‘‘இன்று (20.10.2025) தீபாவளி கொண்டாட்டத்திற்கு மனது வைப்பாரா, வருண பகவான்? குட்டீஸ் வேண்டுதல்’’ என்ற ஒரு செய்தியை இன்றைய (20.10.2025) ‘இனமலர்’ நாளேடு வெளியிட்டிருக்கிறது!
மழையை வருண பகவான்தான் வரவழைக்கிறார் என்ற மூடத்தனத்தை சிறிய பிஞ்சு உள்ளங்களில் நஞ்சுபோல் – நகைச்சுவை என்ற போர்வையில் பரப்பி, அவர்களது மூளையை இள வயதிலேயே பழுதாக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழைமைப் பாசியை, குழந்தைகள் மூளையில் ஏற்றுவது எப்படி என்பது புரிகிறதா?
மழை எப்படி உருவாகிறது என்று, ஆரம்ப வகுப்புகளில் அறிவியல் விளக்கம் தரும் நிலையில், இப்படி அவர்கள் மனதில் மூடநம்பிக்கை அழுக்கை ஏற்றி, ஆரியம் – ஸநாதனம் அதன் விஷ(ம)யதானத்தை செய்து வருவதை முதற்கடமையாகக் கொண்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் குழந்தைப் பருவத்திலேயே வெறுப்பு– மனித குலத்தைத் துண்டாடி, மதவெறி, ஜாதிவெறியை வளர்க்கும் பிரச்சாரப் பாடங்களைத்தானே அதன் ‘‘ஷாகாக்களில்’’ தொடங்கி, பல்கலைக் கழகங்கள் வரை ஏ.பி.வி.பி. என்ற மாணவர் அமைப்பிலும் செய்து, பிஞ்சுகள், மாணவர்களை ஜாதி, மத ரீதியாக பிளவுப்படுத்தி, தங்களது ஆயுதக் கிடங்குக்கான கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதை பஞ்சம, சூத்திர சொரணையற்ற சோற்றுத் துருத்திகள் சரி வர உணர்ந்தால், புரிந்தால், ஆரியத்தின் கூலிப்படையாகி, அம்புகளாகி வம்புகள் செய்ய முனைவார்களா?
வருண பகவானை வேண்டும் இக்குட்டீஸ் பட்டாசு வெடித்துத் தீக்காயங்களுக்கு ஆட்பட்டு, மரண ஓலமும் சில இடங்களில் கேட்கும் அவலத்தை அறிந்து, அக்னி பகவானிடம் ‘அப்ளிகேஷன்’ போடுவார்களா? அத்தீக்காயம் ஏற்படுத்திய அவரை விரட்டாமல், ஆஸ்பத்திரியில் தீப்புண் நிவாரணி மருத்துவப் பயனாளிகளுக்குத் தனி வார்டு?
‘அக்கினி பகவானுக்கு’ எதிராக அரசுகளே தத்தம் தனித் துறைகளை தனித்தனியே ஏற்படுத்தி, மக்களை அவரிடமிருந்து காப்பாற்றி வருகின்றனவே!
தீயணைப்புத் துறை ‘அக்னி பகவானுக்கு’ எதிர்ப்பு தெரிவித்து, அதை விரட்டி அணைத்து ஓடச் செய்யும் துறைதானே!
அதுபோல குடும்பக்கட்டுப்பாடு கருச்சிதைவுச் சட்டம் இவை எல்லாம் Anti Bramma– பிரம்மா என்ற சிருஷ்டி கர்த்தாவை விரட்டும் இயக்கம்தானே!
‘குட்டீஸ்’க்கு அதையும் புரிய வைக்குமா, ‘இனமலர்’?
‘மழை வருமா, வராதா?’ என்று வானிலை ஆய்வு கூறுவதை, ஊடகங்களான, தொலைக்காட்சி முதல் தொலைபேசியில் வரை கூறும் நிலையில், இப்படி ஒரு புராண மூடநம்பிக்கைப் பிரச்சாரமா?
இந்த லட்சணத்தில் செயற்கை நுண்ணறிவு AI என்ற அறிவியலும் அவர்களுக்குச் சொல்லித் தருவது விசித்திரம் அல்ல.
‘‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’’ இங்கே இந்தப் ‘புண்ணிய பூமி’யில் கிடையாது.
புது விதி – புதுப் பாட்டு
‘‘புதியன வருதலும், பழையன இருத்தலும்’’ –உருப்படுமா இந்த (அஞ்)ஞானபூமி!
வெட்கம்! மகாவெட்கம்!!
