பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்தரப்பிரதேசத்தின் அவலம் ‘‘மதம் மாறி மணம் முடித்த இணையர்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் காவலில்!’’ காவல்துறையினருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம்

அலகாபாத், அக்.20 உத்தரப்பிரதேசத்தில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இணையரை ‘சமூக அழுத்தம்’ காரணமாக சட்டத்திற்குப் புறம்பாகக் காவலில் வைத்திட்ட காவல்துறையினருக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்தக் காவல் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளை மீறியதாகும். சமூக அழுத்தம் காரணமாக சட்டத்திற்குப் புறம்பான வழியில்  திருமணம் முடித்த இணையரை காவல்  நிலைய காவலில் வைத்தது, சட்ட ஆட்சிக்கு உகந்தது அல்ல; காவல்துறையினரின் அந்தசெயல் சட்டத்திற்கு புறம்பான ஆட்சி நிலவிடுவதை உறுதி செய்திடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முஸ்லீம் மதத்தைச் சார்ந்த ஒரு ஆணும், இந்துப் பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் காவலில் வைக்கப்பட்ட நிலையில், விடுமுறை என்றும் கருதாமல் அந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து அந்த இணையரை விடுவித்தது.

அந்த விசாரணையில் விடுவிக்கப்பட்ட இணையர் மீது எந்தவித சட்டத்தினை மீறிய செயல்களை செலுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

பெண்ணின் தந்தை  மைனர் நிலையில் உள்ள தனது மகள் கடத்தப்பட்டுள்ளார் என காவல்துறையில் புகார் அளித்தார். முதல் தகவல் அறிக்கையின்படி திருமணம் செய்து கொண்ட  இருவரும் கைது செய்யப்பட்டார்கள். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொழுது, அந்தப் பெண் தான் ஒரு ‘வயதுக்கு வந்தவர்’ என்ற நிலையில் ‘அலி’ எனும் பெயர் கொண்டவரை தனது விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்திற்கு வந்த ஆள் கொணர்வு மனுவின் அடிப்படையில் இணையர் இருவரும் கடந்தசனிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தங்களை அந்த பெண்ணின் தந்தையும் அவரது கூட்டாளிகளும் காவல்துறையின் உதவியுடன் கடத்திச் சென்றதாக தெரிவித்தனர். அலிகாரில்  சட்டத்திற்கு அப்பாற்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

உயர்நீதிமன்றம், மாநில அரசும் அதன் சட்ட அமலாக்க அதிகாரத் துறையும்  தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குடிமக்களின் சுதந்திரத்திற்கே பயன்படுத்திட வேண்டும்; சமூக அழுத்தங்கள், குறுக்கீடுகளுக்கு இடமளித்து அந்த சுதந்திரத்தை மட்டுப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.

மதம் மாறி திருமணம் புரிபவர்களுக்கு எதிராக அரசின் அங்கமாக உள்ள காவல்துறையே செயல்பட்டு வருவதும், அதனை நீதிமன்றங்கள் கண்டித்து திருமணம் செய்து கொண்ட இணையர்களை காவலிலிருந்து விடுவிப்பதும் பா.ஜ.க. ஆட்சி நடத்திடும் உத்தரப்பிரதேசத்தில் வழக்கமான  தொடர் நடவடிக்கையாக நீடிக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *