கோ. ஒளிவண்ணன்
மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
பெட்ரன்ட் ரஸ்ஸல் மே, 18, 1872 ஆம் ஆண்டு வேல்ஸ் நாட்டில் பிறந்தவர். ஆறு வயதிற்குள்ளேயே தாய், தந்தை, சகோதரி, பாட்டனார் என வரிசையாகக் குறுகிய காலத்தில் இழந்தவர். பாட்டியிடம் வளர்ந்தவர். சகோதரரைப் போலப் பள்ளிக்கூடம் சென்று படிக்காமல் வீட்டிலேயே பாடம் படித்தார் பெட்ரன்ட் ரஸ்ஸல். கணித பாடத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். ஒரு வகையில் அவருடைய அறிவுக் கதவுகளைத் திறப்பதற்குக் கணிதத்தில் காட்டிய ஈடுபாடு உதவி செய்தது. பாட்டி தீவிர மத நம்பிக்கைகளில் ஈடுபடுத்தும் போது அவருக்குள் பல கேள்விகள் எழுந்தன. வளர் இளம் பருவத் திலேயே மதத்தைக் கேள்விகளுக்கு உட்படுத்தி ஒரு கட்டுரை வடித்தார். மதத்தைத் துறந்தார்.
அடக்குமுறைக்கு அஞ்சாதவர்
1890இல் இலண்டன் டிரினிட்டி கல்லூரியில் கணிதம் படித்தார். அதே கல்லூரியில் விரிவுரை யாளராக பணியாற்றிய போது, முதலாம் உலகப் போரில் பிரித்தானிய அரசு கலந்து கொண்டதை எதிர்த்துக் கட்டுரை எழுதியதைக் குற்றமாகக் கருதி 1916இல் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதைப் போலவே பிற்காலத்தில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பதவி ஏற்க வரும்போது திருமணங்கள் மற்றும் பாலுணர்வு குறித்த அவருடைய சர்ச்சைக்குரிய கட்டுரை காரணமாகப் பதவி மறுக்கப்பட்டது.
இவை எதற்கும் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தன்னுடைய கருத்துக்களைச் சுதந்திரமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.
வாழ்க்கையில் இருமுறை சிறைக்குச் சென்றவர். 1918இல் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற மறுத் ததன் காரணமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனைப் பெற்றார். சிறையில் இருக்கும் போதுதான் மிக அரிய கணித புத்தகம் ஒன்றினை எழுதினார்.
1961இல் 89 வயதில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இம்முறை போர், அணுகுண்டு இவற்றிற்கு எதிராக இளைஞர்களை ஒன்று திரட்டியதற்காகச் சிறை.
பலமுறை அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டாலும், அதே அளவுக்கு பல்வேறு விருதுகளால் சிறப் பிக்கப்பட்டார்.
அவருடைய எழுத்துக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. குறிப்பாக, திருமணங்களும் ஒழுக்கங்களும் என்கிற கட்டுரைகளுக்காக.
70க்கும் மேற்பட்ட புத்தகங்களும், ஏறத்தாழ 2000 கட்டுரைகளும் எழுதியவர்.
1970இல் தன்னுடைய 97ஆவது வயதில் மறைந்தார்.
தொடக்கத்தில் கணிதத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருந்த போதிலும், பல புத்தகங்கள் எழுதியிருந் தாலும், சிறு வயதிலிருந்து அவருக்குளிருந்த மத எதிர்ப்பு உணர்வு, தத்துவங்களைப் படிக்கத் தூண்டியது. இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த தத்துவ அறிஞராகவும் சமூக விஞ்ஞானியாகவும் விளங்கினார்.
மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்
கடவுள், மத நம்பிக்கைகள் இவற்றை எதிர்த்து அவர் எழுதிய கட்டுரைகளும் பேச்சுக்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. அவற்றில் சிலவற்றைக் காண்போம். அதை அறிந்து கொள்வதே அவரு டைய பிறந்த நாளில் நாம் ரஸ்ஸலுக்குச் செலுத் தக்கூடிய மரியாதையாகும்.
ரஸ்ஸல், ‘மதம் என்பது அச் சத்தின் காரணமாக ஏற்படுத்திக் கொண்ட ஒன்று: மதம் மனித இனத்திற்கு தாங்கொண்ணா தொல்லைகள் தந்து அழிவை அளிக்கக்கூடிய நோய்’ என்றார்.
மேலும், ‘ஒரு விஷயத்தைப் பரவலாகப் பலர் நம்புகிறார்கள் என்பதற்காக அது எவ்வளவு முக் கியமான ஒன்றாக இருந்தாலும், அதற்கான ஆதா ரங்கள் இல்லை என்றால் அது வெறும் முட்டாள் தனமான நம்பிக்கையாகத் தான் இருக்க முடியும்’ என்றார்.
