திருவாங்கூர் சமஸ்தானம் (7) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’-மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

8 Min Read

திருவாங்கூர் நாட்டில் நடந்த மிகக் கேவலமான, இழிவான, காட்டு மிராண்டித்தனமான கொடுமை பெண்கள் மேல் தொடுக்கப்பட்டக் கொடுமைகள்தான். நம்பூதிரி பார்ப்பனர்கள் உண்டாக்கிய இந்த பாலியல் சட்டங்களை அரசர்களும் அமைதி யாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நம்பூதிரிகளின் அடிவருடிகளான நாயர்கள் இந்த சட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தனர். கீழ்ஜாதிப் பெண்கள் யாராவது இந்த பாலியல் சட்டங்களை மீறினால், மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

ஆண்களைப் போலவே கீழ்ஜாதிக்காரர்களின் பெண்கள் ஆடைக் கட்டுப்பாடுகளோடுதான் வாழ வேண்டியிருந்தது. பெண்களும், ஆண்களைப் போல் முட்டுக்கு மேலும், இடை வரைதான ஆடை அணிய முடியும். மேலாடை அணியக் கூடாது. மார்பை மறைக்கும் ஆடை அணிந்தால், அது நம்பூதிரிகளை அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டு தண்டிக்கப்பட்டனர். நம்பூதிரி நாயர்கள் பெண்கள் தவிர, மற்ற அனைத்து ஜாதிப்பெண்களும் மேலாடை அணியத் தடை இருந்தது. கீழ் ஜாதிகளான 18 ஜாதிகள் பெண்கள் (இவர்கள்தான் 90 சதவீத மக்கள்) யாருமே மேலாடை அணியாமல் திறந்த மார்புகளோடுதான் வாழவேண்டிய கொடுமை அந்த நாட்டில் நிலவியது. ஆரம்பக் கட்டங்களில் நாயர் பெண்களும் இந்தக் கொடுமைக்கு ஆளானவர்களே. நாளடைவில் நம்பூதிரி கூட்டுறவால் மேலாடை அணியும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. தங்க நகை கூட அவர்கள் அணிய முடியாத நிலையே இருந்தது. மெட்ராஸ் பிரசிடென்சி கவர்னர் சர் தாமஸ் மன்றோதான் நாயர்கள் தங்க நகை அணியவும், மேலாடை அணியும் உரிமையைப் பெற்றுத்தந்தார். நாயர்களோடு, நம்பூதிரி ஆண்கள் தொடர்பில் இருந்ததால், நாயர்கள் பெண்கள் மேலாடை அணிவதை தடுக்கவில்லை. மேலாடை அணியும் உரிமை இல்லாமல் இருந்த அதே பெண்களின் கணவன்மார்களான நாயர் ஆண்கள், தங்களுக்குக் கீழான அனைத்து ஜாதியினரும், மேலாடை அணியக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதித்தும், அப்படி அணிந்தால் தண்டிக்கவும் செய்தனர். (Ref: ‘‘நாயர்கள் வரலாறு’’ wikipedia)

ஆக, கேரளத்துப் பெண்கள் மேல் ஜாதி நம்பூதிரி, நாயர்கள் கொடுமையினால் அரை நிர்வாணமாகவே இருந்தனர்.இந்த நாயர், நம்பூதிரி பெண்கள் தவிர மற்ற கீழ் ஜாதிப் பெண்கள் அனைவரும் இடைக்குக் கீழும் முட்டிக்கு மேலும், “கீழ் முண்டு” என்ற பெயருடைய ஆடையைத்தான் அணிய வேண்டும் இந்த ஆடைக் கட்டுப்பாடுகள் கீழ்ஜாதி மக்களிடையே நாளடைவில் போராட்டங்களாக வெடித்தது. ஆரம்பத்தில் சிறு சிறு சலப்பாக இருந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும் போராட்டமாக மாறியது. திருவாங்கூர் நாட்டோடு இணைந்திருந்த பகுதியான நாகர்கோயில் அருகே இருந்த தாளக்குடி கிராமத்தைச்சேர்ந்த ‘சாம்பவர்’ என்ற கீழ்ஜாதியைச் சேர்ந்த ‘மாடத்தி என்ற கர்ப்பிணிப் பெண் ஒருநாள் தன் குடிசையில் மேலாடை அணிந்து இருந் தாராம். அதுசமயம் அந்த வழிபோன நாயர் அதைப் பார்த்து விட்டானாம். உடனே அந்தப் பெண்ணை இழுத்து வந்து, ஊரின் நடுவில் நிறுத்தி வைத்து மேலாடையைக் கிழித்து, அந்த பெண்ணை அவமானப்படுத்தினர். அந்தப் பெண் அப்பொழுது கர்ப்பமாக இருந்துள்ளார். மேலாடைக் கிழித்ததோடு நில்லாமல், அப்படி ஆடை அணிந்த குற்றத்திற்காக, வயலில் மாட்டிற்குப் பதில் கலப்பையைக் கட்டி ஏர் உழ வைத்து அந்த சுமை தாங்காமல் வயலிலேயே அந்தப் பெண் கீழே விழுந்து இறந்து விட்டார்.

