தந்தை பெரியார் என்ற மாமனிதரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றியதால்தான் நம்மையெல்லாம் மீண்டு எழ வைத்தது!
தந்தை பெரியாரின் சிந்தனை அடிப்படையில் தோன்றியதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி!
பெரியாரை எவ்வளவு கொச்சைப் படுத்தினாலும்; பெரியாருடைய அரசியலைக் காயப்படுத்தினாலும்
தமிழர் தலைவர் அய்யா அவர்கள் பதற்றப்படாமல் அவற்றை எதிர்கொள்கிற துணிச்சலைப் பெற்றிருக்கிறார்!
அதற்குக் காரணம், அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற பெரியாரியம் என்கின்ற கருத்தியல்தான்!
தந்தை பெரியாரின் சிந்தனை அடிப்படையில் தோன்றியதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி!
பெரியாரை எவ்வளவு கொச்சைப் படுத்தினாலும்; பெரியாருடைய அரசியலைக் காயப்படுத்தினாலும்
தமிழர் தலைவர் அய்யா அவர்கள் பதற்றப்படாமல் அவற்றை எதிர்கொள்கிற துணிச்சலைப் பெற்றிருக்கிறார்!
அதற்குக் காரணம், அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற பெரியாரியம் என்கின்ற கருத்தியல்தான்!
சென்னை, அக்.21 பெரியாரை எவ்வளவு கொச்சைப் படுத்தினாலும்; பெரியாருடைய அரசியலைக் காயப்படுத்தினாலும் தமிழர் தலைவர் அய்யா அவர்கள் பதற்றப்படாமல் அவற்றை எதிர்கொள்கிற துணிச்சலைப் பெற்றிருக்கிறார். அந்த அளவுக்கு அவர் பக்குவமும், முதிர்ச்சியும் அடைந்திருக்கிறார். அதற்குக் காரணம், அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற பெரியாரியம் என்கின்ற கருத்தியல்தான்! இந்த அரசியலை எந்த சக்தியாலும் சிதைக்க முடியாது; வீழ்த்த முடியாது என்கிற அதீதமான ஒரு நம்பிக்கைதான் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்கள்.
- தந்தை பெரியார் என்ற மாமனிதரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றியதால்தான் நம்மையெல்லாம் மீண்டு எழ வைத்தது! தந்தை பெரியாரின் சிந்தனை அடிப்படையில் தோன்றியதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி! பெரியாரை எவ்வளவு கொச்சைப் படுத்தினாலும்; பெரியாருடைய அரசியலைக் காயப்படுத்தினாலும் தமிழர் தலைவர் அய்யா அவர்கள் பதற்றப்படாமல் அவற்றை எதிர்கொள்கிற துணிச்சலைப் பெற்றிருக்கிறார்! அதற்குக் காரணம், அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற பெரியாரியம் என்கின்ற கருத்தியல்தான்!
- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா- மாநாடு
- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி!
- உங்கள் முன்னால் மிகுந்த மகிழ்ச்சியோடும்; பெருமையோடும் நின்று கொண்டிருக்கிறேன்
- நாம் வரலாற்றுப் பின்னணியோடு பொருத்திப் பார்க்க கடமைப்பட்டவர்களாக…
- பார்ப்பனர் அல்லாதார் என்கிற கருத்தியல் முகிழ்த்த காலம் – 1916
- ‘குடிஅரசு’ என்கிற ஏட்டைத் தொடங்கிய நாள்தான் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய நாள்!
- வரலாற்றில் நாம் காணக்கிடைக்கிற குறிப்புகள்!
- சமூகக் கட்டமைப்பைத் தகர்த்திட வெகுண்டு எழுந்தவர்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்!
- பெரியாரை விமர்சிக்கிற யாரையும் கண்டு ஆசிரியர் அவர்கள் பதற்றப்பட்டதில்லை; ஆத்திரப்பட்டதில்லை!
- தந்தை பெரியாரை தேடிப் படிக்கிற காலம் கனிந்திருக்கிறது!
- அரை வேக்காட்டுத்தனமாக அவதூறுகளை அள்ளி இறைக்கிறார்கள்!
- திருமாவளவன் போன்றவர்களால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!
- நாகர்கள்தான் இன்று திராவிடர்கள் என்றும், தமிழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்!
- சங் பரிவார்களின் முகமூடியை கிழிக்க வேண்டிய பொறுப்பு, தோலுரிக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது!
- தந்தை பெரியார் என்கிற ஒரு மாமனிதரின் குரல்தான்
- இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிற மிக முக்கியமான சவால்!
- பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம்தான் காரணம்!
- மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து நாம் வலுவாக நீடிக்கிறோம்!
- தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை விட, பெரியார் திடலின் அங்கீகாரம்தான் பெருமைக்குரியது!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா- மாநாடு
கடந்த 4.10.2025 அன்று திராவிடர் கழகம் சார்பில், செங்கல்பட்டு மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டின் காலை அமர்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஆற்றிய உரை வருமாறு:
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை; காலை அமர்வை தலைமை வகித்து, நெறிப்படுத்திக் கொண்டிருக்கிற தமிழினத்தின் பாதுகாப்பு அரண் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே! திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களே! முன்னணி தலைவர்களே! திரளாகக் கூடியிருக்கிற கருஞ்சட்டை வீரர்களே! என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி!
