‘பங்கா’ இழுத்துக் கொண்டிருந்தவர்கள் நீதிபதி இருக்கைக்குக் கனவு கண்டிருப்போமா?
இன்று இவ்வளவு அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.,
அய்.ஆர்.எஸ்., துணைவேந்தர்கள் வந்தது, யாரால்?
சென்னை, அக்.19 ‘‘கவிஞர் எஸ்.கருணானந்தம் அவர்கள் கவி இயற்றுவதில் மாத்திரமல்லாமல் அரும் கருத்துகள் கொண்ட வியாசங்கள் எழுதுவதிலும் திறமை கொண்டவர்” என்று தந்தை பெரியாரால் பாராட்டுப் பெற்றவர் என்று, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கவிஞர் கருணானந்தம் அவர்களுக்குப் புகழாரம் சூட்டிப் பேசினார்.
கவிஞர் எஸ்.கருணானந்தம் குடும்பத்தினர் சார்பில் அவரது நூற்றாண்டு விழா நேற்று (18.10.2025) மாலை 6 மணியளவில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இரண்டாம் தளத்தில் நூலக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் தொடக்கத்தில் மாணவர்கள் தமிழ்மொழி வாழ்த்துப் பாடினர். அதைத்தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று சிறப்பிக்க, எஸ்.இராசரெத்தினம் இ.ஆ.ப.(ஓய்வு) அனைவரையும் வரவேற்றும், இணைப்புரை வழங்கியும் சிறப்பித்தார்.
வி.அய்.டி. பல்கலை வேந்தர் ஜி.விஸ்வநாதன்
வி.அய்.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வ நாதன் முன்னிலை வகித்து உரையாற்றிச் சிறப்பித்தார். தமிழ்நாடு அரசு மேனாள் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் மா.இராசேந்திரன், அழகப்பா பல்கலைக்கழகம் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் அ.இராமசாமி, எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் (மேஜர்) இராஜா, சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார், சென்னை சர்.தியாகராயா கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரா.மணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு வாழ்த்துரை வழங்கினர்.

திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மோகனா வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
கவிஞர் கருணானந்தம் படைப்புகள் தொகுப்பு நூல்!
தொடர்ந்து நூல்கள் வெளியீட்டு நிகழ்வு நடை பெற்றது. கவிஞர் கருணானந்தம் படைப்புகள் தொகுப்பு நூலை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, முதற்படியை எஸ்.இராசரெத்தினம் இ.ஆ.ப.(ஓய்வு) பெற்றுக் கொண்டார்.
நூற்றாண்டு மலரை வி.அய்.டி. வேந்தர் ஜி.விஸ்வ நாதன் வெளியிட, முனைவர் மா.இராசேந்திரன் பெற்றுக்கொண்டார்.
முனைவர் மறைமலை இலக்குவனார் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த, “அண்ணா காவியம்” நூலைப் பேராசிரியர் மு.நாகநாதன் வெளியிட முதன்மை வருமான வரி ஆணையர் ம.மதிவாணன் பெற்றுக்கொண்டார். கவிஞரின் சகோதரர் எஸ்.கந்தசாமி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
முன்னதாக நிகழ்வின் தலைவரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்கள் சார்பில், சிறப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, கவிஞர் கருணானந்தம் அவர்களின் பேரப்பிள்ளைகள் கவிஞர் எழுதிய கவிதையை வாசித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
நிறைவாக நிகழ்ச்சியின் தலைவரான தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை உரையை வழங்கினார். அவர் தமது உரையில், ‘‘சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கக் காலத்தில் ‘‘பங்கா” இழுக்கும் வேலை கிடைக்காதா என்றுதான் நம் மக்கள் கனவு கண்டனர்’’ என்று சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தை நினைவுபடுத்தினார். மேலும் அவர், ‘‘பங்கா என்பதை இந்தக் காலத்து இளைஞர்கள் அறிய மாட்டார்கள் என்பதால், “பங்கா” என்பது மின்சாரம் இல்லாத காலத்தில் விசிறியாகப் பயன்பட்டது. அறைக்குள் ஒரு பெரிய துணி தொங்கவிடப்பட்டிருக்கும். அதை இணைக்கும் ஒரு நீளமான கயிறு அறைக்கு வெளியே தொங்கும். வெளியில் இருக்கும் ஒருவர் அந்தக் கயிற்றை கீழே இழுத்து விடுவார். அப்போது அந்தத் துணி அசையும் காற்று வரும்’’ என்று விவரித்தார்.
சுயமரியாதை இயக்கத்தின் சாதனை!