(Ref: ‘‘Liberation of the Oppressed, A continuous struggle” case study since 1822 A.D.)

திருவாங்கூர் நாட்டைச் சேர்ந்த “கொட்டாரம்’ (இப்பொழுது கன்னியாகுமரி மாவட்டம்) என்ற ஊரில் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தாழ்ந்த ஜாதிப் பெண்ணான இசக்கி” என்ற பெண், திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது மேலாடை அணிந்து விட்டாராம். அது மட்டுமின்றி ‘‘தாலியிறை” என்ற வரியைக் கொடுக்கவில்லையாம். அந்தப் பெண்ணை திருமணத்தின் போதே மேல் ஜாதிக்காரர்கள், இழுத்து வந்து பொது இடத்தில் நிறுத்தி மேலாடைகளை கிழித்து எறிந்து, தாலி- -யை அறுத்து எறிந்து, அடித்தே கொல்லப்பட்டார். அந்த இடம் “தாலியறுத்தான் சந்தை” என்றே அழைக்கப்படுகிறது . (Ref: ‘‘Liberation of the oppressed, A continuous struggle”. case study since 1822 A.D)

கீழ்ஜாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிந்தார்கள் என்ற குற்றத்திற்காக, மேலாடைகள் கிழிக்கப்பட்டு, நாள் முழுவதும் வெறும் காலுடன் சுடு மணலில் நிற்க வைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். (Ref: ‘‘தன்மானத் தமிழன்’’ கூகுள்)

திருவாங்கூர் நாட்டில் கிறிஸ்துவ மிஷனரிகள் அய்ரோப்பி யர்களால் துவக்கப்பட்டன. அந்த மிஷனரிகளைச் சேர்ந்த அய்ரோப்பிய பெண்கள் முழு ஆடையுடன் இருந்தனர். அதைப் பார்த்த நாட்டின் கீழ் ஜாதிப் பெண்கள் அந்த மிஷனரிகளில் சேர்ந்து, மேலாடை அணியும் உரிமைப் பெறலாம் என்ற முடிவுடன் அந்த மிஷனரிகளில் சேரத் துவங்கினர் (கேரளாவில், கிறிஸ்துவ மதம் பரவ இதுவும் ஒரு காரணம்!) கல்குளம் என்ற ஊரில் இருந்த மிஷனரியைச் சேர்ந்த ‘‘மீட்’’ என்ற பாதிரியார் தன் மிஷனரியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியலாம் என்று அறிவித்தார். அதனால் பலபெண்கள் அந்த மிஷனரியில் சேர்ந்து, மேலாடை அணியத் துவங்கினர். இதுமேல் ஜாதிக்காரர்களை ஆத்திரப்பட வைத்தது. 1822 ஆம் ஆண்டு கல்குளம், இரணியல் போன்ற இடங்களில் இதனால் பெரும் கலவரம் வெடித்தது.