‘முதற்காரணம்’ என்ற கோட்பாடு மிக முக்கிய மானது. கடவுள் நம்பிக்கையாளர்கள் மதவாதிகள் சுட்டிக் காட்டுவது, ‘இவ்வுலகில் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு. நம்முடைய உலகம் கடவுளால் உருவாக்கப்பட்ட தற்குக் காரணமுண்டு. நாமெல்லாம் ஒரு முக்கிய காரணத்திற்காகத் தான் கடவுளால் படைக்கப்பட் டிருக்கிறோம்.’
இவ்வாதத்தை அடியோடு முறியடித்தார் பெர்ட் ரண்ட் ரஸ்ஸல். ‘எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது என்றால், கடவுள் உருவான தற்கும் ஒரு காரணம் இருக்கும் அல்லவா. அப்படியென்றால் அந்த கடவுளை உருவாக்கியது யார்’ என்ற கேள்வியை எழுப்பினார்.
‘இல்லை இல்லை கடவுள் யாராலும் உருவாக்கப் படவில்லை அவர் தானே உருவாகிக் கொண்டு, எங்கும் நீக்கமற இருக்கிறார் என்றால், அதே அடிப்படையில், ஏன் இவ்வுலகம் மற்றும் பிரபஞ்சம் தோன்றியுள்ளதாகக் கருதக்கூடாது’ எனக் கேட்டார்.
ஆகவே முதற்காரணம் என்ற கருத்தியல் அர்த்தமற்றது. இந்த பிரபஞ்சம் என்பது எந்த ஒரு காரணத்தினாலும் யாராலும் உருவாக்கப்படவில்லை. மனிதன் தோன்றுவதற்கு ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரு வெடிப்பு காரணமாக பிரபஞ்சமும், சூரியனும் பூமியும் தோன்றியது. சில இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதன் தோன்றினான்.
இக்கருத்து, ‘முதலில் நமது இருத்தல், பிறகு பண்பு நலன்கள் நம்மிடம் வந்து சேருகிறது’ என்ற ஜான் பால் சாத்ரேவின் கூற்றோடு ஒத்துப் போவதைக் காண்கிறோம்.
மரபணுக்கள் வழியே…..
உயிர்கள் அனைத்தும், மனிதர்கள் உட்பட, மிக அடிப்படையான, இருத்தலுக்குத் தேவையான, அவசியமான உணர்வுகளை மரபணுக்கள் வழியாகக் கடத்துகிறோம். உதாரணமாக, சுவாசித்தல், தாய் மடியில் பால் குடிப்பது, பசி எடுப்பது, தூங்குவது, அழுவது போன்றவை நம்முள்ளே கொண்டே பிறக்கிறோம்.
பிற பண்பு நலன்களை, உதாரணமாக, மத நம்பிக்கைகள், சமய பழக்க வழக்கங்கள், இன்னும் எளிதாகச் சொன்னால் காலையில் எழுந்தவுடன் பல் விளக்குவது, தேநீர் அருந்துவது, கைகழுவி விட்டுச் சாப்பிடுவது போன்ற எதுவும் நாம் நம்முடைய மரபணுக்களில் கொண்டு வருவதில்லை. இவை நம்முடைய புறச்சூழல்கள் வாயிலாக கற்றுக் கொள்கிறோம்.
கடவுள் மற்றும் சமய நம்பிக்கைகள் அறி முகப்படுத்தப்படாமல் வளர்க்கப்படும் குழந்தைகள், சாமி சடங்கு இவற்றை அறியாமலேயே வளரு வார்கள். குணம், பண்பு இவற்றை அம்மா, அப்பா, உறவினர்கள், நண்பர்கள், பள்ளிக்கூடம், கல்லூரி இவற்றின் மூலம் பெறுவார்களே தவிர, பிறப்பின் அடிப்படையில் இல்லை. பிறப்பதற்கு முன்பே எதுவும் தீர்மானிக்கப்படுவதில்லை.
ரஸ்ஸல், சாத்தரே இருவரின் இக்கருத்து காரல் மார்க்ஸின் ‘பொருள் முதல் வாத கருத்தியலோடு இணைந்து செல்வதைக் காண்கிறோம்.
அதேபோல், மதவாதிகளும் கடவுள் நம்பிக்கை யாளர்களும் திரும்பத் திரும்ப இன்னொரு கருத்தைச் சொல்லிக் கொண்டே வருவார்கள். ‘இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது. படைப் பின் இரகசியத்தைச் சாமானியர்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது’ என்பர். மேலும், ‘ஒருவ ரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காகக் கடவுள் இல்லை என்று சொல்லிவிட முடியாது’ என வாதிடுவார்கள்.
