சென்னை, அக்.18- சென்னையில் தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் ஆர்வலர்களால்தான் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகவும், நாய் தொல்லைப் பிரச்சினை இன்னும் ஆறு மாதங்களில் தீரும் என்றும் சென்னை மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் சாலை பராமரிப்பு பணிகளுக்கான 21 மின்கல வாகனங்கள் மற்றும் நாய்களைப் பிடிக்கும் 5 வாகனங்கள் உட்பட 26 புதிய வாகனங்களின் பயன்பாட்டை மேயர் பிரியா துவக்கி வைத்தார்.
தெருநாய்கள் பிரச்சினை
அதன் பின், மேயர் பிரியா செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாய்கள் நல ஆர்வலர்கள் உணவு அளிப்பதால், சென்னையில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், நாய்கள் நல ஆர்வலர்கள் நாய்களைப் பராமரிக்க முன்வர வேண்டும். சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களில் 60 சதவீத நாய்களுக்கு ‘ரேபிஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல், ‘சிப்’ பொருத்தும் பணிகளும் நடந்து வருகிறது.
நாய்கள் கருத்தடை பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் நாய் தொல்லைப் பிரச்சினை தீர்வுக்கு வரும். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் பணி முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கவுன்சிலர்கள் கோரிக்கைக்கு ஏற்ப பணிகள் நடந்து வருகிறது. சாலை வெட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை பணிக்குத் திரும்பாமல் உள்ள துாய்மைப் பணியாளர்கள் எப்போது வந்தாலும் பணியில் சேரலாம். இப்போது வந்தாலும் உடனே பணி ஆணை வழங்கப்படும். கொடி கம்பங்கள் விவகாரத்தில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மேயர் பிரியா தெரிவித்தார்.
முழுக் கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி
காஞ்சிபுரம், அக்.18- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் நேற்றைய (17.10.2025) நிலவரப்படி 19.28 அடியாக உள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 2429 மில்லியன் கன அடியாகும். நீர் வரத்து விநாடிக்கு 820 கன அடியாக பதிவாகியுள்ளது. இதனால் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில், நீர்மட்டம் தற்போது 20 அடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அணையின் பாதுகாப்பு கருதி ஏரியில் 21 முதல் 22 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்கப்படும். இந்த ஏரியின் அய்ந்து கண் மதகுகளின் மீது அதிகாரிகள் நடந்து செல்வதற்கும், ஷட்டர்களைத் திறப்பதற்கும் சிறிய அளவிலான நடைபாதை இருந்தது. தற்போது அதனை சுமார் எட்டு அடி அகலத்துக்கு அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பேரிடர் காலங்களில் அவசர வாகனங்கள், அதிகாரிகள் செல்வதற்கு இந்தப் பாதை பயன்படுத்தப்படும்.