மிஷனரியைச் சேர்ந்த நம் பெண்களின் மேலாடைகள் பொது வெளியில் கிழித்தெறியப்பட்டன. மிஷனரிகள் தாக்கப்பட்டன. மிஷனரியைச் சேர்ந்த மீட் பாதிரியார் தாக்கப்பட்டார்.அப்பொழுது கர்னல் நேவல் என்ற ஆங்கிலேயர் திகுவாங் -கூர் நாட்டின் பிரதிநிதியாக இருந்தார். பாதிரியார் மீட் அவரிடம் இந்த கலவரங்கள் பற்றி புகார் கொடுத்தார். கர்னல் நேவல் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் அதை விசாரிக்க ஆணையிட்டார். 1823 ஆம் ஆண்டு பத்மநாபபுரம் நீதிமன்றம் மிஷனரியைச் சேர்ந்த சமஸ்தானத்துப் பெண்கள் மேலாடை அணியலாம் என்து உத்தரவிட்டது. இந்த மிஷனரி பெண்கள்” குப்பாயம்” என்று சொல்லப்படுகின்ற” மேல் சட்டை” போன்ற ஆடையை அணியலாம் ஆனால் மேல் ஜாதியினர் போல் ஆடை இருக்கக் கூடாது என்றும் பத்மநாபபுரம் நீதி மன்றம் ஆணையிட்டது. மிஷனரியைச் சேர்ந்த கீழ்ஜாதிப் பெண்கள் மட்டுமே இப்படிக் குப்பாயம் அணியலாம் என்றும் அந்த ஆணை விளக்கம் கூறியது. இந்த ஆணை கீழ் ஜாதிப் பெண்களை முழு அளவில் திருப்தி அைடய வைக்கவில்லையானாலும், அரை நிர்வாணமாக அலையும் நிலையிலிருந்து, மானத்தைக் காக்க, ஏதோ ஒரு வகையில் உதவுகிறது என்ற நிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கீழ்ஜாதிப் பெண்கள் மேலாடை அணியும் உரிமை கிடைக்கிறது என்ற காரணத்தால் பெருமளவில் மிஷனரிகளில் சேர்ந்தனர். (Ref: M.A.Augur, ‘Church History of Travancore – 1902)

‘‘குப்பாயம்” ஆடை அணிந்த மிஷனரி பெண்கள், நாள டைவில் அய்ரோப்பிய மறைப் பணியாளர்கள் போல் ஆடை அணிந்து வலம் வரத்   தொடங்கினர். இதைப்பார்த்த கீழ்ஜாதி இந்துப் பெண்களும் துண்டுகளைப் போர்த்தி, மார்புகளை மறைக்கத் துவங்கி, நாளடைவில் குப்பாயங்களை அணியத் துவங்கினர். நம்பூதிரிகள் முன்பு மார்புகளை மறைப்பது பெருங்குற்றமாக திருவாங்கூர் நாட்டின் ஜாதிய சட்டங்கள் இருந்த காரணத்தால் நம்பூதிரிகள் வெகுண்டு எழுந்தனர்.நாயர்களைத் தூண்டிவிட்டு மேலாடை அணிந்தவர்களின் ஆடைகளைக் கிழித்தெறிய ஆணையிட்டனர். இது திருவாங்கூர் நாட்டில் பல இடங்களில் பெரும் கலவரத்தில் முடிந்தது. நம்பூதிரிகளின் உத்தரவை ஏற்று நாயர்கள் பல இடங்களில் பெண்களின் மேலாடைகள் அணிந்து சந்தைகளுக்கு, கடைவீதிகளுக்கு வந்தவர்களின் ஆடைகளை கிழித்து எறிந்தனர். இதை நாடார்கள், ஈழவர்கள் போன்ற கீழ்ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பை தெரிவிக்க வாக்குவாதத்தில் துவங்கிய நிகழ்வு பெரும் கலவரத்தில் முடிந்தது. நாயர்களுக்கும், நாடார்களுக்கும் இடையே கலவரங்களாகத் துவங்கிய கலவரம் பெரும் சண்டையாக மாறியது. இந்த சண்டை நெய்யூர், ஆத்தூர், திற்பரப்பு, கண்ணனூர், அருமனை, உடையார்விளை புலிப்புனம் என்று வேகமாகப் பரவியது . சண்டையினால் இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பலர் காயம்பட்டனர் பல இடங்களில் பரவிய கலவரம் கோட்டாறில் பெரும் சண்டையாகவே மாறியது. கோட்டாறில் பெண்கள் பெருமளவு கலவரத்தில் ஈடுபட்டனர். கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பல பெண்கள் இந்தக் கலவரத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக தங்கள் மானத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண் டிருந்த இந்துமதப் பெண்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கீழ் ஜாதிக்காரர்கள் ஆண்கள், பெண்கள் என்று அனைத்து மக்களும் கலந்து கொண்ட போராட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் பரவியதாலும், வேறு வழியின்றி அரசு மேலாடைத் தொடர்பான ஆணை ஒன்றை வெளியிட்டது. 26.7.1879 வெளியிடப்பட்ட அந்த ஆணைப்படி “அனைத்து சமய நாடார்  மற்றும் சாணார் பெண்கள்”குப்பாயமோ, ‘‘மீனவப் பெண்கள் அணியும்’’ கட்டிச் சேலையோ’ (Coarse) உடுத்தலாம். ஆனால் உயர் ஜாதிப் பெண்கள்  (நம்பூதிரி) அணியும் ஆடைகளைப் போன்ற உடைகளை அணியக் கூடாது. அப்படி கீழ் ஜாதிப் பெண்கள் உடை அணிதல் குற்றமாகக் கருதப்படும். குப்பாயமோ, கட்டிச் சேலை தவிர வேறு எந்த விதத் துணிகளைப் பயன்படுத்தியோ மார்புகளை மறைக்கத் தடை இல்லை” என்ற நிலை ஏற்பட்டது. அதற்கு அப்புறம் ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கும், பல உயிர்கள் இழப்பிற்கும் பின் திருவாங்கூர் நாட்டுப் பெண்கள் மேலாடை அணியும் உரிமை பெற்றனர் ( Ref :’ proclamation from 1858 -1874 A.D.) ‘சமயத் தொண்டர்களும், சமுதாய மறுமலர்ச்சியும் 1999’. P15) பெரும் போராட்டத்திற்குப் பின் சாணாரும், மற்ற சூத்திரப் பெண்களும் மேலாடை அணியும் போரில் வென்றாலும், தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு அந்த உரிமை கிடைக்கவில்லை, அவர்கள் அந்த உரிமை வேண்டி கிறிஸ்துவ மிஷனர்களை அணுகினர். கிறிஸ்துவ மிஷனரிகள், மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னருக்கு தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு மேலாடை உரிமை வழங்கவேண்டுகோள் விடுத்தன. மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் சார்லஸ் ஸ்ெடர்விலின், திருவாங்கூர் பிரதிநிதி மால்ட்பீயை, இந் தொடர்பாக மன்னர் ஆயில்யம் திருநாள் இரவிவர்மாவை சந்தித்து பேச ஆணையிட்டார்.முதலில் தயங்கிய மன்னர், வேறு வழியின்றி இறுதியில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் நீதிவழங்க ஒத்துக் கொண்டார். அதன்படி 1865 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தாழ்த்தப்பட்ட பெண்களும் குப்பாயம் போன்ற மேலாடை அணியும் உரிமைப் பெற்றனர். (Ref : ‘‘பண்பாட்டு வேர்களைத் தேடி’’ பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரி, நாட்டார் வழக்காற்றியல் மய்யம்)

