விருத்தாச்சலம். அக். 17, ”தாய்க்கழகம் என்ற முறையில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, அடமானம் வைக்கப்பட்ட பொருட்களையும் மீட்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது” என்று, விருத்தாச்சலம் மாவட்ட பெரியார் நிதியளிப்பு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது விழாப் பேருரையில் குறிப்பிட்டார்கள்.
விருத்தாச்சலம் (திருமுதுகுன்றம்) கழக மாவட்டம் சார்பாக பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா 15.10.2025 அன்று, மாலை 6 மணியளவில் இதுதான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி எனும் தலைப்பில் பெரியநாயகி உடனுறை பழமலைநாதர் திருக்கோயில் சன்னதி வீதியில் உள்ள, வானொலித் திடலில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் உலகம் நிதியளிப்பு விழாவுக்கு மிகப்பொருத்தமாக மேடையின் இடப்பக்கத்தில், பெரியார் உலகத்தில் அமையவுள்ள பெரியார் சிலையின் மாதிரி படம் பீடத்துடன் தனி பதாகையாக வைக்கப்பட்டிருந்தது. வானொலித் திடலைச் சுற்றியுள்ள வீதிகளில் கழகக் கொடிகளும், பதாகைகளும், மேடைக்கு அருகில் ஓடிக்கொண்டிருக்கும் மணிமுத்தாற்றின் இரு கரைகளையும் இணைக்கும் சுமார் 400 மீட்டர் நீளமுள்ள பாலத்தின் இருபுறமும் சீரான இடைவெளியில் கழகத்தின் கருப்பு சிவப்புக் கொடிகளும் கட்டப்பட்டு காந்தம் போல் கண்களையும், கருத்தையும் கவர்ந்து கொண்டிருந்தன.
தொடக்கத்தில் திண்டுக்கல் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.
நிதி திரட்டிய தோழர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் காப்பாளர் அ. இளங் கோவன், மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன், மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம்பரசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சே. பெரியார் மணி, விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் கா.குமரேசன், விருத்தாசலம் நகரச் செயலாளர்
மு.முகமது பஷீர், விருத்தாசலம் நகரத் தலைவர் ந. பசுபதி, விருத்தாச்சலம் ஒன்றிய தலைவர் கி.பாலமுருகன், திட்டக்குடி புலவர் வை. இளவரசன், பெண்ணாடம் நகரத் தலைவர் செ.கா.ராஜேந்திரன், திட்டக்குடி நகர தலைவர் வெ. அறிவு, மாவட்ட துணைச் செயலாளர் பி.பழனிச்சாமி, வேப்பூர் வட்டார செயலாளர் ம.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெங்கட.ராசா, கா. அறிவழகன் ஆகியோர் சிறப்பாக ஒத்துழைத்து 10 லட்சம் எனும் இலக்கைத் தாண்டி, ரூபாய் 13,50,500/- தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
அப்படிப்பட்ட சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெரியார் உலகம் நிதியளிப்புக் கூட்டத்திற்கு விருத்தாசலம் மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ப.வெற்றிசெல்வன் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். கழகக் காப்பாளர் அரங்க. பன்னீர்செல்வம், சொற்பொழிவாளர் வை இளவரசன், மாவட்டத் துணைத் தலைவர் அ.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பி. பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் தங்க.ராஜமாணிக்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம்பரசன், விருத்தாசலம் ஒன்றிய தலைவர் கி. பாலமுருகன், கம்மாபுரம் ஒன்றியத் தலைவர் த.தமிழ்ச்செல்வன், விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் கா.குமரேசன், விருத்தாசலம் நகரத் தலைவர் ந.பசுபதி, விருத்தாசலம் நகரச் செயலாளர் மு.முகமது பஷீர், திராவிட மாணவர் கழக மாவட்டச் செயலாளர் சு.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இலைகளும் ஈசல்களும்
விருத்தாசலம் மாவட்டத்தில் பெரியார் உலகம் நிதியளிப்பு விழாவில் கழகத் தலைவர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசினார்கள். அதில் ஏராளமான பொருத்தமான உவமைகளைக் கையாண்டு இன்றைய அரசியல் நடப்புகளை மக்களுக்குச் சுட்டிக்காட்டிப் பேசினார். அதில் ஒன்று ”இலைகளும் – ஈசல்களும்” ஆகும். அதாவது, ”பெரியாரோ, அண்ணாவோ, கலைஞரோ உடலால் தான் மறைந்தனர். தத்துவங்களாக வாழ்கின்றனர் என்பதைச் சொல்லிவிட்டு, ”நடைபெறுவது அரசியல் தேர்தல் அல்ல. சிலர் சில மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். மின்சாரத்திற்கு முன்னால் மின்மினிப் பூச்சிகள் தாக்குப்பிடிக்காது. இன்றைக்கும் கூட லேசாக மழை பொழிகிறது. இது போன்ற சூழலில் ஒரு சீசன் போல ஈசல்கள் திடீரென்று கிளம்பி வரும். அது ஏற்படுத்துகிற தொல்லையால் அனைவரும் தடுமாறுவார்கள். அதுமாதிரி இப்போது ஈசல்கள் நிறைய வரத் தொடங்கியுள்ளன. வேப்பிலையை கொத்தாகக் கட்டி வைத்தால், ஈசல்கள் எல்லாம் இலையிடம் சென்றுவிடும். நாங்கள் கூட்டத்தை நிறைவு செய்துவிடுவோம்” என்று உவமித்துச் சொன்னதும் மக்கள் நடப்பு அரசியலை இதனுடன் தொடர்பு படுத்திப் பார்த்து, ரசித்து; சிரித்து; கைதட்டி தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், விருத்தாசலம் கழக மாவட்டக் காப்பாளர் அ.இளங்கோவன் தொடக்க உரையாற்றினர். அதைத் தொடர்ந்து, கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பாவலர் அறிவுமதி, விருத்தாசலம் நகர் மன்றத் தலைவர் சங்கவி முருகதாஸ், தி.மு.க. கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் எம்.எஸ்.கணேஷ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பா.ரா. நீதி வள்ளல், திமுக நகர துணைச் செயலாளர் எஸ்.ராமு, கழக தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன், திமுக கடலூர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் க.செல்வமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் கழகத் தலைவர் உரையாற்றினார். தொடக்கத்தில் அவர் தமது உரையில், ”நான் இந்த இடத்திற்குப் புதியவன் அல்ல, இங்கிருக்கும் இளைஞர்களுக்கு நினைவூட்டுகிறேன்” என்ற பீடிகையோடு, 1943 இல் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற மாநாடு முடிந்து பெரியார் மீது செருப்பு வீசப்பட்டது. அந்த மாநாடு முடிந்து, நாங்கள் சேலம் செல்ல வேண்டும். கடலூரில் இருந்து விருத்தாசலம் வந்துதான் மீட்டர்கேஜ் பயணிகள் ரயிலில் சேலம் செல்ல வேண்டும். அப்போதெல்லாம் விளக்குகள் கிடையாது. நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்கும். ரயில் நிலையத்தில் வெளிச்சம் இருக்கும் அவ்வளவுதான். ஒரு ஜட்கா வண்டியில் தோழர்களுடன் இருட்டில் தான் செல்ல வேண்டும். அது 1944 சேலம் மாநாடு!” என்று தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றை தலைகீழாக்கிய சம்பவத்தை, அந்தக் காலகட்டத்தில் இருந்த சூழலை ஒரு படச்சித்திரத்தைக் காண்பது போலவே விவரித்தார். அதைத் தொடர்ந்து, ”இப்போது நன்றாக வெளிச்சத்தில் அமர்ந்து பேசுகிறோம். ஆகவே இந்த ஊருக்கு நான் புதியவன் அல்ல” என்று கூறி, 81 ஆண்டுகளுக்கும், நடப்புக்குமாக ஒரு இணைப்பைச் சொன்னதும், பார்வையாளர்களுக்கு மலைப்பே ஏற்பட்டுவிட்டது.
அதைத் தொடர்ந்து, “இங்கே வந்திருக்கும் யாரும் எங்களை பார்க்க வரவில்லை. கேட்க வந்திருக்கிறீர்கள். இந்தக் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் போனால் பாதுகாப்பாக போகலாம். ஏனென்றால் இது கட்டுப்பாடு நிறைந்த கூட்டம் இது. உங்களுக்கு புத்தி புகட்டுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது” என்று நடப்பு அரசியலை நாகரிகத்தோடு சுட்டிக்காட்டிப் பேசியதும், உடனடியாகப் புரிந்து கொண்ட மக்கள் புன்முறுவலோடு கைதட்டி ரசித்தனர். மேலும் அவர், எங்களுக்கும் எதிர்ப்புகள் இருக்கிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில்தான் கூட்டம் நடைபெற்றது. நானும் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரனும் மணிமுத்தாறு பாலத்தில் வந்த போது, வாகனத்தின் கண்ணாடிகள் உடையும் வண்ணம் எங்கள் மீது தாக்குதல் நடந்தது என்று கூறிவிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாது. ஆனால், தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இதே பகுதி மக்கள் 10 லட்சம் வழங்குவதாக அறிவித்து, அதற்கும் மேலே ரூபாய் 13,50,500/- வழங்கியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் கணக்கு இருக்கிறது
இதுதான் தந்தை பெரியார் சொல்லிச்சென்ற நாணயம். இதுதான் முக்கியமானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும் மக்கள் அதை அங்கீகரிக்கும் வண்ணம் கைதட்டினர். தொடர்ந்து பெரியார் உலகத்தின் சிறப்புகளைச் சொல்லி, பெரியாரின் கொள்கை எப்போதும் வெற்றி பெறும். அதைப்போல பெரியார் உலகமும் உருவாகும் என்றார்.
தொடர்ந்து இன்றைக்கு நடைபெறும் அரசியலை சுட்டிக்காட்ட பொருத்தமான ஒரு உவமையைச் சுட்டிக்காட்டினார். அதாவது, ”இராமாயணத்தில் வாலியைக் கொல்லும் போது, ராமன் நேரடியாக அம்பு விடவில்லை. மரத்திற்குப் பின்னால் இருந்து தான் விட்டான். இப்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது” என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் புதிய அரசியல் கட்சி இருப்பதை சுட்டிக்காட்டினார். அதைத் தொடர்ந்து, மனு தர்மத்தையும், இந்திய அரசியல் சட்டப் புத்தகத்தையும் இரண்டு கைகளில் எடுத்து வைத்துக்கொண்டு, ”இந்த இரண்டுக்கும் இடையில் தான் இப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது” என்று சொல்லி, நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல என்பதை வலியுறுத்தினார்.
இதே கருத்தோட்டத்துடன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது செருப்பை வீசியது குறித்து, தத்துவரீதியாக விளக்கிப் பேசினார். ஸநாதனத்தை கொண்டு வர நினைக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் பற்றி கூற வரும் போது, ”தாய்க்கழகம் என்ற முறையில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, அடமானம் வைக்கப்பட்ட பொருட்களையும் மீட்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது” என்று தமிழ்நாட்டை பல முறை ஆண்ட கட்சியையும் நாகரிகத்துடன் சுட்டிக்காட்டினார். வடநாட்டில் மனுதர்மப்படி இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருப்பதை, இன்றைய செய்திகளையே தரவுகளாகச் சுட்டிக்காட்டி, ”இதே நிலைமை தமிழ்நாட்டிற்கும் வரும். இதை வரவேற்கப் போகிறீர்களா? உங்கள் எதிர்காலத்திற்காக மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் வரவேண்டும். சிந்தியுங்கள்! வாக்களியுங்கள்!” என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து தோழர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, சென்னையை நோக்கிப் புறப்பட்டார்கள்.
கூட்டத்தில் கடலூர் மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, சிதம்பரம் மாவட்ட தலைவர் பேரா பூ.சி.இளங்கோவன், சிதம்பரம் மாவட்ட செயலாளர் யாழ் திலீபன், சிதம்பரம் மாவட்ட துணை தலைவர் அன்பு.சித்தார்த்தன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் அரங்க.பரணிதரன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் மு.இளமாறன், விழுப்புரம் நகர செயலாளர் சதீஷ், பெண்ணாடம் நகரத் தலைவர் செ.க. ராஜேந்திரன், திட்டக்குடி நகரத் தலைவர் அறிவு, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெங்கட.ராசா, வேப்பூர் வட்டார செயலாளர் ம.இளங்கோவன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆ.செந்தில், நா.பாவேந்தர் விரும்பி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஆனந்த், கா.அறிவழகன், தி.ராஜசேகர், வெற்றிச்செல்வி, உஷா, சங்கீதா, கபிலர், பொழிலன், இளமதி, சிறீதர், வெற்றிமாறன், வெற்றி மகிழன், எனதிரிமங்கலம் ராஜேந்திரன், வலசக்காடு வீரமணி, ஆவட்டி முருகேசன், பகவான் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சே. பெரியார் மணி நன்றி கூறினார்.