வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்! ஜாதி ஒழிப்புக்கான முக்கிய மைல்கல்!
ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’
ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதல மைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’ என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இன்று (17.10.2025) காலை தமிழ்நாடு சட்டப்பேர வையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டமொன்றை இயற்றிட, ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் கே.எம்.பாஷா அவர்கள் தலைமையில் ஒரு தனி ஆணையம் அமையும். அதன் வழிகாட்டுதலையொட்டி, அடுத்து ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டம் உருவாகும்’’ என்று விடுத்துள்ள இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கே வழி காட்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் ஆகும்!
இதுபற்றி சட்டப்பேரவையில் அவர் உரை யாற்றும்போது, (அண்மையில் 13 நாள்களுக்கு முன்பு)செங்கல்பட்டு – மறைமலை நகரில் நடைபெற்ற நமது சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஜாதி ஒழிப்புக்கான முக்கிய நடவடிக்கையாக ஆணவக் கொலையைத் தடுக்கச் சட்டம் நிறைவேற்றக் கோரும் தீர்மானத்தை முக்கியமாகக் குறிப்பிட்டு, இச்சட்டத்தின் தேவைபற்றிக் கூறியது நம்மை மெய்சிலிர்க்கச் செய்தது. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டின் தீர்மானங்களைச் சட்டமாக்கிட 40 முதல் 60 ஆண்டுகள் ஆயின.
4.10.2025 செங்கல்பட்டு மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானங்கள் அடுத்த 13 நாள்களில் செயல்பாட்டுக்கு வர ஏற்பாடுகள் தொடக்கம்!
என்னே வேகம்! என்னே விவேகம்!!
இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சி!
கருஞ்சட்டையினருக்கு ‘முதல் சல்யூட்’ அளித்த எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களே,
இந்த ஜாதி ஒழிப்பு முயற்சிக்கான ஆணவப் படுகொலை தடுப்புச் சட்ட ஏற்பாட்டுக்கான முன்னெடுப்புக்கு எங்களது ‘டபுள் சல்யூட்’ – வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.10.2025