மேட்டூர், அக்.20 மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை, கருநாடகா அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணை நடப்பாண்டில் ஏற்கெனவே 6 முறை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இந்நிலையில், காவிரியில் நீர்வரத்து குறைந்தது, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் (18.10.2025) விநாடிக்கு 9,026 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (19.10.2025) காலை 10,374 கனஅடியாக அதிகரித்தது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான நீர் தேவை குறைந்தது. எனவே, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் 118.55 அடியில் இருந்து 119 அடியாகவும், நீர் இருப்பு 91.17 டிஎம்சியில் இருந்து 91.88 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் 7ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், நீர்வளத் துறை அதிகாரிகள், அணையின் 16 கண் மதகு பகுதியில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு மய்யத்தில் 24 மணி நேரமும் நீரின் அளவைக் கண்காணித்து வருகின்றனர்.
தரமற்ற உணவுப் பொருட்களை விற்றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு
சென்னை, அக்.20 தரமில்லாத உணவுப் பொருட்களை விற்றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண்ணை தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட காலங்களில் இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி பதிவு செய்யாமல் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
விதிகளை மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தரமான பொருட்களைக் கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், கலப்படம் இல்லாமலும் உணவுப் பொருட்களை தயாரிக்க வேண்டும். தின்பண்டத்தின் பெயர், உற்பத்தி தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் தரமில்லாத உணவுப் பொருட்கள் விற்கப்படுவதை அறிந்தால், 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தமிழக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அறுந்து கிடக்கும் மின்கம்பிகள்
அருகில் செல்ல வேண்டாம்
அருகில் செல்ல வேண்டாம்
பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை
சென்னை, அக்.20 அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம் என மக்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மழைக் காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம், வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது, ஈரப்பதமான சுவர்களில் கை வைக்க கூடாது.
மேலும் நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான மின்விசிறி, லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம், மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும். மின்சேவை, மின்கம்பி அறுந்துவிழுதல், மின்தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக மின்னகத்தை “94987 94987” தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
