பெய்ஜிங், அக்.21 உலக வர்த்தக அமைப்பின் சீன நிரந்தர பிரதிநிதியான சீனாவின் மூத்த வர்த்தக பேச்சுவார்த்தையாளர் லீ செங்காங், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனா – அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் கட்டணப் போருக்கு மத்தியில், வர்த்தக சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவது குறித்து ஒப்புக்கொண்ட பின்னர், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பேச்சுவார்த்தை ஒப்பந்தம் ஏற்பட்டது.
டிரம்ப் சீன இறக்குமதிகள் மீது 100 சதவீத வரியை விதித்தார். இது வர்த்தக பதட்டங்களைத் தூண்டியது. அமெரிக்காவின் பதிலடி, உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையிலான உறவுகளைப் பாதிக்கும் ஒரு நேரடி சூழ்நிலையை உருவாக்கியது.
அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், லீ செங்காங், கட்டுப்பாடற்றவர் என்று விமர்சித்தார். ஆகஸ்ட் மாதம் வாஷிங்டனுக்கு சென்றபோது,”சீனக் கப்பல்களுக்கான எங்கள் கப்பல் கட்டணங்களை அமெரிக்கா தொடர்ந்தால், சீனா உலக அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும்” என்று லீ அச்சுறுத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் இன்று உலக வர்த்த அமைப்பின் (WTO) நிரந்தர பிரதிநிதி பதவியில் இருந்து லீ செங்காங் நீக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. இந்த நீக்கம் குறித்து, பெய்ஜிங்கின் வெளியுறவு அமைச்சகம் AFP இடம் “இது ஒரு வழக்கமான பணியாளர் மாற்றம்” என்று கூறியுள்ளது.
இந்தியாவின் மின்சார வாகனங்கள், பேட்டரிக்கு வழங்கப்படும் மானியங்களால், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் பாதிப்பதாக, உலக வர்த்தக அமைப்பில், சீனா அண்மையில் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உலக வர்த்தக அமைப்பின் சீன நிரந்தர பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளார்.
