முரம்பு, அக். 20- ‘‘எல்லோருக் கும் எல்லாம் கிடைக்க வேண் டும்; குறிப்பாகக் கல்வி அனை வருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தோன்றி, இன்றைக்கும் அதற்காகப் போராடி வருவது திராவிட இயக்கம் தான்” என்று கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார்.
ராஜபாளையம் கழக மாவட்டம் முரம்பு பகுதியில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவும், சமூகநீதி பெருவிழாவும் செப்டம்பர் 21 அன்று காலையில் நடை பெற்றன.
இந்த விழாவின்போது குருதிக் கொடை வழங்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப் பட்டிருந்தது. அதில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குருதிக் கொடை வழங்கினர். ராஜபாளையம் பகுதியைச் சுற்றியுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்றிடம் பெற்ற இருபால் மாணவர்களுக்கும் தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
முரம்பு பாவாணர் கோட்டப் பாசறை அரங்கத்தில் காலை 8:00 மணிக்குக் குருதிக் கொடை வழங்கும் விழா தொடங்கியது. இதை பெரியார் பெருந்தொண்டர் தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடை பெற்ற பெரியார் – அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் சமூக நீதிப் பெருவிழாவுக்கு ராஜபாளையம் ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகச் செயலாளர் சோ ஞானராசு தலைமை வகித்தார்.
ராஜபாளையம் அரசுப் பணிகள் வழக்குரைஞர் பா.குணாளன், தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழக ஒருங்கிணைப்பாளர் மு.பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகத்தின் செயலாளர் ச.இம்மானுவேல் வரவேற்புரை ஆற்றினார். அதன் பொருளாளர் வழவை முத்தரசன் தொடக்க உரையாற்ற, நிகழ்வை ஒருங் கிணைத்து நடத்திய குருதிக் கொடைக் கழகத்தின் தலைவர் கோ.பெத்தையா ஏற்பாட்டுரை நிகழ்த்தினார்.
பெரியார் பற்றாளர் ஆ.பன்னீர்செல்வம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் இளங்கண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். அதில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் திராவிட இயக்கம் ஆற்றியுள்ள பணிகளை எடுத்து விளக்கினர். திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல திருப்பதி, ராஜபாளையம் மாவட்ட கழக தலைவர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.
நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கு ரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார்.
100 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடன் சங்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் என்று தொடங்கப்பட்ட அமைப்புகள் எல்லாம் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் சமூகத்தை உருவாக்க அரும்பாடுபட்ட வரலாற்றை எடுத்துரைத்தார். தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் விளைவால் தமிழ்ச் சமூகம் அடைந்துள்ள நன்மைகளை எடுத்துக் காட்டியும், கல்விக்காக திராவிட இயக்கம் தொடர்ந்து ஆற்றி வரும் அரும் பணிகளை பட்டியலிட்டும் உரையாற்றினார். கல்வியால் பெற்ற இடத்தை இன்றைய ஜாதி, மத, மருந்து, சினிமா, பக்தி, பதவி போதைகள் காரணமாக தமிழ்ச் சமூகம் இழந்து விடக் கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மக்கள் தொகையில் சரிபாதி யாக இருக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களின் கல்வி அறிவு சொத்துரிமை ஆகியவற்றுக்கும் தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் ஆற்றியிருக்கும் பணிகளையும், சட்ட ஏற்பாடுகளையும் அதனால் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகளையும் எடுத்துரைத்தபோது கூடியிருந்த மாணவிகளும் தாய்மார்களும் வியப்போடு கேட்டு பெரிதும் வரவேற்றனர்.
குருதிக் கொடை, விழிக் கொடை, உடல் கொடை, உடல் உறுப்புக் கொடை ஆகியவை ஜாதியையும், மதத்தையும் கடந்து மனிதர்களை ஒன்றிணைப்பதை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டி, அவற்றை ஊக்குவித்து அதனையே முக்கியச் செயல்பாடாக மேற்கொண்டு வரும் தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகத்தையும் அதன் பொறுப்பாளர்களையும் வெகுவாகப் பாராட்டினார். ஜாதியால் பிளவுபட்டுக் கிடக்கும் திராவிட சமூகம் இச் சகதிகளில் இருந்து வெளியே வருவதற்குத் திராவிட இயக்கத்தை, தந்தை பெரியாரைப் பற்றுக் கோடாகத் தமிழர்கள் பற்றிக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் களுக்குச் சான்றிதழும், கேடயமும், ரொக்கப் பரிசு களும் வழங்கப்பட்டன. பன் னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோரும் நெகிழ்ச்சியோடு மேடையில் வந்து பரிசினை பெற்றனர். நிகழ்வின்போது பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் மு.இளம்பிறையான் நன்றி உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். ஒவ்வோர் ஆண்டும் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவைக் குருதிக் கொடை வழங்கியும், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகம் மிகச் சிறப்பாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
