வாணியம்பாடி, அக்.22- வாணியம்பாடி அருகே காட்டு மாரியம்மன் கோவிலுக்குச் சென்ற 18 பேர் பாலாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கினர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 18 பேர் நேற்று முன்தினம் (20.10.2025) தீபாவளி அன்று தகரகுப்பம் அருகேஜோதி நகர் பகுதியில் உள்ள காட்டு மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் அங்குள்ள பாலாற்றைக் கடந்து சென்ற போது ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றுள்ளது. மீண்டும் திரும்பி வரும் போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றைக் கடக்க முடியாமல் 18 பேரும் சிக்கி தவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள், பொது மக்களின் உதவியுடன் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி 18 பேரையும் கயிறு கட்டி மீட்டனர்
அதேபோன்று வாணியம்பாடி அருகே தமிழ்நாடு -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (20.10.2025) தீபாவளியை யொட்டி அங்குள்ள கனக நாச்சியம்மன் கோவிலுக்குப் பக்தர்கள் சென்ற போது நீர்வரத்து குறைவாக இருந்தது.
கோவிலில் வழிபாடு முடிந்து திரும்பி வந்தபோது, தடுப்பணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறியதால், தடுப்பணையை கடக்க முடியாமல் தவித்த 10-க்கும் மேற்பட்டோரை அங்கிருந்த மக்கள் ஒன்று சேர்ந்து கயிறு கட்டி மீட்டனர்.
