திருச்சி, அக். 17- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் நாகம்மையார் கலையரங்கத்தில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் ஆளுமைத்திறன், கற்றல் வளங்கள் மேம்பாடு, எளிமையான முறையில் கற்கும் வழிமுறைகள் குறித்த நிகழ்ச்சி, பள்ளி முதல்வர் முனைவர். க. வனிதா முன்னிலையில், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் மற்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவின் உதவி இயக்குநர் டி.கிருஷ்ணகுமார் தலைமையில் கடந்த 10.10.2025 அன்று நடந்தது.
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர். முனைவர் ஆர்.கே.முத்துராமன் என்ன படிக்கலாம்..? எங்கு படிக்கலாம்..? எப்படிப் படிக்கலாம்..? போன்ற மாணவர்களின் எதிர்காலத் திட்டமிடுதலுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை மிக எளிய முறையில் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் டி. மாரியப்பன் பல்வேறு சமன்பாடுகளை எவ்வாறு எளிய வகையில் படிக்கலாம்..?எழுதலாம்..? என்பது குறித்தும்,
கற்பது ஒரு கலை அதை மனஅழுத்த மேலாண்மையுடன் இணைத்து பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் தலைமைத்துவத் திறன்களை வளர்த்துக் கொள்ள மேற் கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கினார்.
நிகழ்வின் இறுதியில் மாண வர்களின் சந்தேகங்களுக்கு, பேராசிரியர்கள் இருவரும் உரிய வகையில் விளக்கம் அளித்தனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.