நம்பூதிரி, நாயர் பெண்கள் தவிர மற்ற அனைத்து கீழ்ஜாதி, தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பை மறைப்பதையே ஒரு குற்றமாக நிறுவப்பட்டிருந்த திருவாங்கூர் நாட்டில் தங்கள் மானத்தைக் காக்க, மேலாடை அணியும் உரிமைக்காக தொடர் போராட்டம் நடத்தி, இறுதியில் வென்றனர். ஜாதி வெறியும், நம்பூதிரி பார்ப்பனர்களின் மேலாண்மையும், பொம்மை அரசர்களின் அரசாட்சியும் இந்தக் காட்டு மிராண்டித் தனமான கொடுமையை பெரும்பாலான  மக்கள் மீது திணித்தன. ‘‘கொத்தன்விளை” என்ற சிறிய ஊரில் 1822இல் சிறிய தீப்பொறியாய் துவங்கிய இந்தப் போராட்டம் பெரு நெருப்பாய் மாறி, திருவாங்கூர் நாடு முழுவதும் பரவி, 1827-1829ஆம் ஆண்டு நெய்யாற்றங்கரை என்ற ஊரில் பெரும் கலவரமாகி, 1859இல் கோட்டாறில் பெரும் சண்டையாக மாறியது. பலரும் கொலையாகி, இரத்தம் சிந்தியபின், 37 ஆண்டுகளுக்குப்பின் 1859 ஆம் ஆண்டு, கீழ்ஜாதிக்காரர்கள் வெற்றி பெற்றனர். உலகில் எங்குமே இல்லாத வரலாறாக, ஒரு நாட்டின் பெண்கள் தங்கள் மார்புகளை மறைத்து, மானத்தோடு வாழ 37 ஆண்டுகள் போராடிய இழிவான வரலாற்றை திருவாங்கூர் பெற்றிருந்தது என்பது எவ்வளவு சோகம்! ‘‘தோள் சீலைப் போராட்டம்” என்று இரத்தக் கறை படிந்த இந்தப் போராட்டம் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.

(Ref: “The Nadars of Travancore” by Robert Hardgrave university of california P 52-56)                                               – தொடருவேன்…

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *