நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், தலைநகர் டில்லி உள்ளிட்ட வடமாநில நகரங்களின் காற்றுத் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுகள் இருந்தபோதிலும், நள்ளிரவு ஒரு மணிக்குப் பின்னரும் பட்டாசு வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே சுற்றப்புறச்சூழல் அமைச்சகம் ‘பாதுகாப்பாகப் பட்டாசு வெடியுங்கள்’, ‘மாசுபாடு குறித்து விழிப்புணர்வு’ என வானொலி, தொலைக்காட்சி, துண்டறிக்கைகள் மூலம் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இந்த ஆண்டு, அந்த அமைச்சகமும் அமைச்சரும் ஒரு ட்வீட் கூட போடாமல் மவுனம் காத்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு ஒன்றியப் பிரதேச மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளி விவரங்களே சான்று. 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் மாநில மற்றும் ஒன்றிய அரசின் விழிப்புணர்வுப் பரப்புரையினால் பட்டாசு வெடிப்பு நிகழ்வுகள் குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு, ஒன்றிய அரசு பட்டாசு விழிப்புணர்வு குறித்துப் பேசாததற்குப் முக்கியமான காரணம், பீகார் சட்டமன்றத் தேர்தலாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒருவேளை பட்டாசு வெடிப்பைத் தவிர்க்குமாறு விழிப்புணர்வுப் பரப்புரை செய்தால், இந்துக்களின் வாக்குகள் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் ஒன்றிய அரசு மௌனம் சாதித்தது வெளிப்படையாகத் தெரிகிறது.