அதைத் தொடர்ந்து, “அந்தக் காற்றைப் பெறும் நீதிபதி நாற்காலியில் அமரலாமே என்ற கனவே நம் மக்களுக்கு வராது. காரணம், புத்தி அப்படி பழக்கப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது. அதை உடைத்து எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலையை உருவாக்கியதுதான் சுயமரியாதை இயக்கத்தின், தந்தை பெரியாரின் சாதனை” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறிவிட்டு, ‘‘இன்று இந்த அரங்கத்தைப் பார்க்கிறேன். பார்க்கும் இடமெல்லாம் அய்.ஏ.எஸ்.கள், அய்.பி.எஸ்.கள்,
அய்.ஆர்.எஸ்.கள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், டாக்டர்கள் என்று நிறைந்திருப்பதைப் பார்க்கும்போது, இதுதான் சுயமரியாதை இயக்கத்தின் சாதனை! இதுதான் தந்தை பெரியாரின் சாதனை!” என்று முடிக்கும் முன்பே கைதட்டல் ஒலி அரங்கை அதிர வைத்துவிட்டது.
‘‘எங்களுக்கு மனம் நிறைந்து போயிருக்கிறது. எங்கள் மக்களுக்குத் திறமை இல்லையா? தகுதி இல்லையா? இனிமேல் இந்த மோசடி இங்கே பலிக்காது” என்று தொடர்ந்து 93 வயதில், ஆசிரியர் ஒரு சிங்கம் போல் கர்ஜனை செய்ததும் மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.
தந்தை பெரியாரிடம் பாராட்டுப் பெற்றவர்!
தொடர்ந்து, கவிஞர் கருணானந்தம் எழுதிய, ‘தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு’ என்னும் நூலின் மூலப்பிரதியை கையில் வைத்துக் கொண்டு, ‘‘கவிஞர் அவர்கள் கவி இயற்றுவதில் மாத்திரமல்லாமல், அரும் கருத்துகள் கொண்ட வியாசங்கள் எழுதுவதிலும் திறமை கொண்டவர்” என்று தந்தை பெரியாரிடம் பாராட்டுப் பெற்றவர்” என்பதையும் சுட்டிக்காட்டினார்.
“செருப்பு ஒன்று போட்டால்
சிலை ஒன்று முளைக்கும்!”
தொடர்ந்து, 1944 இல், கடலூரில் தந்தை பெரியார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு, பெரியார் அந்த சம்பவத்தைத் தோழர்களிடம் பகிர்ந்து கொண்டதையும், 1972 இல் முதலமைச்சராக இருந்த கலைஞர், தந்தை பெரியார் ஆகியோர் கலந்து கொண்ட சிலை திறப்பு விழாவில், கவிஞர் கருணானந்தம் மேடையில் முழங்கிய, “செருப்பு ஒன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்” என்ற கவிதை வரிகள் தந்தை பெரியாரின் தத்துவத்தின் வலிமையை பறைசாற்றும் வைர வரிகளாக விளங்குவதை எடுத்துரைத்து விட்டு, ‘‘இன்றைக்கும் ஸநாதனத்தின் பேரால் செருப்பு வீசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்குள் அதே ஸநாதனம் மறுபடியும் வராது என்று கருத வேண்டாம்” என்று எச்சரித்தார்.
நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துகள்!
‘‘அப்படி வராமல் தடுக்க வேண்டுமானால் மறுபடியும் திராவிட மாடல் ஆட்சிதான் வரவேண்டும். அதற்கான அடிக்கட்டு மானத்தைத்தான் கவிஞர் எஸ்.கருணானந்தம் போன்றவர்கள் உண்டாக்கி யிருக்கிறார்கள். அந்த அடிக்கட்டுமானத்தின் மீதுதான் திராவிடக் கட்ட டம் கட்டி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதை நினை வூட்டும் வகையில் இந்த நூற் றாண்டு விழாவை ஏற் பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துகள்” என்பன உள்ளிட்ட பல்வேறு அரிய கருத்துகளைக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக என்.இராசகோபால் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் திராவிட இயக்கத்தின் விளைச்சலாக கவிஞர்கள், வழக்குரைஞர்கள், அரசு அதிகாரிகள், பதிப்பகப் பெருமக்கள், சிந்தனையாளர்கள் என ஏராளமானோர் – அரங்கின் வெளியில் ஒரு டிஜிட்டல் திரை வைத்து நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யும் அளவுக்குக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், வந்திருந்தவர்கள் ஏராளமானோர் ஆசிரியர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து, தங்களை நினைவுபடுத்தி பேச முனைந்ததும், ஆசிரியர் அய்யா அவர்களே, அவர்களின் பெயரைச் சுட்டிக்காட்டி பேசியதும் வியந்துபோன அவர்கள், ஆசிரியர் அய்யா அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு ஒளிப்படம், தன்படம் எடுத்தும், வாங்கிய புத்தகங்களில் ஆசிரியர் அவர்களின் கையெழுத்துப் பெற்றும் மகிழ்ந்தனர்.
