கரூர் சம்பவமும் – விசமப் பிரச்சாரங்களும் அன்றே தந்தை பெரியார் கணிப்பு

செந்துறை மதியழகன்

கட்டுரை, ஞாயிறு மலர்

காலம் காலமாக பாஜகவின் அரசியல் பரிபாலனக் கொள்கை என்பது அடுத்தவரிடம் கால்நீட்டி வம்பு செய்து ஆதாயம் தேட முயற்சிப்பது தான். தந்தை பெரியார் அவர்கள் அன்றே சொல்லிவிட்டார். இம்மாதிரி வீண்பழி சுமத்தி அவனை ஒழிக்க வேண்டுமென்பதில் கவலை கொள்ளுகிறார்களே தவிர, ‘‘பொதுஜனங்களுக்கு ஏதாவது நன்மை செய்து அவர்களிடம் செல்வாக்குப் பெறும் விஷயத்தில் சற்றும் கவலை எடுத்துக்கொள்வதே கிடையாது’’ என்று. அய்யாவின் கணிப்பு எத்தகையது பாருங்கள்!

நூறு ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ‘குடி அரசு’ தலையங்கத்தைப் பார்ப்பதற்கு முன்பாக, கொஞ்சம் இப்போதைய கரூர் சம்பவத்தை பார்ப்போம். நாட்டு மக்கள் மீது திராவிட இயக்கங்கள்  கொண்டிருக்கின்ற அக்கறையும். பாஜக மாதிரியான அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் கட்சிகளையும் இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய் பரப்புரையின் போது கடுமையான கூட்ட நெரிசலில்.  சிக்கி 41 பேர் உயிரிழந்த கோர சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து தமிழ்நாடு இன்னும் மீளவில்லை. அதேநாள் விடுதலை நாளேட்டில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது அறிக்கையில் ‘தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராத கோரம் இது’ என்று குறிப்பிட்டு வேதனையுடன் இரங்கல் தெரிவித்திருந்தார்.

கரூர் துயரச்சம்பவம் நடைபெற்ற நாள் முதல் இன்று வரையில் அன்றாடம் அது தொடர்பான செய்திகளை நாட்டு மக்கள் கவனித்து வருகின்றனர்,

41 பேர் மரணம் பற்றி திருச்சி விமான நிலையம், மற்றும் சென்னை விமான நிலையத்திலும் நடிகர் விஜயிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது. அது பற்றிய கருத்தேதும் தெரிவிக்காது வேகமாக சென்றுவிட்டார்.

முதலமைச்சரின் பொறுப்புணர்ச்சி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கைகளை கவனிக்கும்படி அமைச்சர்களிடம் பேசிவிட்டு, அன்று இரவு 1.00 மணிக்கெல்லாம் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார், மேலும், “எந்த தலைவரும் அப்பாவி மக்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள். சமூக வலைதளங்களில் யாரும் வதந்திகளை பரப்பாதீர்கள்” என்றும் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, எதிர் தரப்பு குற்றம்காண முடியாத அளவுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கட்டுரை, ஞாயிறு மலர்

அவதூறுகளுக்கு அளிக்கப்பட்ட பதில்

உண்மையில் என்ன நடந்தது என்று, மாநில அரசின் உள்துறை செயலாளர் அமுதா அய்ஏஎஸ், மற்றும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, மருத்துவத்துறை செயலாளர் ஆகியோரும் கூட காட்சி ஊடகங்கள் மூலம் விளக்கமளித்தனர்.

ஆனால், சமூக வலைத்தளங்களில் கரூர் பரப்புரை கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு திமுக தான் காரணம் என்பது போல காட்சிப் பதிவுகள் மற்றும் கருத்துக்கள் பகிரப்பட்டன. உடனடியாக மருத்துவமனைக்கு அமைச்சர்கள் எப்படி வந்தார்கள். என்றெல்லாம் பசப்பு வாதங்கள் செய்து இந்த சம்பத்தை அரசியலாக்குவதிலும், மற்றவர்கள் மீது பழியைப் போட்டு தப்பிப்பதிலும் தவெகவினர் குறியாக இருக்கின்றனர்.