இன்று ஒரு நாள் முழுவதும் இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பெற்று, காலையில் தொடங்கி, இப்போது இந்த மண்டபம் முழுவதும் மூன்று தளங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் அமர்ந்து, இந்த அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மண்டபத்தைச் சுற்றிலும் கருஞ்சட்டைப் படைவீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். இந்த ஓர் அரங்கம் மட்டுமில்லாமல் மேலும், கீழும் என்று, மூன்று அரங்கங்களிலும் ஒரே நேரத்தில் கருஞ்சிறுத்தைகள் அமர்ந்து, இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டு நிறைவு விழாவிலே, பங்கேற்று உரையாற்றக்கூடிய ஒரு அரிய வாய்ப்பை எனக்கும் வழங்கியிருக்கிற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் முன்னால் மிகுந்த மகிழ்ச்சியோடும்; பெருமையோடும் நின்று கொண்டிருக்கிறேன்
செப்டம்பர் 17 தந்தை பெரியாருடைய பிறந்தநாள் விழாவில், பெரியார் திடலில் தமிழர் தலைவர் அவர்களுடைய தலைமையில் நான் உரையாற்ற வேண்டும் என்று துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் என்னிடத்தில் கேட்டார். நானும் என்னுடைய பயணத் திட்டத்தைப் பார்க்காமலேயே முதலில் மகிழ்ச்சியோடு ஒப்புதல் அளித்து விட்டேன். அதன்பிறகு அந்த நாளிலே லண்டனில் இருக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தது. திரும்பி வருவதற்கு மேலும் ஓரிரு நாள்கள் பிடிக்கும் என்கின்ற சூழலில், அய்யா அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்தேன். அப்போது அய்யா அவர்களும், துணைத் தலைவர் அவர்களும் என்னிடத்திலே சொன்னது, பிறந்தநாள் விழாவுக்கு வர இயலாவிட்டாலும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார்கள். உங்கள் முன்னால் மிகுந்த மகிழ்ச்சியோடும்; பெருமையோடும் நின்று கொண்டிருக்கிறேன்.
நாம் வரலாற்றுப் பின்னணியோடு பொருத்திப் பார்க்க கடமைப்பட்டவர்களாக…
கயமரியாதை இயக்கம் தோன்றி, நூறாண்டு கண்டிருக்கிறது. ஒரு நூற்றாண்டு இயக்கமாக இது இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிற போது, வியப்பும், மகிழ்ச்சியும் மேலிடுகிறது. இந்த இயக்கம் தோன்றாமல் இருந்திருந்தால்? பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்திலேயே நீடித்திருந்தால்? என்ன நேர்ந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்கிற போது, அச்சமாக இருக்கிறது. சுயமரியாதை இயக்கம் தோன்றியதால்தான்; காங்கிரஸ் இயக்கத்தை விட்டு தந்தை பெரியார் வெளியேறி வந்து இந்த இயக்கத்தை உருவாக்கியதால்தான்; இன்றைக்கு அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் இருக்கையிலே அமர முடிந்திருக்கிறது! திருமாவளவன் ஓர் இயக்கத்தின் தலைவராக மட்டுமின்றி, இன்றைக்கு நாடாளுமன்றத்தில் உங்களின் பிரதிநிதியாக பேச முடிகிறது! இந்த மாற்றங்கள், தந்தை பெரியார் எடுத்த அந்த முடிவால் நேர்ந்திருக்கிற விளைவுகள் என்பதை நாம் வரலாற்றுப் பின்னணியோடு பொருத்திப் பார்க்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.
பார்ப்பனர் அல்லாதார் என்கிற
கருத்தியல் முகிழ்த்த காலம் – 1916
கருத்தியல் முகிழ்த்த காலம் – 1916
வகுப்புவாரி உரிமை குறித்த தீர்மானங்களை, அன்றைய காங்கிரஸ் கட்சியை வழி நடத்தியவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் மறுதலித்ததோடு மட்டுமில்லாமல், காஞ்சிபுரத்தில் திரு.வி.க தலைமையிலான மாநாட்டில், பெரியார் முன்மொழிந்த வகுப்புவாரி உரிமை தீர்மானத்தை தோற்கடித்தார்கள். அதுதான் காங்கிரஸ் இயக்கத்திலிருந்து பெரியார் வெளியேறுவதற்கு மிக முக்கியமான, முதன்மையான காரணியாக இருந்திருக்கிறது என்பதை நாம் வரலாற்றில் அறிகிறோம்; பார்க்கிறோம்; படிக்கிறோம். வகுப்புவாரி உரிமை என்பது சமூகநீதி உரிமை! பார்ப்பனர்களே அந்தக் காலத்தில் எல்லாத் துறைகளிலும், எல்லாத் தளங்களிலும் நிறைந்திருந்தார்கள்; ஆதிக்கம் செலுத்தினார்கள்; ஆக்கிரமித்திருந்தார்கள் என்கிற நிலையிலே, பார்ப்பனர் விலக்கம், ‘The Exclusion of Brahmins’ என்கிற ஒரு Concept – ஒரு கருத்தியல், அன்றைக்கு நீதிக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களிடையே மலர்ந்திருந்த காலம். பெரியார் அப்போது நீதிக் கட்சியிலே இல்லை. ஆனால் நீதிக் கட்சியில் அப்போதே, அனைத்துத் துறைகளிலும் பார்ப்பனர்களே மேலோங்கியிருக்கிறார்கள்; ஆதிக்கம் செலுத்துகிறார்கள்; ஆக்கிரமித்திருக்கிறார்கள். பார்ப்பனர் அல்லாதார் யாரும் கல்வியைப் பெற முடியவில்லை. அரசுப் பணிகளில் அமர முடியவில்லை. வழக்குரைஞர்களாகக் கூட மாற முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலிலே, பார்ப்பனர் அல்லாதார் என்கிற கருத்தியல் முகிழ்த்த காலம். 1916 காலகட்டம்.
