புதுடில்லி, அக்.22 பிரதமர் நரேந்திர மோடியால் 2014-இல் தொடங்கப்பட்ட ‘ஜன்தன்’ திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில், சுமார் 14.28 கோடி கணக்குகள் செயல்படாத நிலையில் (Inoperative) இருப்பது தெரிய வந்துள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வங்கிச் சேவை எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பூஜ்ய இருப்புத் தொகையுடன் கணக்குகள் துவங்க வழிவகை செய்வதாக ‘ஜன்தன்’ திட்டம் தொடங்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளில் மொத்தம் 54.55 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இவற்றில், 14.28 கோடி வங்கிக் கணக்குகள், அதாவது 26 சதவீத கணக்குகள் செயல்படாமல் உள்ளன. இது அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகள் நிலவரம்
பாங்க் ஆப் இந்தியா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் செயல்படாத கணக்குகளின் விகிதம் அதிகமாக உள்ளது. பாங்க் ஆப் இந்தியாவில் அதிகபட்சமாக 33 சதவீதம் மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 32 சதவீத ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படாத நிலையில் உள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா விலும் (SBI) செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2024 செப்டம்பரில் 19 சதவீதமாக இருந்த இந்த விகிதம், கடந்த செப்டம்பரில் 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
‘ரூபே’ கார்டு
பொதுத் துறை வங்கிகளில், ஜன்தன் வங்கிக் கணக்குகளுக்கும், ‘ரூபே’ கார்டு வழங்கலுக்கும் இடையேயான இடைவெளி 31 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மொத்தமுள்ள 54.55 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில், இதுவரை 37.53 கோடி வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், சுமார் 17.02 கோடி வங்கிக் கணக்குகளுக்கு ரூபே கார்டுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
