-G.P.வாணன்
வ |
ளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி உலகில் உச்சத்தை நாள்தோறும் கண்டு வருகிறது. அவற்றால் முன்னேற்றம் மட்டுமல்ல, பாதிப்புகளும் இருப்பது தவிர்க்க முடியாதது. இந்தியா போன்ற மனிதவளம் நிறைந்த நாட்டில் தகவல் தொழில் நுட்பம், தானியங்கி தொழிற் கருவிகள், புதிய கண்டுபிடிப்புகள் மனித வேலையை சுலபமாக ஆக்குவதோடு, அவர்களுக்கு வேலையும் இல்லாத நிலை உருவாக்குகிறது. உதாரணமாக டிஜிட்டல் பேனர், பிளக்ஸ் பேனர் போன்றவைகள் கைகளால் பெயிண்டிங் செய்யும் தொழிலை ஏறக்குறைய சிதைத்தே விட்டது எனலாம். பெயிண்டிங் தொழிலையே நம்பியிருந்த தொழிலாளர்கள் வேறு வேலை தெரியாது நசிந்து போய்விட்டனர்.
இதேபோல கைப்பேசி வருகையால் வீட்டின் வரவேற்பறையில், படுக்கையறையில் இருந்த தொலைபேசி சாதனங்கள் காணாமல் போய் விட்டன. பிலிம்ரோல் கேமிராக்கள், டிஜிட்டல் கேமிரா கூட முக்கியத்துவம் இழந்துவிட்டன. கைப்பேசி வருகையால் ரேடியோ, டேப்ரிக்கார்டர்கள், MP3 பிளேயர்கள், கால்குலேட்டர்கள், கைக்கடிகாரங்கள், அலாரம் எழுப்பும் கடிகாரங்கள், வரைபடங்கள், டார்ச்லைட், தந்தி சேவைகள், அஞ்சல் கடித போக்குவரத்துகள், எழுதும் பேப்பர் பயன்பாடுகள், செய்தி மற்றும் ஊடகத்துறை ஏனையவற்றில் சில கருவிகள் கிட்டதட்ட காணாமலும், சிலவற்றின் பயன்பாடு பெருமளவு குறைந்தும் வருகின்றன. இந்த சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் ஏற்கனவே இருந்து வந்த போதிலும் அதில் இன்று கண்டுள்ள புரட்சிகர மாற்றங்கள் சில தொழில் நிறுவனங்களையும், சில தொழிற் படிப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் வேகமாக காலி செய்து வருகிறது. இப்படி மேம்பட்ட தொழில் நுட்பம் ஒரு மனித சிந்தனையின் முன் தலைகுனிந்து திணறுகிறது. அது தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்கு சிந்தனை. தந்தை பெரியார் தோற்றம், பாவனைகள், ஆடை, அலங்காரம் பற்றி சிந்தித்தும் கவலைப்படாத ஒரு பகுத்தறிவு சிந்தனையாளர். வெளிச்சத்தை நோக்கி இருள் போகாது. ஆனால் காரிருளையும் வெளிச்சம் ஒளிகாட்டி விடும். பெரியார், கலங்கரை விளக்க ஒளிகாட்டி சிந்த னையாளராக மிளிர்ந்தார். அவர் எழுப்பிய கேள்வி கள், ஜாதி, மதங்கள், பிரிக்கும் வர்ணாசிரம பேதங்கள், மூட நம்பிக்கை, அடிமைத்தனம் முதலியவற்றின் அடித்தளத்தையே உலுக்கிவிட்டது. என்னை தலைவனாக ஏற்றுக் கொள்ளாதே; என்னைப் பின்பற்றி நடக்காதே; உன் அறிவைக்கொண்டு நான் சரி என்று பட்டால் ஏற்றுக்கொள். இல்லையேல் உன் வழியை நீ பார்த்துக் கொள், என்னை பேசாதே என்று தடுக்கும் உரிமை உனக்கும் எவருக்கும் இல்லை என்று தான் இறக்கும் வரை மனிதனைப்பற்றி மட்டுமே சிந்தித்து மறைந்த கொள்கையாளர். செயற்கை நுண்ணறிவு (AI) க்கு உணர்ச்சியும், சமூக நண்ணுர்வு, சமூக சிந்தனை இல்லை. அது கணக்கிடும், பாதை தெரிவிக்கும். பெரியார் சமூக ஏற்றத்தாழ்வுகள், ஜாதி, மத ரீதியான பாகுபாடுகள், மொழிவழி பேதங்கள், நிறவேற்றுமை, சமதர்மமின்மை, ஆண்டாள்-அடிமை கோட்பாடுகள் போன்ற பல விஷயங்களுக்கு அவரது புரட்சிக் குரல் பாதையை தெரிவிக்கவில்லை. ஏற்ெகனவே இருந்து வந்த பாதையை புல்டோசர் போட்டு அகற்றி சமூகநீதியில் புதிய பாதை போட்டார். இந்த வல்லமைக்கு எதிராக எந்த தொழில் நுட்பமும் போட்டிக்கு மட்டுமல்ல இணையாகவும் வரவியலாது.
பெண் ஏன் அடிமையாளாள்? என்று தொழில் நுட்பங்கள் பேசாது, ஆனால், பெரியார் பேசுவார்; பேசிப்பேசி இருக்கின்ற, எதிர் சட்டங்களை கொளுத்துவார். தான் நினைத்தபடி அதை மாற்றச் செய்வார்; கண் துஞ்சார்; கருமமே கண்ணாக இருப்பார். மறைத்திருக்கும் ஆடைகளை நவீனமயமாக்கி AI மாற்றம் செய்ய முடியும். ஆனால் அவளை கேள்வி கேட்க வைக்க முடியாது. நான் ஏன் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் சிந்தனையை துாண்டமுடியாது. அவளிடம் புரட்சியை ஏற்படுத்த முடியாது. அவ்வளவு ஏன் அவளை அரசியல்படுத்த முடியாது. ஆனால் பெரியார் செய்தார்; செய்கிறார்; செய்வார். இதை
செய்ய இயலாத AI தொழில் நுட்பம் தோற்றுப்போனது. வாழ்க பெரியார்! வளர்க அவரின் சிந்தனை!