நிரூபிக்க வேண்டியவர்கள்
ஒரு அழகான உதாரணம் மூலம் இதற்கு ரஸ்ஸல் பதிலளிக்கிறார். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே ஒரு சைனா தேநீர் குடுவை ஒன்று நீள் வட்டப் பாதையில் சுற்றுவதாக ஒருவர் சொல்கிறார். கோப்பை மிகச் சிறியதானதால், சக்தி வாய்ந்த தொலைநோக்கியால்கூட அதனைக் காண முடியாது. அப்படி குடுவை ஒன்று இருக்கிறது என்பதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதப்படுகிறது. வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை காலைகளில் திரும்பத் திரும்ப மக்களிடையே சொல்லப்பட்டு நம்ப வைக்கப்படுகிறது. குறிப்பாக, கேள்விகள் கேட்காமல் நம்ப வேண்டும் என வலி யுறுத்தப்படுகிறது. சமுதாயத்தில் பெரும் பகுதியினர் இதனை நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறார்கள். யாராவது மறுப்பாளர்கள், எப்படிங்க அதுபோல ஒரு குடுவை இருக்க முடியும் என்று கேட்டால், அங்கே இருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லை, உணர முடியவில்லை என்பதற்காக அது இல்லாமல் போய்விடுமா. மேலும், குடுவை அங்கு இல்லை என்பதை நீங்கள் நிரூபித்துக் காட்டுங்கள் என்று சொன்னால் அது எவ்வளவு அர்த்தமற்ற ஒன்றோ அதைப் போலத்தான் கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்பவர்களிடம், இல்லை என்பதை நீங்கள் நிரூபித்துச் சொல்லுங்கள் என்று சொல்வது. இருக்கிறது என்பவர்கள் தான் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்களே தவிர மறுப்பவர்கள் அல்ல என்று ரஸ்ஸல் அழுத்தமாய் பதில் அளித்தார்.
உலகில் ஏற்படும் தீய விளைவுகளுக்குக் காரணம் பேய் பிசாசு என்றபோது, . அப்படியானால் அவற்றை உண்டாக்கியது யார், அதற்கான கார ணங்கள் என்ன என்று கேட்டு மலைக்க வைத்தார்.
மனிதனின் தோற்றத்தைக் குறித்து விளங்காதப் பல புதிர்களுக்கு தன்னுடைய பரிணாம கோட் பாடுகளின் வாயிலாக விடை அளித்தவர் சார்லஸ் டார்வின். ஃபாசில் எனப்படும் கல் மரங்கள் பலவற்றைக் கண்டுபிடித்து, இந்த உலகம் எப்படி பரிணாம வளர்ச்சியின் ஊடாக பல லட்சம் ஆண்டுகளாக பல்வேறு உயிர்களாகப் பெருகி இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்ற பெரும் கோட் பாட்டினை வழங்கினார். வெளியிடப்பட்ட காலத்தில் அந்த கோட்பாடுகள் மத நம்பிக்கையாளர்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட போதும் ரஸ்ஸல் அதை உறுதியாக வழிமொழிந்தார். கருத்துக்கள் மக்களிடையே பரவிடத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார்.
அறிவியல் பூர்வமாக
இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு பகுதிகளில் கிடைத்த ஏராளமான கல் மரங்கள் வாயிலாகவும், மற்றும் மரபணுவியலில் கண்ட பெரும் வளர்ச்சி காரணமாகவும் டார்வினின் கோட்பாடுகள் அறிவி யல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வுலகம் சீராக இயங்குவ தற்கும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஏற்படும் இயற்கை நிகழ்வுகளுக்கும் என்ன காரணம் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்தன. இதற்கும் ரஸ்ஸல் டார்வினைத் துணை கொண்டு விளக்குகிறார். உயிரினங்கள் இயற்கை தெரிவுகளின் வாயிலாக தங்கள் இனம் அழிந்து விடாமல் காப்பாற்றிக் கொள்கின்றன. வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் இடரான சூழல்களில் உயிர்கள் தங்களுடைய மரபணுக்களில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படுத்திக் கொண்டு, சவால்கள் நிறைந்த சூழல்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டு வெற்றி கொள்கின்றன. மரபணு மாற்றங்களில் வெற்றி பெற்ற உயிரினங்கள் தொடர்ந்து தங்கள் சந்ததியினருக்கு அத்தகைய மரபணுக்களைக் கடத்தி தங்கள் இனத்தை அழிந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன.
இதனை எளிமையான உதாரணம் கொண்டு விளக்கலாம்.
சமவெளிப் பகுதிகளில் வெப்பம் சூழ்ந்த நிலப் பகுதிகளில் வாழும் நாய்கள், ஆடுகள் மாடுகளின் தோல்களின் மேற்புறத்தை, உயர்ந்த மலைப் பகுதிகளில் அல்லது குளிர் பிரதேசங்களில் வாழும் அதே விலங்குகளின் தோலின் மேற்புறத் தோடு ஒப்பிடும்போது ஒன்றை கவனிக்கலாம். அவற்றிற்கு இரண்டு அடுக்காக கம்பளி போல உரோமங்கள் படர்ந்து இருக்கும். குளிரைத் தாங்குவதற்கு இயற்கை அளித்த கொடை என்று எளிதாகச் சொல்லிவிட்டுக் கடந்து விடலாம். ஆனால் டார்வினின் இயற்கைத் தெரிவுகள், அதற்குப் பின்னுள்ள அறிவியலை விளக்குகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், கடுங்குளிர் நிலவிய அச்சூழலில் எத்தனை எத்தனையோ விலங்குகள் மாண்டு இருக்கும். அந்த விலங்குகள் தங்கள் இருத்தலுக்காகத் தொடர்ந்து போராடும் போது அவற்றில் சில, தொடர்ந்து சில தலைமுறைகளாக, சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் தன் மரபணுவில் மாற்றம் கண்டு இத்தகைய ரோமங்களை வளர்த்துக் கொண்டி ருக்கும். அதில் தப்பிப் பிழைத்தவை தொடர்ந்து புதிய மரபணுக்களோடு தங்கள் சந்ததியினரை உருவாக்கி தங்கள் உயிரினத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
சூழ்நிலைக்குத் தக்கவாறு
ஆகவே உயிரினங்கள் உருவாவதற்கும் உயிர் வாழ்வதற்கும் தக்கவாறு சூழ்நிலைகள் அமைந் திருக்கவில்லை. உண்மையில் என்ன சூழ்நிலை இருக்கிறதோ அந்த சூழ்நிலைக்கு தக்கவாறு உயிரி னங்கள் தங்களைத் தயார்ப் படுத்திக் கொண்டன என்கிறார் ரஸ்ஸல்.
பெட்ரன்ட் ரஸ்ஸல் ஆழமான கருத்துக்களாலும் தர்க்கரீதியான வாதங்கள் மூலமாகவும் பழைமை வாதிகளின் கருத்துக்களை உடைத்து எறிந்தார்.
பெட்ரன்ட் ரஸ்ஸல், தந்தை பெரியார் இடையே பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் சமகாலத்தில், 90 வயதுக்கு மேல் வாழ்ந்த பெருமக்கள். பெரியாரைப் போல செல்வக்குடியில் பிறந்தவர். இருவரும் சிறைக்குச் செல்வது குறித்துக் கவலைப்படாமல் துணிச்சலான கருத்துகளைச் சொன்னவர்கள். வாழ்வின் இறுதி வரை பேச்சும் எழுத்தும் என வாழ்ந்தவர்கள். கடவுள் மறுப்பு, மத எதிர்ப்பு, பெண்ணுரிமை, சமூக நீதி இவற்றில் ஒன்றுபட்டனர். மிக முக்கியமாக இருவரும் மானுட பற்றாளர்கள். ‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’ என்றார் தந்தை பெரியார். ‘அறிவும் அன்பும் மனிதருக்கு அவசியமானது’ என்றார் ரஸ்ஸல். இவர்களிடையே யுள்ள ஒரு முக்கியமான வித்தியாசம் பெரியார் தன்னுடைய எண்ணங்களை செயற்பாடுகளை ஒரு மாபெரும் இயக்கமாக உருவாக்கி அதன் தாக்கத்தை சமூகத்தில் இன்றளவும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். ரஸ்ஸல் அது போன்ற எந்தவிதமான இயக்கமோ அமைப்போ உண்டாக்கவில்லை.
இருவரின் எழுத்துகளை இன்றைக்குப் படிக்கும் போது கூட ஆச்சரியமாக இருக்கும். தொலைத் தொடர்பு இல்லாத அந்தக் காலத்தில் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இல்லாதபோதும் எப்படி உலகின் இரு பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கு சமூகத்தைக் குறித்து ஒத்த சிந்தனை ஏற்பட்டிருக்கும் என்பதே.
பெட்ரன்ட் ரஸ்ஸல் மறைந்து 50 ஆண்டுகளுக்கு மேலான போதும், இன்றைக்கும் அவருடைய பேச்சுக்கள் எழுத்துகளின் ஊடாக நம்முடன் கூடவே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்.