சென்னை, அக்.20 வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைகின்ற நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
வடகிழக்கு பருவமழை
தமிழ்நாட்டில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று (19.10.2025) உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வருகிற 24ஆம்தேதி உருவாக இருப்பதாக கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே தீபாவளிக்கு மறுநாள் உருவாவதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கோவை, நீலகிரி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்திலிருந்து ஆய்வு மேற்கொண்டு, ஆயத்த நிலை மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல மாவட்ட நிருவாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
முன்னெரிக்கை நடவடிக்கை
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் இன்னும் கனமழை பெய்யும் என வானிலை மய்யம் கூறியுள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். இன்று மட்டுமல்ல, கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆட்சியர்களிடம் நிலைமையை கேட்டறிந்தார்.
டெல்டா பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்வதால் பயிர்கள் சேதமடைந்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் பொய் கூறுகிறார். மழையினால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் விவசாயப் பெருங்குடி மக்கள் பாதிக்கப்படாத வகையில், கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்திடவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள நெல் மூட்டைகள் விரைவாக கிடங்குகளுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. விருதுநகர், தேனி, ராமநாதபுரம் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. இருந்தாலும் அங்கு எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.” என்றார்.