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மேனாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தன் மீது முன்வைக்கப்பட்ட சந்தேகங்கள். களத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஆதாரங்களுடன் ஒரு மணி நேரம் வரை விளக்கம் அளித்தார். “இதை யாரும் அரசியலாக பார்க்க வேண்டாம். குறை சொல்வதாகப் பார்க்க வேண்டாம். தவெக தலைவர் உரிய நேரத்திற்கு மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வந்திருந்தால் விபரீதத்தை தவிர்க்கலாம். இனியாவது போதிய முன்னேற்
பாடுகளை செய்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். எது எப்படியான போதிலும் ‘பசுமாட்டை தென்னை மரத்தில் தான் கட்ட வேண்டும்’ என்பது போல, கரூர் சம்பவத்தை திமுக தலையில்தான் கட்ட வேண்டும் என்று பாஜக, அதிமுக, தவெக கம்பெனிகள் காரசாரமாகக் கம்பு சுற்றுகிறன.

தவறாக வழிநடத்தப்படுவோர்

“தவறு செய்தவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நேரத்தில், இன்னமும்  பாடத்தைக் கற்றுக் கொள்ளாமல், தவறான வழியிலேயே அவர்கள் நடத்தப்படுகிறார்கள்” என்று தஞ்சையில் 11.10.2025 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்த கருத்து மிக முக்கியமானது. அய்யா அவர்கள் சொல்வது போல் தவெக’வினர் ‘நடத்தப்படுகிறார்கள்’ என்பதே உண்மை என்பதை பின்வரும் சம்பவங்கள் உணர்த்தும்.

பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் கட்சியின் முகநூல் பக்கத்தில் முதலமைச்சரிடம் 12 கேள்விகள் கேட்டிருக்கிறார். அதில் கேள்வி 2. ‘திரு. விஜய் அவர்கள் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொலிகள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் சிலர் கூறினர். இவற்றைத் தாண்டி கூட்ட நெரிசல் ஏற்படக் காரணம் என்ன?’ என்று கேட்டுவிட்டு 12 கேள்விக்கு கீழே இது ‘பேரிடர்’ என்றும் அவரே சொல்கிறார்.

பா.ஜ.க.வின் அக்கறை!?

நடந்த சம்பவத்திற்கு தவெகவின் அலட்சியமே காரணம் என்பதற்கு தனியார் மற்றும் அரசு சார்பாக எத்தனையே காட்சி பதிவுகள் ஆதாரங்கள் வெளிவந்த போதிலும் பொத்தாம் பொதுவாக கழுத்தில் மிதித்தார்கள். கத்தியால் குத்தினார்கள் என்பது போன்ற பாஜகவின் வடிகட்டிய பொய் பிரச்சாரம் மக்களிடத்தில் எடுபடவில்லை. ‘அப்பன் சோற்றுக்கு அழுகிறான், பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்’ என்பதைப் போல். ஆளும் திமுக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணியை அமைச்சர்கள் மூலம் கவனித்தது. ஆனால் பாஜக எம்பி ஹேமமாலினி தலைமையிலான ஒரு உண்மை கண்டறியும் குழுவை கரூரில் இறக்கி. திமுகவுக்கு எதிராக ஒரு துப்பாவது கிடைத்து விடாதா என்று அண்ணாமலையை வைத்து துருவி துருவி தெரு தெருவாக விசாரணை செய்து. கடைசியில் கட்சி தலைமைக்கு  “அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம். கரூர் மாவட்ட நிர்வாகம் முறையாக விளக்கம் அளிக்கவில்லை”  என்று அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு ஓடிவிட்டது அந்த நாடகக் கம்பெனி.

“மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தரப் பிரதேச கும்பமேளா உயிரிழப்புக்களுக்கு எல்லாம் உடனடி விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க. அரசு கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த கூட்ட நெரிசல் விபத்தில் பா.ஜ.க. காட்டும் இந்த அதீத வேகத்துக்கும், அக்கறைக்கும் காரணம் என்ன?”முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு இதுவரை பாஜக’விடம் பதில் இல்லை.

சி.பி.அய். விசாரணை கேட்பது யார்?

சம்பவம் தொடர்பாக சிபிஅய் விசாரிக்க வேண்டும் என்று தவெக மற்றும் ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை அய்கோர்ட்டின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பாஜ கவுன்சிலரான உமா ஆனந்தன் என்ற அம்மையார் கரூர் சம்பவத்தில் சிபிஅய் விசாரணை வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை  நாடியுள்ள அதே நேரம். சிபிஅய் விசாரணை கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அப்படி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்தது தானா என தொடக்கத்தில் எல்லோருக்கும் இருந்த சந்தேகத்தை உண்மையாக்கும் விதமாக பல காட்சிப் பதிவுகள் சமூக வலை தளங்களில் வெளியாகி வருகிறது.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த பிரித்திக் என்ற பதினோரு வயது மகனின் தந்தை பன்னீர்செல்வம் என்பவரது பெயரில் அமன் மாலிக் என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் சிபிஅய் விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தன்னையும் தன் மகனையும் விட்டுவிட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிப்போன தனது கணவர் இப்போது பணம் பறிக்கும் நோக்கில் தனக்கே தெரியாமல் இந்த வழக்கை போட்டிருப்பதாகவும், அதோடு தனது கணவரை ஏமாற்றி யாரோ தூண்டிவிட்டு இந்த வழக்கு ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளதாகவும் பிரித்திக்கின் தாய் ஷர்மிளா என்பவர் பேசும் காட்சிப் பதிவும் வெளியானது.

