பயிரிடுதல் மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனராம். அது தவறாம்! இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைச் கொண்டு பூமியையும், அதில் உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ! என்று மனுதர்ம மூக்கால் அழுகிறது.
இதைப் படிக்கும் போது திருவாரூரில் கலைஞர் மாணவராக இருந்த போது நடந்த ஒரு நிகழ்வுதான் நினைவிற்கு வருகிறது. அது நடந்தது 1944இல் ஏப்ரல் 19) இதோ கலைஞர் பேசுகிறார்;
கிருபானந்தவாரியார் ஞானப்பழம், அறிவுக் களஞ்சியம். அவர் படிக்காத நூல் இல்லை. அவரிடத்திலே வந்து கற்காத சான்றோர் இல்லை, பெரியோர் இல்லை, புலவர்கள் இல்லை. அப்படிப்பட்டவர் நான் இளைஞனாக, பள்ளி மாணவனாக இருந்தபோது அடிக்கடி திருவாரூருக்கு வருவார். திருவாரூரில் ஆலயத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் அவருடைய நிகழ்ச்சி நடைபெறும். ஒரு முறை அப்பர் திருவிழாவிற்காக பேச வந்திருந்தார். நாங்கள் மாணவர்கள் எல்லாம் என் தலைமையிலே சென்று அங்கே அமர்ந்திருந்தோம். பேசும்போது அவர் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசினார். அப்பர் திருநாள் என்பதால், புலால் சாப்பிடக் கூடாது, உயிர்களைக் கொல்லக்கூடாது என்று அவர் பேசிக்கொண்டு வரும்போதே, நான் எழுந்து ‘அப்படியானால் மனிதர்களுக்கு நீங்கள் இந்த உபதேசத்தைச் செய்கிறீர்கள். இது எல்லா உயிர்களுக்கும் பொதுவானதா?’ என்று கேட்டபோது, அவர் ஆமாம் என்று சொன்னார். சாப்பிடுவதற்காக எந்த உயிரையும் ஆண்டவன் படைக்கவில்லை. ஆடு மாடு கோழி போன்றவைகளையெல்லாம் சாப்பிடுவதற்காக ஆண்டவன் படைக்கவில்லை என்றார். நான் எழுந்து சிங்கம், புலி சாப்பிடுவதற்காக ஆண்டவன் எந்த விலங்கைப் படைத்தான் என்று கேட்டேன். அவ்வளவு பெரிய அவையிலே ஒரு சின்னப் பையன் எழுந்து அப்படி கேட்டது தவறுதான்.
ஆனால் கேட்ட கேள்வியிலே இருந்த தத்துவம் தவறானது அல்ல. அதைப் புரிந்து கொண்ட வாரியார் அவர்கள் உட்கார், உட்கார் பிறகு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு – அப்போது சொல்ல முடியவில்லை – முடியாது யாராலும் அதனால் அப்போது சொல்லவில்லை – சொல்லிவிட்டு தொடர்ந்து சொல்லும்போது, அந்த உயிர்கள் வாழ்வதற்காக எந்த உயிரையும் ஆண்டவன் படைக்கவில்லை என்று சொன்னேன். சில குறும்புக்கார பையன்கள் குறுக்கிட்டு ஏதோ கேட்டு விட்டார்கள். அவர்கள் எல்லாம் வேறு ஆள்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் நான் பதில் சொல்லவில்லை என்று சொல்லிவிட்டு பிறகு சொன்னார். சின்னப்பையன் அப்படிக் கேட்பான், தாவரங்களிலே முருங்கைக்காய், கத்திரிக்காய் என்றெல்லாம் இருக்கிறது. தாவரங்களைச் சாப்பிடுவதால் உயிர்களுக்கு ஆபத்தில்லையா என்று கூட பையன் கேட்பான். அப்படி தாரவங்களை சாப்பிடுவதால் உயிர்களுக்கு ஆபத்தில்லை. ஏனென்றால் முருங்கைக் காயைச் சாப்பிடுவதால் மரம் சாகாது; கத்திரிக்காயைச் சாப்பிடுவதால் செடி சாகாது, ஆகவே அது பாவம் இல்லை என்றார். நான் விடவில்லை. எழுந்து கீரைத் தண்டை அப்படியே பிடுங்கி, அடியோடு குழம்பு வைத்துச் சாப்பிடுகிறார்களே, அப்போது செடி முழுதும் சாகவில்லையா என்று கேட்டேன்.
மாணவர் பருவத்தில் கலைஞர் கேட்டதுதான் – ஆனால் இதுவரை யாரும் பதில் சொல்லத் தான் யாரையும் காணவில்லை.
