இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சிவகங்கை மாவட்டம் எஸ். மாம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 1954 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தீபாவளி கொண்டாடுவதில்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சமூக முடிவை மக்கள் உறுதியாகப் பின்பற்றி வருகின்றனர்.
தீபாவளியின்போது பொருட்களை வாங்க பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது; செல்வந்தர்கள் மட்டுமே கொண்டாட முடிகிறது, ஆனால் பெரும்பாலான கிராம மக்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாமல் ஏங்க வேண்டியுள்ளது என்றும் கருதப்பட்டது. வறியவர்களைத் திண்டாட வைக்கும் பண்டிகையாக இது இருப்பதால், செலவுகளைத் தவிர்த்து சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், 1954 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக இந்த 13 கிராமங்களும் தீபாவளியைப் புறக்கணிக்க முடிவெடுத்தன.
இன்று காலம் மாறி, இந்த கிராமங்களில் இருந்து பல அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் வளைகுடா நாடுகளில் பணிபுரிவோர் எனப் பலரும் உருவாகியுள்ளனர். இருப்பினும், “உழைத்த காசைக் கரியாக்க வேண்டாம்” என்று கூறி, 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் முன்னோர்கள் எடுத்த அந்த முடிவை இன்றளவும் தீர்க்கமாகப் பின்பற்றி வருகின்றனர்.
இந்தக் கிராமங்களில் உள்ள ஒரு வீட்டில்கூட தீபாவளியன்று புத்தாடை, இனிப்பு, பட்டாசு என்று எதுவுமே பயன்படுத்தப்படுவதில்லை.
இந்தக் கிராமங்களில் இருந்து திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை வீட்டாரை “தலை தீபாவளியாவது, மாப்பிள்ளைக்கு மோதிரமாவது” என்று கிண்டலடிப்பது வழக்கம் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெருநகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசித்தாலும், தங்கள் ஊரின் முடிவைப் பெருமையுடன் பின்பற்றுகின்றனர்.
சென்னையில் தாம்பரத்தில் வசிக்கும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலா வாகன ஓட்டுநர் இது குறித்துப் பேசுகையில், “நான் ஊரில் இருந்தபோது மட்டுமல்ல, தற்போது சென்னை வந்த பிறகும் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை. எனது பிள்ளைகளிடம், கடன் காரணமாக தாத்தா, பாட்டி பட்ட துன்பங்களை எடுத்துக்கூறியதால், அவர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் இருந்து விலகிவிட்டனர். தீபாவளிக்குச் செலவழிக்க வேண்டிய பணத்தைச் சேமிக்க அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த 13 கிராமங்களின் இந்த உறுதியான முடிவு, வெறும் கொண்டாட்டப் புறக்கணிப்பாக இல்லாமல், சிக்கனம் மற்றும் சேமிப்பை வலியுறுத்தும் ஒரு தனித்துவமான சமூக மரபாகப் பார்க்கப்படுகிறது.
பொருளாதாரக் கண்ேணாட்டத்தில் தேவையில்லாத ஒரு பண்டிகையைக் கொண்டாடாமல் புறக்கணிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது; தீபாவளி மட்டுமல்ல; மாதம் தவறினாலும் பண்டிகைகள் மட்டும் திணிக்கப்பட்டு மக்களின் புத்தியையும், கடும் உழைப்பைக் கொட்டி சம்பாதித்த பொருளையும் அரித்துத் தின்னும் கரையான்களாகவும் இருக்கின்றன.
இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் பண்டிகைகளுக்காகக் கூறப்படும் காரணங்களும், கதைகளும் – பகுத்தறிவுள்ள எந்த மனிதனாலும் ஏற்கப்ட முடியாதவை.
பகுத்தறிவைக் கேலி செய்வதோடு நில்லாமல், இன இழிவைத் திணிக்கும் கேவலமும் இதற்குள் புதைந்து கிடக்கிறது.
ஒவ்வொரு பண்டிகையின் பின்னணியிலும் கடவுளின் அவதாரம், அசுரனைக் கொன்றது என்பன எல்லாம் எந்த அடிப்படையில்?
அசுரன், அரக்கன் என்று சொல்லப்படுவது எல்லாம் திராவிடர்களைத்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.
எந்த நாட்டிலாவது இழிவுபடுத்தப்பட்ட மக்களே, தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதை விழாவாகக் கொண்டாடுவார்களா?
இதை எடுத்துச் சொல்ல ஒரு மாபெரும் தலைவர் தந்தை பெரியார் கூறினார்; ஓர் இயக்கமும் கூறிக் கொண்டு இருக்கும் போதே இன்னும் தீபாவளி போன்ற மூடப்பண்டிகைகளை, இன இழிவை வலியுறுத்தும் பண்டிகைகளைக் கொண்டாடுவது வெட்கக் கேடும், அவமானமும் அல்லவா!
‘மானமும், அறிவும் மனிதர்க்கழகு!’ என்ற தந்தை பெரியாரின் அறிவு மொழியை அசைப் போட்டுப் பாருங்கள் – நற்சிந்தனையும், தன்மானமும் சிறகடித்துப் பறக்கும்!
