எங்களுடைய முயற்சிக்கு முன்வரை இந்த நாட்டில் நமக்கு சம்பந்தமில்லாத பார்ப்பனர்கள் நம்மை அடிமைப்படுத்த ஏற்படுத்திய முறையில் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம்.
சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு தமிழர்களின் வாழ்வில் சகல துறைகளிலும் புரட்சிகரமான மாறுதல் செய்ய முற்பட்டது போலவே, இந்தத் திருமண முறையிலும் இப்படிப்பட்ட மாறுதல் செய்யப்படுகின்றது. எங்களின் இந்த மாறுதல் திருமண முறையானது இன்றைக்குத் தமிழ் மக்களிடம் தக்கபடி செல்வாக்குப் பெற்று வருகின்றது.
நாம் தமிழ் மக்கள், தமிழ் நாட்டுக்குரிமையான மக்கள், இப்படிப்பட்ட நமக்கு இத்தகைய நிகழ்ச்சிக்கு என்ன முறைதான் இருந்தது என்று கூறுவதற்கில்லை. நம்மிடையே பார்ப்பனர்கள் இடைக்காலத்தில் தான் புரோகித முறையினைப் புகுத்தினார்கள். இந்த முறை நம்மை மடையர்களாக, இழிமக்களாக வைக்கவே ஏற்படுத்தப்பட்ட முறையாகும். எங்கள் முயற்சியானது இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும்.
மனிதன் தனது தேவைக்கு ஏற்ப, வசதிக்கு ஏற்ப பல துறைகளிலும் மாறுதல் ஏற்படுத்திக் கொள்ளுவதுபோல திருமணத் துறையிலும் வசதிக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப மாற்றியும், சுருக்கிக் கொள்ளவும் வேண்டும்.
சுயமரியாதைத் திருமணத்தின் மூலம் பெண்ணடிமையும், அர்த்தமற்ற மூட நம்பிக்கைகளும் நீக்கப்படுகின்றது. நமது இனஇழிவு ஆனது நீக்கப்படுகின்றது என்று எடுத்துரைத்தார். மேலும் பேசுகையில், மணமக்கள் சிக்கனமாகவும், வரவுக்குள் அடங்கிய செலவு உள்ளவர்களாகவும், பகுத்தறிவு உணர்ச்சி உடையவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் வாழ வேண்டிய அவசியம் பற்றி தெளிவுபடுத்தி அறிவுரையாற்றினார்.
(28.6.1963 அன்று திருச்சி உய்யக்கொண்டானுக்கு அடுத்த செங்கச்சோலையில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – ‘விடுதலை’ 9.7.1963).