கேஸ் சிலிண்டர் –
ஓர் எச்சரிக்கை
ஓர் எச்சரிக்கை
அரசு உத்தரவின் பேரில், வீட்டிலுள்ள கேஸ் அமைப்பு & சிலிண்டர் ஏஜென்சி மூலம் பரிசோதிக்கப்படுகிறது. இதனை வைத்தும் மோசடி நடக்கிறது. இந்த பரிசோதனையை 5 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டும். அடிக்கடி பரிசோதனை என ஏஜென்சி தரப்பில் ஆள்கள் வந்தாலும், அது மோசடியே. மேலும், ஒருமுறை பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த ரூ.236 கட்டணம் அளித்தால் போதும். இது போன்ற மோசடியை 1906 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்.
10.1 விழுக்காடாகச் சரிந்த
ஆயத்த ஆடை ஏற்றுமதி
ஆயத்த ஆடை ஏற்றுமதி
டிரம்ப்பின் வரி விதிப்பால் திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிந்துள்ளது. கடந்த செப். மாதம் ரூ.8,043 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தாலும், இது கடந்த ஆண்டு செப். மாதத்தை விட ரூ.1,393 கோடி குறைவாகும். அதாவது, அமெரிக்க டாலர் மதிப்பில் 10.1 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது. எனினும், பன்னாட்டு சந்தை தேவை காரணமாக வரும் மாதங்களில் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
போக்சோ வழக்கு:
காவல்துறை தலைமை இயக்குநர் புதிய உத்தரவு
போக்சோ வழக்குகளின் கீழ் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த தேவையில்லை என காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதில், பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டப்பிரிவுகள் இருந்தால், குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யலாம் என்றும், சாதாரண காயங்களுக்கு அதற்குரிய சோதனை போதும் என்றும் அவர் கூறியுள்ளார். பரிசோதனைகளின் போது குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘விஜய் கட்சிக்கு
அங்கீகாரம் இல்லை’
த.வெ.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விஜய்யின் தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியை எப்படி ரத்து செய்ய முடியும் என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, காவல்துறை தலைமை இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அங்கீகாரமற்ற
ஓ.ஆர்.எஸ்.-க்குத் தடை
ஓ.ஆர்.எஸ்.-க்குத் தடை
உலக சுகாதார மய்யம் WHO அங்கீகாரம் இல்லாத ஓ.ஆர்.எஸ். தயாரிப்புகளுக்கு முழுமையாக தடை விதித்து FSSAI உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல பிராண்டுகள், குளுக்கோஸ் இல்லாத பானங்களை ORS எனக் கூறி போலியாக விற்று வந்ததால், இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார மய்யம் வின் படி, 6 ஸ்பூன் சர்க்கரை, 1/2 ஸ்பூன் உப்பு, ஒரு லிட்டர் சுத்தமான நீர் மட்டுமே கலவையில் இருக்க வேண்டும். அதிக சர்க்கரை அல்லது உப்பு, பழப் பொடிகள் சேர்க்கக்கூடாது.