‘குடிஅரசு’ என்கிற ஏட்டைத் தொடங்கிய நாள்தான் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய நாள்!
அப்படி உருவான அந்த இயக்கம் நீதிக் கட்சி! பார்ப்பனர் அல்லாதார் என்கிற ஒரு சிந்தனையை மக்களிடையே வளர்த்தது. அதே காலகட்டத்தில் வட இந்தியாவிலே பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற சிந்தனை பெரிதாகத் தலைதூக்கவில்லை. இந்துக்கள், இசுலாமியர்கள் என்கின்ற பாகு பாட்டைத்தான் அப்போதும் உயர்த்திப் பிடித்தார்கள். மகாராட்டிர மாநிலத்தில் ஜோதிபாஃபூலே… அவரைத் தொடர்ந்து பல தலைவர்கள்… பின்னர் பெரியாருடைய சமகாலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் போன்றவர்கள் எல்லாம் அந்த மண்ணிலே தோன்றிய போதும், இந்த மண்ணில் Brahmin non Brahmin என்று இரண்டு வருண வகுப்பாக மக்களை பிரித்து அணிதிரட்டக் கூடிய; அமைப்பாக்கக் கூடிய; கூர்மைப்படுத்தக் கூடிய பணிகள் தீவிரமடைந்திருந்த காலம். பெரியார் இங்கே காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, புரட்சியாளர் அம்பேத்கர் அயல்நாடுகளில் பல்கலைக்கழக மாணவராக படித்துக் கொண்டிருந்த காலம். அவர் மாணவராக இருந்த காலம். நீதிக்கட்சி உருவாக்கிய அந்த அரசியல்; அந்தக் கருத்தியல் – காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய பெரியாரின் கவனத்தை ஈர்த்தது. அவர் ‘குடிஅரசு’ என்கிற ஏட்டைத் தொடங்கிய நாள்தான் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய நாள் என்று வரலாறுக் குறிப்புகள் நமக்குக் கூறுகின்றன.
1925 மே 2 அன்று, ‘குடிஅரசு’ முதன் முதலில் வெளியே வந்தபோது, ‘‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’’ என்கின்ற பாரதியாரின் பாடலோடுதான் அது வெளிவந்தது. மனு தர்மத்திற்கு எதிரான முழக்கங்களைக் கொண்டுதான் அது வெளிவந்தது. இந்த ஜாதி ஒழிப்புச் சிந்தனை; மனு தர்மத்துக்கு எதிரான சிந்தனை – அதுதான் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கருத்தியலாக முகிழ்த்தது. ‘குடிஅரசு’ ஏடு தொடங்கிய நாள்தான் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய நாள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்தக் கணக்கின் அடிப்படையில் தான் 2025 அய் நூற்றாண்டு என்று இன்றைக்கு திராவிடர் கழகம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.
வரலாற்றில் நாம் காணக்கிடைக்கிற குறிப்புகள்!
திராவிடர் கழகம் எப்படி உருவானது? நீதிக்கட்சியும் – சுயமரியாதை இயக்கமும் சேர்ந்த ஓர் இயக்கம்தான் திராவிடர் கழகம்! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி சுயமரியாதை என்கிற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் நீதிக்கட்சித் தலைவர்களோடு உறவாடிக் கொண்டிருந்தார்; அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். தேர்தல் அரசியலில் அவர்கள் வீழ்ச்சியடைந்த நிலையிலே துவண்டு விடக்கூடாது என்று அவர்களைத் தாங்கிப் பிடித்தார். நீதிக்கட்சி ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி. பிறகு தோற்றுப் போனது. காங்கிரஸ் வென்றாலும் அவர்களால் ஆட்சியை அமைக்க முடியாத நிலையில் சில மாதங்கள் கழித்து, ராஜாஜி முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார் 1937 லிலே. இவையெல்லாம் வரலாற்றில் நாம் காணக்கிடைக்கிற குறிப்புகள்.
சமூகக் கட்டமைப்பைத் தகர்த்திட வெகுண்டு எழுந்தவர்தான்
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்!
‘‘அப்படிப்பட்ட காலத்திலே நீதிக்கட்சி துவண்டுவிடக்கூடாது என்று அதைத் தாங்கிப்பிடித்து அதை ஊக்கப்படுத்தியவர் ஹிந்தித் திணிப்பு போராட்டத்திலே பங்கேற்று சிறையில் இருந்தபோது நீதிக்கட்சியின் தலைவராகவே தேர்ந்தெடுக்கப்பட்டார். சுயமரியாதை இயக்கம் கண்ட தலைவர்; தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்று ஒரே நேரத்தில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் இரண்டுக்கும் தலைவராக இருந்து பாடாற்றியவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்! அந்த இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடு அல்லது முதன்மைக் கோட்பாடு என்பது சமூகநீதி என்பதாகத்தான் இருந்தது! சமத்துவத்துக்கான அடித்தளம் சமூகநீதி! மனுதர்மத்தின் பெயரால் மன்னர் ஆட்சிக்காலத்திலே இங்கு நிலைநிறுத்தப்பட்ட இந்தச் சமூகக் கட்டமைப்பு; பிறப்பின் அடிப்படையிலான உயர்வு, தாழ்வு என்பதை நிலைநிறுத்தி இருக்கின்றது. நாமெல்லாம் பெருமையோடு பேசுகிற மாமன்னர்கள் தமிழ் மன்னர்கள்தான். தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு சமஸ்கிருதத்தை தூக்கிக் கருவறையிலே வைத்தார்கள். உள்ளூர் வள்ளுவர் – பண்டாரங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, அய்யர், அய்யங்கார்களை கொண்டு வந்து வைத்தார்கள். வேள்விகளை நடத்துவதிலும், யாகங்களை நடத்துவதிலும் ஆர்வம் கொண்டார்கள். சமஸ்கிருதம் தேவபாசை என்பதை ஏற்றுக் கொண்டார்கள். பிறப்பின் அடிப்படையிலான உயர்வு – தாழ்வை கடவுளின் விதி என்று நம்பினார்கள். அவர்களால் இங்கே நிலைநிறுத்தப்பட்ட இந்த வாழ்வியல் முறை; சமூகக் கட்டமைப்பை தகர்த்திட வேண்டும் என்கிற துணிச்சலைக் கொண்டு ஒரு போராளியாக வெகுண்டு எழுந்தவர்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்!
பெரியாரை விமர்சிக்கிற யாரையும் கண்டு ஆசிரியர் அவர்கள் பதற்றப்பட்டதில்லை; ஆத்திரப்பட்டதில்லை!
‘‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்! மனக்குகையில் சிறுத்தை எழும்!’’ என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பெரியாரைப் பற்றி விவரிக்கிற போது! மனக்குகையில் சிங்கம் எழும் என்று சொல்லவில்லை; மனக்குகையில் புலி எழும் என்று சொல்லவில்லை; மனக்குகையில் சிறுத்தை எழும் என்றார் பாரதிதாசன்! அதை எண்ணியெண்ணி நான் வியந்து போவதுண்டு! இந்த இயக்கத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்று பெயர் சூட்டியதும், பெரியாருடைய சிந்தனையும் எப்படிப் பொருந்திப் போகிறது என்று நான் எண்ணி சிலாகிப்பது உண்டு. விரக்தி அடைகிற போதெல்லாம்; மன வலி ஏற்படுகிற போதெல்லாம் – மேடைக்காக நான் சொல்லவில்லை – மாணவர் பருவத்தில் திராவிடர் கழக மேடைகளில் அய்யா அவர்கள் மற்ற தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு பொது வாழ்வுக்கு வந்த நான், ஒரு திராவிடர் கழகத் தொண்டனாகவே இருந்திருக்கலாம் இந்தக் களத்தில்; நாம் ஒரு போராளியாக இருந்திருக்கலாம் என்று நான் அடிக்கடி எண்ணிப் பார்ப்பது உண்டு. இதை நான் மேடைக்காகச் சொல்லவில்லை. தேர்தல் அரசியல் எவ்வளவு வலி மிக்கது என்பது உங்களுக்குத் தெரியும். எவ்வளவு அழுத்தங்களைத் தரக்கூடியது என்பது தெரியும். அவதூறுகளையும், அவமானங்களையும் நாள்தோறும் சந்திக்க வேண்டும் என்கிற இன்னல் நிறைந்த களம் என்பது உங்களுக்குத் தெரியும். அவ்வப்போது நான் நினைத்துப் பார்ப்பது உண்டு. பெரியாரை எவ்வளவு கொச்சைப் படுத்தினாலும்; பெரியாருடைய அரசியலைக் காயப்படுத்தினாலும் தமிழர் தலைவர் அய்யா அவர்கள் பதற்றப்படாமல் அவற்றை எதிர்கொள்கிற துணிச்சலைப் பெற்றிருக்கிறார். அந்த அளவுக்கு அவர் பக்குவமும், முதிர்ச்சியும் அடைந்திருக்கிறார். அதற்குக் காரணம், அவர் ஏற்றுக்கொண்டிருக்கிற பெரியாரியம் என்கின்ற கருத்தியல்தான்! இந்த அரசியலை எந்த சக்தியாலும் சிதைக்க முடியாது; வீழ்த்த முடியாது என்கிற அதீதமான ஒரு நம்பிக்கைதான். நான் இதுவரையில் அய்யா அவர்கள் பெரியாரை விமர்சிக்கிற யாரையும் கண்டு அவர் பதற்றப்பட்டதில்லை; ஆத்திரப்பட்டதில்லை. நான் அப்படி பார்க்கவில்லை அவரை! அவ்வளவு பக்குவமாக அதையெல்லாம் அவர் எதிர்கொள்கிறார்.
தந்தை பெரியாரை தேடிப் படிக்கிற காலம் கனிந்திருக்கிறது!
’பெரியார் உலகமயமாகி வருகிறார்’ என்று உலகம் முழுவதும் பயணம் செய்து பெரியார் அரசியலை இன்றைக்கு கொண்டு போய் சேர்க்கிறார். ஜப்பானின் டோக்கியோவில் இருந்து ஒரு தோழர் வந்து இங்கே புத்தகம் பெற்றுக் கொண்டார். பெரியாரை இன்றைக்கு உலகமே உற்று நோக்குகிறது! ஆழ்ந்து கற்கிறது! உலகத் தலைவர்களின் வரிசையில் வைத்துப் பார்க்கிறது! இதற்கு எந்த அடையாள அரசியலும் காரணமில்லை. அவருடைய அறிவார்ந்த அரசியல்தான் காரணம்! அவர் பேசிய மாந்த நேய அரசியல்தான் காரணம்! அவர் பரப்பிய; பரப்பிக் கொண்டிருக்கிற இந்த பகுத்தறிவு அரசியல்தான் காரணம்! லாபி செய்து இந்த அரசியலை பல நாடுகளுக்கும் கொண்டு போய் சேர்க்கவில்லை. எப்படி சாக்ரடீஸின் அரசியலை நாம் தேடி படிக்கிறோமோ, எப்படி மாமேதை காரல் மார்க்ஸின் கருத்தியலை நாம் தேடிப் படிக்கிறோமோ, அப்படி இன்றைக்கு உலகம் முழுவதும் ஜனநாயக சக்திகள்; முற்போக்குச் சக்திகள்; இடதுசாரி சக்திகள், தந்தை பெரியாரை தேடிப் படிக்கிற காலம் கனிந்திருக்கிறது! சூழல் மலர்ந்திருக்கிறது!
அரை வேக்காட்டுத்தனமாக அவதூறுகளை அள்ளி இறைக்கிறார்கள்!
சேலத்திலே நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள், தென்னிந்திய நல உரிமைச் சங்கம்; நீதி கட்சி; சுயமரியாதை இயக்கம்; பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்பதற்கெல்லாம் மாற்றாக அவர் முன்மொழிந்த ஓர் இயக்கத்தின் பெயர்தான், ”திராவிடர் கழகம்!” சொல்லாடல் தான் திராவிடர் என்கிற சொல். பார்ப்பனர் அல்லாதார் என்கிற சொல்லுக்கு மாற்றாக, இனி நாம் கையாள வேண்டிய சொல், திராவிடர் என்கிற சொல் என்று தந்தை பெரியார் ஒரு தீர்மானமாக அதனை முன் வைக்கிறார். திராவிடர் கழகம் உருவாவதற்கு முன்பே ”தமிழ்நாடு தமிழருக்கே!” என்று சொன்னவர் தந்தை பெரியார். அவரைத் தமிழர், தமிழ்ப் பகைவர் என்று சிலர் உளறிக் கொண்டிருக்கிறார்கள்; பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்; அரை வேக்காட்டுத்தனமாக அவதூறுகளை அள்ளி இறைக்கிறார்கள்.
எங்களுக்குக் கவலையாக இருக்கிறது. ஆசிரியர் அதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை. அவருக்கு எல்லா நீள, அகலமும் தெரியும். எல்லா உயரமும் தெரியும், ஆழமும் தெரியும் என்பதனால் அவர் அமைதி காக்கிறார். இவர்களெல்லாம் எந்த அளவுக்குத் துள்ளுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். யாருடைய பிடியில் இவர்கள் இருக்கிறார்கள், எந்த அளவுக்கு இவர்களை குரைக்க விடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆகவே, இதற்காக நாம் நம்முடைய சக்தியை விரயப்படுத்த வேண்டாம் என்கிற பக்குவமும், முதிர்ச்சியும் தமிழர் தலைவர் அய்யா அவர்களிடத்திலே வெளிப்படுவதை என்னால் பார்க்க முடிகிறது. ஆனால், என்னால் உள்ளபடியே சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர் அடைந்திருக்கிற இந்தப் பக்குவத்தை, நாம் அடைவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமென்று தெரியவில்லை.
திருமாவளவன் போன்றவர்களால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!
