தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
வைக்கம் விருது பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்பு போராளி திருமதி தேன்மொழி சவுந்தரராஜனுக்கு நமது வாழ்த்து! தக்காரைக் கண்டறிந்து, தொண்டறத்துக்கு ஊக்கம் தரும் நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நமது பாராட்டுகள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
2025 ஆம் ஆண்டிற்கான ‘வைக்கம் விருது’ அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த திருமதி தேன்மொழி சவுந்தரராஜன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் திராவிடர் கழகம் பாராட்டுகிறது.

வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி, தமிழ்நாடு அரசு இந்த விருதினைச் சென்ற ஆண்டே அறிவித்து, கருநாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தேவனூர மஹாதேவா அவர்களுக்கு வைக்கம் நூற்றாண்டு விழாவில் வழங்கியது.
இவ்வாண்டு விருதாளராகத் தேர்வு செய்யப் பட்டுள்ளவர் திருமதி தேன்மொழி சவுந்தரராஜன் ஆவார். ஜாதி ஆதிக்க வெறித்தனத்தை எதிர்த்துக் களம் கண்ட ஒரு போராளியாக, அங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு, நமது மக்களை அவதிக்குள்ளாக்கும் ஜாதி வெறி, ஆதிக்க வெறியை எதிர்த்து, நீதிமன்றத்தி லும், வீதிமன்றத்திலும், கருத்துக் களத்திலும் நாளும் போராடி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி கண்டு வருபவர் ஆவார்.

ஜாதிக் கொடுமை குடியேறிய அமெரிக்காவில் சென்று வேலை பார்க்கும் நிலையில், பேதம் பேசி, ஆதிக்கம் செய்யும், பேத ஆணவச் சக்திகளை எதிர்த்து இப்படி ஒரு மகத்தான அறப்போரை அங்கு நடத்தி, வெற்றி கண்டுள்ளார். ஜாதி ஆதிக்கக் கொடுமைபற்றிய விழிப்புணர்வூட்டிய அவரது புத்தகத்தை, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழாக்கம் செய்து சுற்றில் விடப்பட்டது.

தக்காரைத் தக்க நேரத்தில் கண்டறிந்து, விருதுகளால் அவர்களது தொண்டறத்துக்கு ஊக்கம் தரும் நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நமது பாராட்டுகள்!
விருது பெற்ற தகுதியாளர் திருமதி தேன்மொழி சவுந்தரராஜன் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்! அமெரிக்காவில் ஜாதி ஒழிப்புக் களத்தைப் பலப்படுத்தி, தந்தை பெரியார், பாபா சாகேப் அம்பேத்கர் களங்களை அங்கே அமைத்து, வைக்கம் போராட்டம் வெற்றி பெற்ற வரலாற்றைத் தொடருவார் என்று நம்புகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
23.10.2025