வழக்குத் தொடர்ந்தோமா?

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த ஏமூரை சேர்ந்த சந்திரா (41) என்பவரது கணவர் பி.செல்வராஜ் என்பவரது பெயரில் சிபிஅய் விசாரணை கோரி லக்ஷ்மிநாராயணன் என்ற வழக்குரைஞர் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கும் செல்வராஜ் ஒப்புதல் இல்லாமல் போடப்பட்டுள்ளதாக அவரே குற்றம்சாட்டும் காட்சிப் பதிவு வெளியாகி  உள்ளது.

அந்தக் காட்சிப் பதிவில் உங்க பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது தெரியுமா என ஒருவர் கேட்க. அது பற்றி தனக்கு தெரியாது என்கிறார் செல்வராஜ். மேலும், வழக்குரைஞர் பெயர் லஷ்மிநாராயணன் என்பவரை தெரியுமா என ஒருவர் கேட்கிறார். அதற்கும் தெரியாது என்கிறார் செல்வராஜ். தொடர்ந்து, எப்படி அந்த பெட்டிசன்ல நீங்க கையெழுத்து போட்டிங்க? என மற்றவர் கேட்க, மேனாள் ஊராட்சி தலைவர் ஒருவர் ஒரு பெட்டிசன்ல கையெழுத்து போடச் சொன்னார் போட்டேன் என முடிகிறது அந்த வீடியோ. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியாமல் ஏமாற்றி கையெழுத்து பெற்று யார் மீதோ பழிபோடும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் யாரோ வழக்கு தொடர்ந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

இப்போது புரிகிறதா பாஜக வலை பின்னலில் நடிகர் சிக்கித் தவிக்கிறார் என்பது. தவறு நடந்திருந்தால் கண்டறியப்பட வேண்டும். யாரேனும் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் திமுக மீது பழி தூற்றிவிட்டு பாஜகவோடு சில உதிரிகளும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.

காலங்காலமாகத் தொடரும் சூழ்ச்சிகள்

மேற்படி பார்ப்பன கம்பெனிகள். இன்றல்ல, நேற்றல்ல காலம் காலமாகவே சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி என்று யார் நின்றாலும் அவர்களை சூழ்ச்சி செய்து துவசம் செய்வதையே வழியாகக் கொண்டவர்கள்.

கடந்த அக்டோபர் 04 செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதே செங்கல்பட்டில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் 1929 பிப்ரவரி 17, 18 ல், சுயமரியாதை இயக்க முதல் மாநாடு நடைபெற்ற பின் தந்தை பெரியார் அவர்கள் ‘குடி அரசு’ ஏட்டில் எழுதிய தலையங்கச் செய்தி காணக் கிடைத்தது. அதில் கரூர் சம்பவத்தில் நாட்புறமும் நின்று திமுகவைத் தீண்டும் பாஜகவின் கோரமுகமே தெரிந்தது.

“செங்கல்பட்டில் மாகாண சுயமரியாதை மகாநாடு நடந்த பிறகு சில பார்ப்பன தாசர்களுக்கு அடியோடு செல்வாக்குப் போய்விட்டபடியால், அதை மறுபடியும் சம்பாதிப்பதற்கென்று சமீபத்தில் காங்கிரசின் பேரால் ஒரு மகாநாடு கூட்டினார்கள். அம் மகாநாடு கூட்டுவதற்கு சில நாளைக்கு முன்பிருந்தே திரு. இராஜகோபாலாச்சாரியாரைக் கொண்டு அவர்களது தாசர்களுடன் அச்சில்லாவில் பல பாகங்களிலும் மதுவிலக்கின் பேரால் சுயமரியாதை இயக்கத்தையும், ஜஸ்டிஸ் கட்சியையும் நினைத்தபடிக்கெல்லாம் துஷித்தும் பழி சுமத்தியும் விஷமப் பிரச்சாரம் செய்தும் பார்த்தார்கள்.

