கடந்த 2015 மே மாதம் 10ஆம் தேதி ஒசூர் உள்வட்ட சாலை வ.உ.சி. நகர் – முனிஸ்வர்நகர் சந்திப்பு பகுதிக்கு தந்தை பெரியார் சதுக்கம் (சர்க்கிள்) என பெயர் வைக்கப்பட்டது. அதை 2019 சில கயவர்கள் சேதப்படுத்திய நிலையில் எங்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 21.03.2023 அன்று ஒசூர் மாமன்ற கூட்டத்தில் 87 ஆவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 22.08.2023 தேதி அன்று அரசாணை வெளியிட்டு கடந்த 21.01.2025 மாநகராட்சி அலுவலர்களால் காவல்துறை பாதுகாப்புடன் திறந்து வைக்கப்பட்டது.தந்தை பெரியாரை பிடிக்காத – பிஜேபி தூண்டுதலால் அரசியல் லாபத்திற்காக சிலர் தந்தை பெரியார் சதுக்கம் சுற்றி உள்ள குடியிருப்புப் பகுதி பொதுமக்களிடம் தந்தை பெரியாரைப் பற்றி தவறான அவதூறுப் பிரச்சாரம் செய்து, அரசு ஆணைப்படி வைத்துள்ள ‘தந்தை பெரியார் சதுக்கம்’ என்ற பெயரை மாற்ற வேண்டி காவல்துறை அனுமதியின்றி திடீர் திடீரென என தந்தை பெரியார் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது குறித்து 12.05.2025 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஒசூர் வட்டாட்சியர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ஒசூர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. தொலைபேசி வழியாகச் சொல்லியும் பலன் இல்லை. எதிரிகள் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர்(வழக்கு எண்: 12983/2025) ஆனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இருந்தாலும் எதிரிகள் அப்பகுதியில் உள்ள கோவில் இடங்களில் கூடி, வழிபாட்டுக்கு வருபவர்களிடம் தந்தை பெரியார் பற்றி அவதூறுப் பிரச்சாரம் செய்து, தந்தை பெரியார் சதுக்கம் பெயரை மாற்ற நீங்கள் துணை நிற்க வேண்டும் என கையொப்பம் பெற்று அரசு அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் அனுப்பியும், நேரில் சென்று மிரட்டியும் வருவதுடன் இதைப் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு என மக்களை வரவழைத்து தந்தைபெரியார் சதுக்கம் பெயர்ப்பலகை அருகில் கூடி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். தகவல் அறிந்து எங்கள் தலைமைக் கழகம் அறிவுறுத்தலின் பேரில் ஒசூர் மாநகரக் காவல் ஆய்வாளரிடம் நேரில் சென்று, எதிரிகள் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையினரால் அனுமதி கொடுக்கப்பட்டதா என் கேட்ட போது, ‘‘சம்பந்தப்பட்ட இடம் நெடுஞ்சாலைதுறை, மாநகராட்சியைச் சார்ந்து வருவதால் அவர்களை புகார் கொடுக்க சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன்’’ என பொறுப்பைத் தட்டி கழித்து பதில் அளித்தார். எனவே மேற்படி நீதிமன்ற ஆணையை மீறி ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுமக்களிடம் தவறான பிரச்சாரம் செய்தும் தந்தை பெரியார் புகழுக்கு களங்கம் கற்பித்து அதன் மூலம் அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அமைதியை நிலை நாட்ட வேண்டுவதோடு உரிய நேரத்தில் ஒசூர் காவல் ஆய்வாளர் இப்பிரச்சனையை சட்டப்படியும்,நீதிமன்ற ஆணையையும் கடைப்பிடிக்காததும்தான் இப் புகார் மனு அளிக்க அடிப்படைக் காரணம் என்பதால் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
– சு.வனவேந்தன்
மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்
(காவல்துறைக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது)
