புதுடில்லி, அக். 24- பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்டது லோக்பால் அமைப்பு. இந்த அமைப்பு தற்போது உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையில் 6 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், லோக்பால் அமைப்பு சார்பில் தலைவர் உட்பட அதன் 7 உறுப்பினர்களுக்கும் ஆடம் பரமான பிஎம்டபிள்யு 3 சிரீஸ் 330லி ரக கார்கள் வாங்க கடந்த 16ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டது. ஒருகாரின் விலை சுமார் ரூ.70 லட்சம் வீதம் பிற செலவுகள் உட்பட மொத்தம் ரூ.5 கோடிக்கு 7 கார்கள் வாங்கப்பட உள்ளது.
இதற்கு எதிர்க்கட்சி தலை வர்கள் பலரும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
லோக்பால் உறுப்பினர்களுக்கு விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கும் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி) கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக்பால் தொடங்கப்பட்டது. தற்போது அது தனது உறுப்பினர் களுக்கு பி.எம்.டபிள்யு. ரக கார் வாங்குகிறதா?. இது நேர்மையாக வரி செலுத்தும் மக்களின் வரி பணத்தை கொள்ளையடிப்பது போன்றதாகும். இந்த பிரச்சினையில் இருந்து ஒன்றிய பா.ஜனதா அரசு விலகி செல்லக்கூடாது. உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
காங்கிரஸ் பொதுச் செயலா ளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில்,
‘‘அன்னா ஹசாரே, கெஜ்ரிவால், ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் மூலம் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக தவறான கதை சித்தரிக்கப்பட்டது. இப்போது லோக்பாலின் யதார்த்தம் மக்கள் கண் முன் இருக்கிறது. இந்த அமைப்பு என்ன விசாரணை செய்தது, யாரை கைது செய்தது என்பது கேட்கப்பட வேண்டும்’’ என்றார்.
லோக்பாலின் ஊழலை யார் விசாரிப்பார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாகேத் கோகலே கேள்வி எழுப்பி உள்ளார்.
இது லோக்பால் இல்லை ஜோக்பால் என சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி விமர்சித்துள்ளார்.
