தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் – எச்சரிக்கை

2 Min Read

தமிழ்நாட்டில் ‘SIR’ எனும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தகவலை தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளது. இந்த சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பீகாரில் மேற்கொண்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ளது.

பீகாரில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததற்கான காரணங்கள் ஏராளம் உண்டு.

பீகாரில் பலர் புலம்பெயர் தொழிலாளர்களாக இருப்ப தால், அவர்களால் உரிய நேரத்தில் ஆவணங் களைச் சமர்ப்பிக்க முடியாது என்ற அச்சம் இருந்தது.

‘ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க முடியாது’ என்ற தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடும் எதிர்ப்புக்கு ஒரு முக்கிய காரணம்.

புதிய கடுமையான விதிகளின்படி ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், பலரது பெயர்கள் வாக்காளர்ப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்ற அச்சம் எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்தது.

காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தத் திருத்தத்தை எதிர்த்ததோடு, தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுத்தன. எனினும், உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.

தமிழ்நாடு மட்டுமின்றி, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த நடவடிக்கையால், தமிழ்நாட்டிலும் பெரும் எதிர்ப்பும், விவாதமும் எழுந்துள்ளன.

எதிர்ப்புக்கும் அச்சத்திற்கும்  காரணம் – உயிருடன் இருக்கும் வாக்காளர்களை இறந்தவர்களின் பட்டியலில் சேர்த்து நீக்குவது; முகவரி மாற்றம் பெற்றவர்களை நீக்குவது; வீடுகளே இல்லாத இடத்தில் நூற்றுக்கணக்கானவர்களை பட்டியலில் இணைப்பது – போன்ற தில்லுமுல்லுகள் ‘சிறப்புத் தீவிர வாக்காளர்த் திருத்தம்’ என்ற பெயரில் பீகாரில் கற்பனைக்கே எட்டாத வகையில் நடந்தேறி உள்ளன.

பீகார் வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால்  சிறப்புத் தீவிரத் திருத்தம் நடத்தப்பட்டது – இது 2003ஆம் ஆண்டுக்குப்பின் நடத்தப்பட்ட ஒன்றாகும். இந்தத் திருத்தத்தின்போது 7.89 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

அது மட்டுமின்றி, போலி வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. ஒரே வீட்டில் 509 வாக்காளர்களின் பெயர்கள், சில இடங்களில் ‘வீட்டு எண்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த எண்ணில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இப்படி ஏகப்பட்ட தில்லுமுல்லுகள்! சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்ற தகவலைக் கேட்டாலே அச்சப்பட வேண்டியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ‘‘இது சீர்திருத்தம் அல்ல; முடிவுகளை வடிவமைக்கும் முயற்சி’’ என்று கூறியதில் நியாயம் இருக்கிறது. பீகாரில் நடைபெற்றதைப் பார்க்கும்போது – இந்த அச்சமும் அய்யமும் வலுப்படத்தான் செய்கிறது.

ஒன்றிய பிஜேபி ஆட்சியில் ‘தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்புகளை’ எல்லாம் தன் அதிகாரக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தெரிந்ததே!

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடத்தப்பட விருக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *