தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவப் படத்தினை 4.9.2025 அன்று திறந்து வைத்து அரியதோர் உரையை வழங்கினார்.
‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தந்தை பெரியார் குறித்து 1958இல் சிதம்பரம் திராவிடர் கழக நிகழ்ச்சியை மய்யப்படுத்திப் பாடினார். எத்தகைய தொலை நோக்கானது என்பதை இன்றைய கால கட்டத்தில் உணர முடிகிறது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் பொய்யாமொழி அவர்கள் 10.10.2025 அன்று அரியதோர் உரையைப் பொழிந்துள்ளார்.
கல்வி என்பதுதான் மனிதனின் கண்களைத் திறப்பதாகும். மலைக் குகைகளில் வாழ்ந்த மனிதன் இன்றைய கால கட்டத்தில் செயற்கை நுண்ணுறிவு (AI) சகாப்தத்தில் பரிணமித்திருக்கிறான் என்றால், அதற்குக் காரணம் கல்வியின் வளர்ச்சியும், கல்வி வளர்ச்சியால் ஏற்பட்ட மனித குல வளர்ச்சியுமேயாகும்.
வெளிநாடுகளில் எப்படியிருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி என்பது குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியினரின் தனி உடைமையாகவே இருந்து வந்திருக்கிறது!
இந்நாட்டு மக்களுக்கு உண்மையான தொண்டு என்பது, கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி உரிமையைப் பெற்றுத் தருவதேயாகும்.
நூறு ஆண்டுகளுக்குமுன் தோன்றிய சுயமரியாதை இயக்கமும் 1916இல் தோற்றுவிக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் (ஜஸ்டிஸ் பார்ட்டி) இத்துறையில் ஆற்றிய பங்கு அளப்பரியது!
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமி்ழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்த கல்வி கற்றோர் – அதாவது அடிப்படை எழுத்தறிவு (வயது 7+) ஆண்கள் 11.9%, பெண்கள் 0.9%. பள்ளி கல்லூரிகளைத் தொட்டவர்கள் சொற்பமே!
இதிலும் பெரும்பாலும் உயர் ஜாதியினர் குறிப்பாகப் பார்ப்பனர்கள்தாம்.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ் நாட்டில் எழுத்தறிவு விகிதம் 85.5 விழுக்காடாகும். இதில் ஆண்கள் 90 விழுக்காடு, பெண்கள் 81.3 விழுக்காடாகும்.
தமிழ்நாட்டில் இந்த வளர்ச்சி என்பது ஏதோ எளிதில் கிடைத்திட்ட ஒன்றல்ல; ஒவ்வொரு அங்குல வளர்ச்சியிலும் கடும் போராட்டமும், உழைப்பும் மிகப் பெரிய அளவில் செய்ததால் கிடைக்கப் பெற்றதாகும்.
அவ்வப்பொழுது கல்விக்குத் தடைக்கற்கள் போடப்பட்டுதான் வந்திருக்கின்றன.
ஆச்சாரியார் (ராஜாஜி, சென்னை மாகாண பிரதமராக இருந்தபோது 2,500 பள்ளிகளை இழுத்து மூடினார்.
1937களில் இருந்த பள்ளிக் கூடங்களே மிகவும் குறைவு. மது விலக்குக் கொண்டு வந்ததால் அரசின் வருவாய் குறைந்து விட்டது என்று காரணம் காட்டி, பள்ளிகளை இழுத்து மூடிய ‘புண்ணியவான்’ (?) அவர்.
அவரே 1952இல் சென்னை மாநில முதலமைச்சரான நிலையில் 6 ஆயிரம் பள்ளிகளை இழுத்து மூடினார்.
‘சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே!’ என்ற பார்ப்பன மனுதர்மப்படி இது நடந்தது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
இந்த நிலை உடைக்கப்பட்டு இன்று 80 விழுக்காட்டுக்கு மேல் எழுத்தறிவு பெற்றிருக்கிறார்கள் என்றால் இதற்காகப் பாடுபட்ட, பங்களித்தவர்களின் நல்லெண்ணத்தையும் முயற்சியையும் நன்றியறிதலுடன் நினைவு கூர்வோம்.
வெள்ளுடைவேந்தர் நீதிக் கட்சியின் மூத்த தலைவர் சர்.பிட்டி. தியாகராயர் சென்னை மாநகரத் தலைவராக இருந்தபோது, 1920 செப்டம்பர் 16ஆம் தேதி, இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார் என்பது வரலாற்றின் பொன் வரிகள் ஆகும்.
நீதிக்கட்சி ஆட்சியில் 1921ஆம் ஆண்டு ‘பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவி’ (Backward Classes Scholarship Scheme) என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது.
நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களுக்கென தனிப்பள்ளிகளும் தொடங்கப்பட்டன. 1920களில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன.
கிராமப்புற ஆசிரியர்களுக்காக ‘Rural Training Schools’ தொடக்கப்பட்டன.
தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களுக்காக 1920களில் ‘Depressed classes Education Fund’ என்ற நிதித் திட்டம் அமைக்கப்பட்டது.
நூறு ஆண்டுகளுக்குமுன் இத்தகைய சிந்தனைகளும், செயல்பாடுகளும் நடந்தன என்பதை எண்ணி எண்ணி மயிர்க்கூச்செறிகிறோம்.
பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சியில் கல்வி வெள்ளம் கரை புரண்டு ஓடியது; அதற்குப் பின் வந்த திராவிட அரசியல் கட்சிகளிலும் கல்வி வளர்ச்சியில் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பாடுகள் நடந்தன.
மதிய உணவுத் திட்டம் தொடங்கி, இப்பொழுது சத்துணவுத் திட்டமாக வளர்ந்து, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் காலை சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது என்றால் சாதாரணமா?
இந்தத் திட்டத்தால் இருபால் மாணவர்களும் ‘இடை நிற்றல்’ என்பது சுழியம் என்ற நிலையை இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் எய்தியுள்ளது.
‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு’ என்ற நிலை இருந்த இந்நாட்டில் நிலைமை இப்பொழுது முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது.
இந்தப் பின்னணியில் தமிழ்நாடு அரசின் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில் கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் 34 விழுக்காடாகவும், ஒட்டு மொத்த உயர் கல்விச் சேர்க்கை 50 விழுக்காடாகவும் வளர்ந்திருப்பதை மிகப் பெரு மிதமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எடுத்துக் கூறி இருக்கிறார்.
‘புதுமைப் பெண்’ திட்டம் என்ற பெயராலும், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம், ‘நான் முதல்வன்’ திட்டம், ‘இல்லம் தேடி கல்வி’ இவற்றின் மூலமும் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திராவிட மாடல் ஆட்சியின் உன்னத சாதனைகளைத் தலை நிமிர்ந்து கூறியிருப்பதை எண்ணிப் பெருமைப்படுகிறோம் – பாராட்டுகிறோம்.
இத்தகைய திராவிட மாடல் என்னும் வரலாற்று மறுமலர்ச் சிக்கான ஆட்சி வரும் தேர்தலில் மட்டுமல்ல– அதற்கடுத்த தேர்தல்களிலும் வெற்றி பெற்றால் உலகளவில் தமிழ்நாடு பேசப்படும் என்பதில் அய்யமில்லை.
வாழ்க திராவிடம்!
வளர்க கல்விப் புரட்சி!!