தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை!
கடந்த 4.10.2025 அன்று செங்கல்பட்டு – மறைமலைநகரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்திய நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சி சிறுகனூரில் பல கோடி ரூபாய் திட்டமான பெரியார் உலகத்திற்கு, தமது அரசின் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தைப் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக அளிப்போம் என்று அறிவித்து, மக்களை வியப்பு, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
அந்த அறிவிப்பின்படி இன்று (18.10.2025) காலை 10.30 மணிக்குப் பெரியார் திடலுக்குத் தி.மு.க.வின் தலைமைக் கழக முக்கியப் பொறுப்பாளர்களுடன் வருகை தந்து, அறிவித்த ரூபாய் ஒரு கோடியே 50 லட்சத்திற்கும் கூடுதலாக, மொத்தம் ரூபாய் ஒரு கோடியே 70 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையை அளித்து, சிறிது நேரம் உரையாடி விட்டுச் சென்றது, அவரது தலைமைப் பண்பு, மற்றவர்களுக்கு எவ்வளவு எடுத்துக்காட்டானது என்பதற்கான முக்கியச் சான்று நடவடிக்கையாகும்.
‘‘சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம் – சொல்லாததையும் செய்வோம்!’’
பெரியார் திடலுக்கு நேரில் வந்து அளித்தது எவ்வளவு பெரும் பண்பு என்பதோடு, அறிவித்து
14 நாள்களிலேயே அதை அத்தனை பேரிடமிருந்தும் திரட்டி, ‘‘சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம் – சொல்லாததையும் செய்வோம்’’ என்று நிரூபிக்கும் ஓர் எடுத்துக்காட்டு அல்லவா?
தாய்க்கழகம், உச்சிமோந்து வரவேற்று, வாழ்த்தி, தனது பெருநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது!
நம் நன்றி – பெரு நன்றி!
‘‘உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்!’’
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.10.2025