தி.மு.க.வை எதிர்க்கிறார்கள் என்பதற்காக நாம் ஆத்திரப்படுகிறோம் என்று சில அற்பர்கள் பேசுகிறார்கள். தி.மு.க. ஓர் அரசியல் கட்சி; ஆண்ட கட்சி; ஆண்டுகொண்டிருக்கிற கட்சி; எத்தனையோ பல எதிரிகளையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்ட கட்சி. அதை யாரும் தாங்கிப் பிடிக்க வேண்டிய தேவை இல்லை. முட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை. முட்டுக் கொடுத்தல் என்றால், சாயும் நிலையில் இருக்கிற ஒன்றுக்குத்தான் முட்டுக்கொடுக்க வேண்டும். அது கோலோச்சுகிற கட்சி. அதற்கு யார் போய் முட்டுக்கொடுப்பார்கள்? அது ஆளும் கட்சி; ஆளுகிற பீடத்தில் இருக்கிற கட்சி. அதற்குப்போய் திருமாவைப் போன்றவர்கள், எங்களைப் போன்றவர்கள், இடதுசாரிகளைப் போன்றோர் எல்லாம் முட்டுக் கொடுக்கிறார்கள் என்கிறார்கள். அப்படி அல்ல. திராவிடம் என்கிற அரசியலையே கேள்விக்குள்ளாக்குகிற போது, அதை திருமாவளவன் போன்றவர்களால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
நாகர்கள்தான் இன்று திராவிடர்கள் என்றும், தமிழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்!
திராவிடம் என்பது ஆரியம் என்ற ஒரு கருத்தியலுக்கு எதிராகத் தோன்றிய மகத்தான தத்துவச் சொல்லாடல் அது! பண்டிதர் அயோத்திதாசர் அவர்களால் பேசப்பட்ட அரசியல் அது! புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் இந்த தேசம் முழுவதும் நாகர்கள் வாழ்ந்தார்கள்; அந்த நாகர்கள்தான் இன்று திராவிடர்கள் என்றும், தமிழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்ட ஒன்று. அதனால்தான் நான் சொன்னேன், பார்ப்பனரல்லாதார் அனைவருமே திராவிடர்கள் தான்! புரட்சியாளர் அம்பேத்கரும் திராவிடர் தான் என்று நான் சொன்னேன். ஆக, திராவிடர் கழகத்திற்கு எதிராகப் பேசுகிறார்கள் என்று திருமாவளவன் அவர்களோ, வீரபாண்டியன் அவர்களோ, ஜவாஹிருல்லா அவர்களோ கடந்து போனால், நாங்கள் பேசுகிற அரசியலின் அடிமடியிலேயே கைவைப்பதாக போய் முடியும். நாங்கள் பேசுகிற அரசியலுக்கே அது ஆபத்து. இது திராவிடர் கழகம் பேசுகிற அரசியல். அது ஒரு தனி இயக்கம் பேசுகிற அரசியல் என்று கடந்து போய்விட முடியாது. எந்தப் பொறுப்புணர்வில் இருந்து இதை நாம் எதிர்கொள்கிறோம் என்பதுதான். விமர்சிக்கிறோம். விமர்சிப்பவர்களை கருத்தியல் சார்ந்துதான் விமர்சிக்கிறோம். காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் அல்ல.
சங் பரிவார்களின் முகமூடியை கிழிக்க வேண்டிய பொறுப்பு, தோலுரிக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது!
தி.மு.கவை ஆட்சி அதிகார பீடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று துடிப்பது ஆட்சி அதிகாரத்தை விரும்புகிற ஒவ்வொருவருக்கும் இருக்கிற ஆசையாக இருக்கலாம். ஆனால், அது தி.மு.க. என்கிற கட்சியோடு நின்றுவிடுகிற அரசியலாக இல்லை. தி.மு.க.வும் பேசுகிற, விடுதலைச் சிறுத்தைகளும் பேசுகிற, இடதுசாரிகளும் பேசுகிற அரசியலுக்கே வேட்டு வைக்கிற முயற்சியாக இருக்கிறது. சங் பரிவாரங்களின் முயற்சியாக இருக்கிறது. எனவேதான், சங் பரிவாரங்களின் தூதுவர்களாக இந்தக் களத்திலே, பிரதிநிதிகளாக இந்தக் களத்திலே இறங்கியிருப்பவர்கள் எந்த முகமூடி போட்டிருந்தாலும், அந்த முகமூடியை கிழிக்க வேண்டிய பொறுப்பு, தோலுரிக்க வேண்டிய பொறுப்பு! அவர்களை மக்களின் முன்னால் அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு, மேடையில் அமர்ந்திருக்கிற முற்போக்கு சக்திகளாக இருக்கிற ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று உணர்ந்திருக்கிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தந்தை பெரியார் என்கிற
ஒரு மாமனிதரின் குரல்தான்
ஒரு மாமனிதரின் குரல்தான்
சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகுதான், இந்த தமிழ்ச் சமூகத்தில் காலம் காலமாக புரையோடிக் கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போர்க் குரல் ஒலித்தது. இது கடவுள் எழுதிய தீர்ப்பு, தலைவிதி என்று கடவுளின் மீது பாரத்தை போட்டுவிட்டு, இந்த நரகத்திலே உழன்று கொண்டிருக்கிற மக்களை மீண்டெழ வைத்தது! உரிமை குரல் எழுப்ப வைத்தது! அந்த துணிச்சல் இங்கே முகிழ்ப்பதற்கு, தந்தை பெரியார் என்கிற ஒரு மாமனிதரின் குரல்தான்; அவருடைய அரசியல்தான் காரணம் என்பதை நன்றிப் பெருக்கோடு களத்தில் நின்று உரத்துப் பேசுகிறோம்! இதில் வேறு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது; உள்நோக்கமும் கிடையாது.
இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிற
மிக முக்கியமான சவால்!
மிக முக்கியமான சவால்!
மராத்திய மண்ணிலே 1925–லே தோன்றிய ஆர்.எஸ்.எஸ். என்கிற இயக்கம் ஆரியர்களுக்காக, அதிலும் குறிப்பாக நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் வெளியிட்டிருக்கிற அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப் போல, பார்ப்பனர்களிலேயே உயர்ந்த பார்ப்பனர் நாங்கள்தான் என்று இன்றைக்கும் தம்பட்டமடித்துக் கொண்டிருக்கிற சித்பவன் என்கிற பார்ப்பனர்கள், தங்களுக்காக உருவாக்கிக் கொண்ட ஓர் இயக்கம்தான்; தொண்டு நிறுவனம் என்கிற பெயரால் ஆர்.எஸ்.எஸ். என்கிற இயக்கம் உருவானது. அவர்கள் முன்மொழிந்த அந்த அரசியல் இன்றைக்கு இந்தியா முழுவதும் வெகு வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்துவிட்டது. டில்லியிலும் அவர்கள் ஆட்சி அதிகார பீடத்திலே பதினோரு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார்கள். டில்லி யூனியன் பிரதேசத்தில் இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சி. அவர்கள் உருவாக்குகிற பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்க வரலாறு. இதுதான் நாளை தமிழ்நாட்டிலும் நடக்கப் போகிறது. இதற்கு இடம் கொடுக்கப் போகிறோமா என்பதுதான் நம் முன்னால் இருக்கிற கேள்வி. தி.மு.க.வை வீழ்த்திய பிறகு; திராவிட அரசியலை வீழ்த்திய பிறகு; பெரியார் அரசியலை வீழ்த்திய பிறகு, வீழ்த்தத் துடிக்கிறவர்கள் என்ன மாற்றுத் திட்டத்தை முன்வைக்கப் போகிறார்கள்? இவர்களால் தி.மு.க. அமர்ந்திருக்கிற ஆட்சி பீடத்தில் போய் அமர்ந்துவிட முடியுமா? அப்படியே அமர்ந்தாலும் பெரியார் பேசிய அரசியலை உரத்துப் பேச முடியுமா? ஆகவே, இவர்கள் யாருக்கு வழி வகுக்கிறார்கள்? யாருக்கு இடம் கொடுக்கிறார்கள்? யாருக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள் என்றால், பெரியார் அரசியலையே முற்றும் முழுதுமாக சிதைக்க வேண்டும் என்கிற சங் பரிவாரங்களுக்குத் துணை போகிறார்கள். இதை யார் அம்பலப்படுத்துவது? இதுதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிற மிக முக்கியமான சவால். மிக மிக முக்கியமான சவால். அ.தி.மு.க.வையும், தி.மு.க.வையும் ஒரே நேரத்திலே வீழ்த்தி விட்டால் அடுத்து நாம்தான் இங்கே கோலோச்ச முடியும் என்று கணக்குப் போட்டு காய்களை நகர்த்துகிறது பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும். இதை மறுக்க முடியுமா? டில்லியிலே நேரடியாக காங்கிரசை வீழ்த்த முடியாத நிலையிலே அன்னா ஹசாரேவின் போராட்டத்தைப் பயன்படுத்தி, கெஜ்ரிவாலை ஊக்கப்படுத்தி, அவரை ஆட்சியிலே அமரவைத்து, இன்றைக்கு அவரை தூக்கி எறிந்துவிட்டு பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்துவிட்டது. மகாராட்டிராவிலே அதே உத்திதான். அரியானாவிலும் அதே உத்திதான். ஒடிசாவிலே அதே உத்திதான். கருநாடகாவிலே இன்றைக்கு வலுப்பெற்ற சக்தியாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். ஆந்திராவிலும் அதிகாரத்தை இன்றைக்கு பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்தியாவிலே இன்றைக்கு கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் தான் அவர்களின் ஜம்பம் பலிக்கவில்லை. மேற்கு வங்கத்திலும் காங்கிரசைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு சக்தியாக இன்றைக்கு வளர்ந்து நிற்கிறார்கள்.
பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம்தான் காரணம்!