என்ன செய்தும் வழிவழியாக வந்த பார்ப்பன தாசர்களைத் தவிர வேறுயாரும் அம் மகாநாட்டிற்குச் செல்லவில்லை என்றே தெரிய வருகிறது”

இப்படி தொடங்கும் தலையங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் மேலும் சொல்வதைப் பார்க்கலாம்.

“சென்ற வருஷத்திலும், இதே மாதிரியாகவே ஓர் அபாண்டமான பழியை இக்கூட்டத்தார்களே திரு. எம். கே. ரெட்டியார்மீது சுமத்தி விஷமப் பிரச்சாரம் செய்தார்கள். அதாவது, ஒரு மோட்டார் பஸ்ஸானது மற்ற ஓர் ஆற்றுப் பாலத்தின்மீது செல்லுகையில் தவறி ஆற்றில் விழுந்து விட்டதற்கு, அந்தப் பாலத்திற்குச் சரியானபடி அடைப்பு அடைக்கவில்லை என்றும், அதற்கு ஜவாப்தாரி திரு. ரெட்டியாரென்றும், “இந்து”, “சுதேசமித்திரன்” முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பனதாசர்களும் போலிக் கூச்சலிட்டார்கள். பிறகு, உண்மையை விசாரித்தபோது அந்தப் பாலமும், ரோடும் ஜில்லா போர்டிற்குச் சம்பந்தப்பட்டதல்லவென்றும், அதற்கு செங்கல்பட்டு ஜில்லா போர்டார் சிறிதும் பொறுப்பாளிகள் அல்லவென்றும் ஏற்பட்டு விட்டதுடன், எதிரிகள் வெட்கப்படும்படியாகவும் ஆகிவிட்டது.

ஆகவே, இக்கூட்டத்தார்கள் இதுபோலவே திரு. ரெட்டியார்மீது இம்மாதிரியாகவே வீண்பழி சுமத்தி அவரை ஒழிக்க வேண்டுமென்பதில் கவலை எடுத்துக் கொள்கிறார்களே தவிர, மற்ற பொதுஜனங்களுக்கு ஏதாவது நன்மை செய்து அவர்களில் செல்வாக்குப் பெறும் விஷயத்தில் சற்றும் கவலை எடுத்துக்கொள்வதே கிடையாது” (‘குடி அரசு’ துணைத் தலையங்கம், 4.8.1929)

அய்யா அவர்களின் கணிப்பு எவ்வளவு துல்லியமானது பாருங்கள்! இதுவரை பாஜக மக்கள் உரிமை சார்ந்து ஒரு பொதுக்கூட்டம் ஒரு போராட்டம் நடத்தியதுண்டா..? அடுத்தவர் மீது ஏறி சவாரி செய்வதையே வழிமுறையாகக் கொண்ட பாசிசம் தானே அது?

ஆர்.எஸ்.எஸ்.  – பா.ஜ.க. பின்னால்
ஒளிந்து கொள்வது யார்?

“கரூர் நெரிசலைப் பயன்படுத்தி பாஜகவினர் யாரைத் தன் ‘control’-ல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டதைப் போலவும், “தனக்கான சிறந்த இன்னொரு அடிமையை தேடிக் கொண்டிருக்கிறது பாஜக” என்று துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள்  சொல்வது போலவும். தேர்தல் காலம் நெருங்க நெருங்க கோரப் பசியோடு சுற்றி வருகிறது அந்த கொடிய மிருகம்.  நான் தான் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் மரணத்தின்போது, காவல்துறையில் நிகழ்ந்த மரணம் என்பதால் சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. ஆனால், விஜய்யின் த.வெ.க. வோ தமிழ்நாடு அரசே சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரியது. இதுமட்டுமல்லாமல், சி.பி.அய். என்பது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதன் பின்னால் தமிழ்நாடு அரசு ஒளிந்துகொள்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில்பேசினார் நடிகர் விஜய்.

இப்போது,  கரூர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அஸ்ராகார்க் அய்.பி.எஸ். தலைமையில் அமைந்துள்ளது. அதை எதிர்த்த சி.பி.அய். விசாரணை வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்குச் சென்று ஆணை பெற்று வந்துள்ளார்கள். தவெ.க.வினர்  இப்போது யார் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளார்கள் என்று விஜய்  முன்பு பேசிய வீடியோவை போட்டு கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஊடகங்களில்! அவரிடமிருந்து பதிலா வரப் போகிறது?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *