் அடமானம் வைக்கவோ, விற்கவோ, பரிசளிக் கவோ அல்லது வேறுவிதமாக மாற்றவோ முடியாது.
செல்லாத பரிவர்த்தனை
மேலும் அத்தகைய சொத்தின் எந்தப் பகுதியையும் அய்ந்து ஆண்டுகளுக்கு மேல் அல்லது நீதிமன்ற முன் அனுமதியின்றி மைனர் மேஜர் ஆகும் தேதிக்கு அப்பால் ஒரு ஆண்டிற்கும் மேலாக நீட்டிக்கவோ குத்தகைக்கு விடவோ சட்டத்தில் எந்த அதி காரமும் இல்லை.
எனவே மைனர் ஒருவரின் சொத்து மாற்றத்துக்கு நீதிமன்ற அனுமதி முக்கியமாகும். அவ்வாறு 18 வயதுக்கு உட்பட்டவருடன் தொடர்புடைய சொத்தை நீதி மன்ற அனுமதியின்றி விற்பனை செய்தது செல்லாத பரிவர்த்தனை ஆகும்.
அவரது பாதுகாவலரால் செயல்படுத்தப்பட்ட இந்த செல்லாத பரிவர்த்தனையை, அந்த மைனர் 18 வயதை அடைந்தவுடன் ரத்து செய்ய முடியும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.
