புதுடில்லி, அக். 18- உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த வாரம் 6.10.2025 அன்று நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் காலணி வீசிய சம் பவம் தொடர்பாக, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி ஒப்புதல் அளித்துள்ளார்.
தலைமை நீதிபதி கவாய், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்பு தொடர்பான மனுவை விசாரித்த போது, “நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரி டமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்” என்று கூறியது ஸநாதன தர்மத்தை அவமதித்த தாகக் கருதி ராகேஷ் கிஷோர் இந்தச் செயலைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ராகேஷ் கிஷோரின் வழக்குரைஞர் உரிமம் பார் கவுன்சிலால் ரத்து செய்யப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட் டார். இருப்பினும், அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்காததுடன், “கடவுள் தான் தன்னை காலணி வீச வைத்ததாக’’ பேட்டியளித்தார். மேலும், கருநாடக மாநில பாஜக தலைவர் பாஸ்கர் ராவ் உள்ளிட்ட சிலர் அவரது செயலை ஆதரித்துப் பேசியதும், சமூக வலைதளங்களில் இது கொண்டாடப்படுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவர் அளித்த கடிதத்தின் அடிப் படையில் ராகேஷ் கிஷோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பாகப் பேசியபோது, “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி எறிந்த சம்பவத்தை சிலர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். வீரத்தின் அடையாளம் இது என பலரும் பதிவிட்டு வருகின் றனர். இதை இப்படியே தொடர விடக்கூடாது” என்று வலியுறுத் தினார் என்பது குறிப்பிடத்தக்கது.