வாசிங்டன், அக்.18 அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், செயற்கை தொழில் நுட்பம் (ஏஅய்) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமேசன் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தற்போது பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளிலும் (ஏஅய்) பயன்பாடு அதிகரித்து வருவதால், வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு அமேசானும் விதி விலக்கு இல்லை என்று சொல்வது போல, அந்த நிறுவனமும் தற்போது பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளது. எச்ஆர் பிரிவு ஊழியர்களுக்கு தொலைபேசி, கைபேசி அல்லது மெயிலில் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை அமேசான் நிறுவனம் கொடுத்து வருகிறது.
எச்ஆர் பிரிவில் பணியாற்றுவோரில் 15 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிற பிரிவுகளில் பணியாற்றுவோரையும் பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொத்தம் எவ்வளவு பேர் வேலையை இழப்பார்கள் என்பது எண்ணிக்கை அடிப்படையில் இன்னும் தெரியவில்லை.
பீகார் சட்டப்பேரவை தேர்தல்:
48 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
பாட்னா, அக்.18 பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., அய்க்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. மற்றும் அய்க்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு தலா 101 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிராக் கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 101 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக 48 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மாநில தலைவர் ராஜேஷ் ராம் கடும்பா தொகுதியில் போட்டியிடுகிறார். இதில் 24 பேர் முதல் கட்ட தேர்தலிலும், மீதி 24 பேர் இரண்டாவது கட்ட தேர்தலிலும் போட்டியிடுகின்றனர்.