
- செந்தில்குமார்,
இயன்முறை மருத்துவர்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை, தேனி
பிசியோதெரபி என்பது உடல் இயக்கத்தை மேம்படுத்தவும், வலியைப் போக்கவும் உதவும் ஒரு மருந்தில்லா மருத்துவ சிச்சையாகும். இது உடற்பயிற்சி, மசாஜ் மற்றும் பிற சிகிச்சை முறைகளை பயன்படுத்தி உடலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது காயங்கள் அறுவை சிகிசைகள் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
பொதுமக்களுக்கு எளிமையாக விளக்கு வதற்காக, கீழ்க்கண்ட 20 கேள்விகளுக்கும் தெளிவான பதில்களையும் தொகுத்துள்ளேன்.
கேள்வி -1: பிசியோதெரபி மருத்துவம் என்றால் என்ன?
பதில்: பிசியோதெரபி என்பது உடலின் வலி, தசை மற்றும் நரம்பு பிரச்சினைகளை மருந்தில்லாமல் குணப்படுத்தும் நவீன சிகிச்சை முறை. இது உடல் இயக்கத்தை மீட்டெடுத்து, இயற்கையான குணமடைவதை ஊக்குவிக்கும் மருத்துவம்.
கேள்வி – 2: பிசியோதெரபி எப்போது தோன்றியது?
பதில்: முதல் உலகப்போருக்குப் பிறகு (1920–30களில்), காயமடைந்த படைவீரர்களுக்கு இயக்கத்தை மீட்டெடுக்க பிசியோதெரபி பயன்பட்டது. அதன் பிறகு இது மருத்துவ அறிவியலின் அங்கமாக உலகம் முழுவதும் பரவியது.
கேள்வி – 3: பிசியோதெரபி மருத்துவம் எந்த மருத்துவ முறையுடன் தொடர்புடையது?
பதில்: பிசியோதெரபி என்பது அலோபதி மருத்துவத்தின் ஒரு துணை பிரிவு. மருத்துவர் நோயைக் கண்டறிந்து மருந்தளிப்பார்; பிசியோதெரபி மருத்துவர் நோயாளியின் இயக்கத்தை, தசை சக்தியை, சமநிலையை மீட்டெடுப்பார்.
கேள்வி -4: பிசியோதெரபி மருத்துவத்தின் முக்கிய இலக்கு என்ன?
பதில்: மூட்டு மற்றும் தசை வலி குறைக்க, நரம்பு இயக்கத்தை மேம்படுத்த, உடல் சமநிலையை திருத்தி, நோயாளி தன் தினசரி செயலை தானாகச் செய்யும் திறனை மீண்டும் பெறுவதே இதன் நோக்கம்.
கேள்வி – 5: பிசியோதெரபியில் பயன்படுத்தப்படும் சிகிச்சை வகைகள் என்ன?
பதில்: மின்சிகிச்சை (Electrotherapy)
கைமுறை சிகிச்சை (Manual therapy)
பயிற்சி சிகிச்சை (Exercise therapy)
சூடு மற்றும் குளிர் சிகிச்சை (Heat & Cold therapy)
புனர்வாழ்வு பயிற்சிகள் (Rehabilitation training)
கேள்வி -6: பிசியோதெரபியில் “கரண்ட்” என்றால் என்ன?
பதில்: “கரண்ட்” என்பது சிகிச்சைக்காக பயன்படும் மின்சாரம். இது வலியை குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தசை மற்றும் நரம்பு இயக்கத்தைச் சீராக்க உதவுகிறது.
கேள்வி -7: பிசியோதெரபியில் பயன்படுத்தப்படும் கரண்ட் வகைகள் என்ன?
பதில்: IFT (Interferential Therapy): நரம்பு வலிக்கு
TENS (Transcutaneous Electrical Nerve Stimulation): திடீர் வலிக்கு
Ultrasound Therapy: தசை அழுத்தம், soft tissue காயங்களுக்கு
IRR (Infrared Radiation): சூடு தேவைப்படும் தசை வலிக்கு
SWD (Short Wave Diathermy): ஆழமான தசை சிகிச்சைக்கு
கேள்வி -8️: சூடு (Heat therapy) சிகிச்சை எதற்காக?
சூடு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தசை இறுக்கத்தை குறைத்து, வலியை தணிக்க உதவுகிறது. Hot pack, IRR lamp, SWD போன்றவை இதற்குப் பயன்படும்.
கேள்வி -9: குளிர் (Cold therapy) சிகிச்சை எதற்காக?
குளிர் சிகிச்சை (Ice therapy) வீக்கம், அழற்சி, அல்லது திடீர் காயம் ஏற்பட்ட உடனடி நிலையில் சிறந்தது. இது வலியை இயற்கையாகக் குறைக்கும்.
கேள்வி – 10: கைமுறை சிகிச்சை (Manual therapy) என்றால் என்ன?
பதில்: பிசியோதெரபி மருத்துவர் தனது கைகளைப் பயன்படுத்தி தசை மற்றும் மூட்டு இயக்கங்களைச் சீராக்கும் தொழில்நுட்பம். இதில் Mobilisation, Stretching, Trigger Point Release போன்ற முறைகள் அடங்கும்.
கேள்வி – 11: பிசியோதெரபி மற்றும் மசாஜ் இரண்டும் ஒன்றா?
இல்லை. மசாஜ் என்பது பிசியோதெரபியின் ஒரு சிறு பகுதி மட்டுமே. உண்மையில் பிசியோதெரபி என்பது பயிற்சி, மின்சிகிச்சை, மூட்டு இயக்கம், வலி மேலாண்மை போன்ற பல துறைகள் கொண்டது.
கேள்வி – 12: பிசியோதெரபி சிகிச்சை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும்?
பதில்: அது நோயின் தன்மை பொறுத்தது. திடீர் வலிக்கு 5–7 நாட்கள் போதும்; நீண்டகால பிரச்சினைகளுக்கு 10–15 நாட்கள் அல்லது நிபுணர் பரிந்துரைக்கும் வரை தொடரலாம்.
கேள்வி – 13: பிசியோதெரபி சிகிச்சை பழக்கமாகிவிடுமா?
பதில்: இல்லை. இது மருந்து அல்ல. நோயாளி குணமடைந்ததும் வீட்டுப் பயிற்சிகளைத் தொடர்வதால் மீண்டும் சிகிச்சை தேவையில்லை.
கேள்வி – 14: பிசியோதெரபி முதியவர்களுக்கு எவ்வாறு உதவுகிறது?
பதில்: முதியவர்களுக்கு மூட்டு வலி, தசை பலவீனம், சமநிலை குறைபாடு போன்ற பிரச்சினைகளில் இது சிறந்த பயனளிக்கிறது. அவர்கள் தானாக இயங்கும் திறனை மீண்டும் பெற உதவுகிறது.
கேள்வி -15: பிசியோதெரபி இளம் வயதினருக்கு தேவையா?
பதில்: ஆம். நீண்ட நேரம் மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு கழுத்து, முதுகு வலி அதிகம். சரியான உட்காரும் நிலை, தசை பலம், உடல் ஒத்துழைப்பு ஆகியவற்றை பிசியோதெரபி மேம்படுத்துகிறது.
கேள்வி – 16: பிசியோதெரபி மருத்துவம் வலிக்கு மட்டும்தானா?
பதில்: இல்லை. இது ஸ்ட்ரோக், ஆஸ்துமா, ஆட்டிஸம், விளையாட்டு காயம், நரம்பு புனர்வாழ்வு போன்ற பல நோய்களுக்கு உதவும் முழுமையான மருத்துவம்.
கேள்வி – 17: பிசியோதெரபி மனநலத்துக்கும் தொடர்புண்டா?
பதில்: ஆம். உடல் இயக்கம் மேம்படும் போது மூளையில் Endorphin என்ற மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கும். இதனால் மன அழுத்தம், கவலை, தளர்ச்சி குறையும்.
கேள்வி-18: பிசியோதெரபி மருத்துவம் சித்தா அல்லது ஆயுர்வேதா சிகிச்சையுடன் சேர்க்கலாமா?
பதில்: சில நிலைகளில் சேர்க்கலாம். ஆனால் மின்சிகிச்சை பெறும் நேரத்தில் எண்ணெய் தடவக் கூடாது. வேறு நேரத்தில், நிபுணரின் ஆலோசனையுடன் செய்யலாம்
கேள்வி -19: பிசியோதெரபி எப்போது அவசியம்?
பதில்: மூன்று நாளுக்கும் மேலாக வலி நீடித்தால், இயக்கம் குறைந்தால், அல்லது தினசரி வேலைகளில் தடையாக இருந்தால் உடனே பிசியோதெரபி நிபுணரை அணுக வேண்டும்.
கேள்வி- 20: பிசியோதெரபி சிகிச்சை அனைத்து வயதின ருக்கும் மேற்கொள்ளலாமா?
பதில்: ஆம். குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லா வயதினருக்கும் இது பாதுகாப்பான, பக்கவிளைவில்லா சிகிச்சை முறை. பிசியோதெரபி மருத்துவம் – மருந்து இல்லாமல் உடல் இயக்கத்தை மீட்டெடுக்கும் நவீன மருத்துவம். இது வலியை மட்டுமல்ல, வாழ்வையும் சீரமைக்கும் கலை.
