சென்னை,அக்.22 சென்னையில் பருவமழையின் தீவிரம் அதிகமாகி உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி மழை பெய்தது. மழை வெள்ளத்தை சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், சென்னை நகர காவல்துறையினரையும் உஷார்படுத்தி காவல் ஆணையர் அருண் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளார். சென்னையில் 12 ஆணையர்கள் தலைமையில் மழை வெள்ளத்தை சமாளிக்க 12 பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் இந்த பேரிடர் மீட்பு படைகளில் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர சென்னை நகர் முழுவதும் 39 இடங்களில் சிறப்பு காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தென்சென்னையில் மட்டும் 23 சிறப்பு மினி போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் தொலைபேசி எண் 100-இல் பேசி உதவி கேட்டால் உடனடியாக மீட்பு படையினர் சென்று உதவிக்கரம் நீட்டுவார்கள் என்றும் தென்சென்னை கூடுதல் ஆணையர் டாக்டர் கண்ணன் தெரிவித்தார்.
மொத்தத்தில் மழை வெள்ளத்தை சமாளிக்க சென்னை காவல்துறையினர் தயார்நிலையில் இருப்பதாக காவல்துறை ஆணையர் அலுவலக வட்டார உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
