சென்னை, அக். 21- நானோ அறிவியல், தொழில்நுட்பம் குறித்து இளநிலை, முதுநிலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி யாளர்களுக்கு ஆன்லைனில் 2 வார சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக திகழும் அழகப்பா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நானோ அறிவியல், தொழில்நுட்ப மய்யம் இயங்கி வருகிறது. இங்கு நானோ அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான கருத்தரங்கம், பயிலரங்கம், சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோருக்கு நானோ அறிவியல், தொழில்நுட்பம் குறித்த குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த இணையதளம் பயிற்சி வரும் நவம்பர் 26ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9ஆம் தேதி நிறைவடையும். இதில், நானோ அறிவியல், தொழில்நுட்பத்தின் அடிப்படை விஷயங்கள், இத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள், உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள் குறித்து கற்றுத் தரப்படும். சுகாதார நலன், சுற்றுச்சூழல், மின்சாரம், மின்சேமிப்பு போன்றவற்றில் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்தும் விளக்கப்படும். இந்த 2 வார கால இணையதளம் பயிற்சியில் பங்கேற்க விரும்பு வோர் நவ.18-க்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களை அறிய 8098953365 என்ற எண்ணிலோ, [email protected] என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