தமிழ்நாட்டில் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும்? தயை கூர்ந்து எண்ணிப்பார்க்க வேண்டும். அகில இந்திய அளவில் எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து நீடித்து வருகிறது! இயங்கி வருகிறது! ஹிந்தியை எதிர்க்க வேண்டும் என்கிற உணர்வு இப்போதுதான் தென்னிந்திய மாநிலங்களில் சிலருக்கு வந்திருக்கிறது. ஆனால் இதனைத் தொடர்ந்து 1938 காலகட்டத்திலிருந்து பெரியார் தலைமையிலே தொடங்கிய முதல் மொழி போராட்டம், ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இன்றைக்கும் தமிழ்நாட்டிலே அது கனன்று கொண்டிருக்கிறது. அடைகாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வலிமை பெறுவதற்கு சுயமரியாதை இயக்கம் தோன்றியதுதான் காரணம்! பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம்தான் காரணம்! சற்று சிந்தித்துப் பாருங்கள். ராஜாஜி உட்கார்ந்த நாற்காலியில் முத்தமிழறிஞர் கலைஞர் அமர முடிந்ததென்றால், அது பெரியாரின் உழைப்புக்கு கிடைத்த விளைச்சல் என்பதை மறந்து விடக்கூடாது. அவருடைய தனிப்பட்ட திறன் ஒரு பக்கம் இருக்கலாம். திமுக என்ற இயக்கம் எங்கிருந்து உருவானது? அண்ணாவால் உருவானது! அண்ணா எந்த பாசறையில் வளர்ந்தவர்? அவர் எந்த அரசியலை மக்களிடத்திலே பேசினார்? பெரியாரின் பாசறையில் வளர்ந்தவர்! அதனுடைய தொடர்ச்சிதான் இன்றைக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லுகிற அந்த அறிவிப்பு! அந்த துணிச்சலான அறிவிப்பு!
மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து நாம் வலுவாக நீடிக்கிறோம்!
திராவிடர் கழகத்தின் அரசியலை உள்வாங்கிய காரணத்தினால்தான், நமக்கு இடதுசாரிப் பார்வை இருக்கிற காரணத்தினால்தான், சமூகநீதி சிந்தனை மேலோங்கி இருக்கிற காரணத்தினால்தான் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து நாம் வலுவாக நீடிக்கிறோம். இந்த அணி வெற்றி பெற வேண்டும் என்று போராடுகிறோம். இந்த ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்று போராடுகிறோம். அதைத்தான் நம்முடைய தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களும், தேர்தல் அரசியலில் ஈடுபாடில்லாத நிலையிலும் எப்படி பெரியார் தேர்தல் அரசியலில் ஈடுபட்ட நீதிக் கட்சிக்கு துணையாக இருந்தாரோ, அதைப்போல இன்றைக்கு தமிழர் தலைவர் அவர்கள், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தேர்தலில் பங்கேற்கிற கட்சிகளை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார். அந்த வலுவை பெருக்கிக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை விட, பெரியார் திடலின் அங்கீகாரம்தான் பெருமைக்குரியது!
தி.மு.க.வும், தி.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றால், விடுதலைச் சிறுத்தைகள் மூன்றாவது குழல் என்று தமிழர் தலைவர் சொல்லுகிறார்கள் என்றால், அவருடைய நாவிலிருந்து இப்படியொரு அங்கீகாரம் பிறக்கிறது என்றால், அது திருமாவளவனுக்கு கிடைத்த பெரும் பேறு என்று நான் எண்ணிப் பெருமைப்படுகிறேன்! தமிழர் தலைவர் அவர்களுடைய வாழ்த்துகளாக எண்ணி நான் பெருமைப்படுகிறேன்! பெரியார் அரசியல் பேசுகிற இயக்கங்கள் வரிசையில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அந்த மூன்றாவது இடத்திலே இடம் பெறுகிற என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம்! தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை விட, பெரியார் திடலின் அங்கீகாரம்தான் பெருமைக்குரியது என்று எண்ணி நான் பெருமைப்படுகிறேன்! தமிழர் தலைவரின் அங்கீகாரம்தான் பெருமைக்குரியது! அவர் நூறாண்டுகளுக்கு மேலாக வாழவேண்டும். வந்ததும் கவிஞர் அய்யா அவர்கள் சொன்னார். பக்கத்திலே இருக்கின்ற பெரியவருக்கு 102 வயது என்றார். அடுத்த பெரியவரைக் காட்டி 103 வயது என்றார். இன்னும் வியப்படைந்தேன். கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர்கள் 102 ஆண்டுகள் வாழ முடிகிறது; கடவுள் மறுப்பைப் பேசுகிறவர்கள் 103 ஆண்டுகள் வாழ முடிகிறது. தமிழர் தலைவர் அவர்களும் 125 ஆண்டுகள் வாழ வேண்டும்; எங்களை வழிநடத்த வேண்டும்; எங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற விழைவை வெளிப்படுத்தி, என்னென்றும் விடுதலைச் சிறுத்தைகள் மூன்றாவது குழலாக இருந்து இந்த சமூகநீதியை பாதுகாக்கிற களத்தில் துணை இருப்போம் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கிறேன்.
நன்றி! வணக்கம்!
– இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்
எம்.பி. அவர்கள் உரையாற்றினார்.
