நதியை நாசப்படுத்துவதுதான் தீபாவளியா?

3 Min Read

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியாவில் உள்ள சரயு நதிக்கரையில் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியின்  போது லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2025) அக்டோபர் 19ஆம் தேதி நடைபெற்ற தீபோத்சவத்தில் சுமார் 26 லட்சம் அகல் விளக்குகள் (தீபங்கள்) ஏற்றப்பட்டன, இது உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.  ஆனால், விழா முடிந்தவுடன், இந்த விளக்குகள், எண்ணெய்க் கழிவுகள், மெழுகுவர்த்திகள் மற்றும் பூஜைப் பொருட்கள் போன்ற கழிவுகள் நதியில் கொட்டப்பட்டது; இது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் 8 டன் கழிவுகள்  நதியில் கொட்டப்பட்டன. நதியை ‘தாய்’ என வணங்கும் நாட்டில் தாயை மாசுபடுத்துவதுதான் பக்தியா?

உத்தரப் பிரதேச சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத்தின் உத்தரவின்படி, ஒவ்வோர் ஆண்டும் இந்த தீபோத்சவம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 26 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன. இது கடந்த ஆண்டுகளை விட அதிகம்.  விழாவுக்கான செலவு பல நூறு கோடி ரூபாய் எனக் கணக்கிடப்படுகிறது, மேலும் இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த நிதியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்குப் போதிய ஒதுக்கீடு இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.  சரயு நதி, அயோத்தியாவின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது, ஆனால் தொழிற்சாலைக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் மற்றும் விழா கழிவுகளால் பெரிதும் மாசுபாடடைந்துள்ளது.

தீபாவளி முடிந்த அடுத்த நாள், நதியின் இரு கரைகளிலும் உள்ள லட்சக்கணக்கான அகல் விளக்குகள், எண்ணெய் எச்சங்கள், மெழுகு மற்றும் பூஜைப் பொருட்கள் நேரடியாக நதியில் கொட்டப்பட்டுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி முடிந்த பிறகு ஏழைகள் விளக்கிலிருந்து எண்ணெய்யை பெரிய பெரிய பாத்திரங்களில் பிடித்துக் கொண்டு செல்வார்கள் இது சமூகவலைதளங்களில் பரவி அரசுக்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியதாம்! இதனால்  இந்த ஆண்டு அப்படி நடக்காமல் இருக்க உடனடியாக விளக்குகளை எண்ணெய்யோடு ஆற்றில் அள்ளி வீசியது நகர நிர்வாகம்.

இத்தகைய கழிவுகள் நதியின் அகலத்தை குறைத்து, 1.5 கி.மீ. இருந்த நதி இப்போது மிகவும் சுருங்கி விட்டது!

இத்தகைய கழிவுகள் சரயு நதியின் நீரின் தரத்தை பெரிதும் பாதிக்கின்றன. ஒன்றிய அரசின் கீழ்வரும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்  அறிக்கைகளின்படி, நதியின் உயிரியல் ஆக்சிஜன் தேவை  அளவு 4 மி.கி/மு.க்கு மேல் உள்ளது. இது குளிக்கக்கூட தகுதியற்றது.  எண்ணெய் மற்றும் மெழுகுக் கழிவுகள் நீரில் கலந்து, நச்சுத்தன்மை ஏற்படுத்துகின்றன, இது மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை அழிக்கிறது. மேலும், தொழிற்சாலைக் கழிவுகள் சேர்ந்து,   கங்கையில் இணையும் போது  மாசும் பெரும் அளவு பரவுகிறது.

எண்ணெய் மற்றும் மெழுகுக் கழிவுகள்  நீரின் ஆக்சிஜன் அளவு குறைவு, உயிரினங்கள் இறப்பு,   பூஜைப் பொருட்கள் (பூக்கள், பிளாஸ்டிக்)  மூலம் நீரில் நச்சுக்கள் கலத்தல், இவற்றோடு தொழிற்சாலைக் கழிவுகள்  போன்றவை கலப்பதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஊறுவிளைவிக்கும். உயிருக்கே அச்சுறுத்தல் ஆகும்.

மனிதர்களுக்கு, இந்த மாசுபட்ட நீரை எந்த வகையில் பயன்படுத்தினாலும் தோல் நோய்கள், செரிமானப் பிரச்சினைகள் மற்றும் நீண்டகால உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

சமூக வலைதளங்களில், “நதியை தாய் என வணங்கி, அதை கழிவுக் கிடங்காக்குவது சரியா?” எனக் கேள்விகள் எழுந்துள்ளன. ‘தீபாவளி  கொண்டாட்டம்’ என்ற பெயரில் நாட்டில் பெரும்பாலான பெருநகரம் மற்றும் சிறுநகரங்களில் காற்றுமாசை அதிகப்படுத்தி, தற்போது அயோத்தியில் சராயு நதியையும் நாசமாக்கி உள்ளனர். சராயு நதியில் 2015ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டுவரை 417 மடங்கு மாசு அதிகரித்துள்ளது.

ஒரு முக்கியமான தகவல் – இந்த சரயு நதியில் தான் இராமாயண ராமன் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டான் என்று எழுதி வைத்துள்ளனர்.

‘புனிதம்’ என்ற பெயரில் நாட்டை நாசப்படுத்துகிறார்கள். இந்த மத நாசக்காரர்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *