பெங்களூர், அக்.16 கருநாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 30 மதிப்பெண்கள் வீதமும், மொத்தமாக 206 மதிப்பெண்களும் எடுத்தால் போதும் என்று அந்த மாநில அரசு விதிமுறையை மாற்றி அமைத்து நேற்று (15.10.2025) அறிவிப்பை வெளியிட்டது. அதுபோல் பி.யூ. கல்லூரி மாணவர்களும் அதாவது (12-ஆம் வகுப்பு) ஒவ்வொரு பாடத்தி லும் தலா 30 மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்றும் மொத்தமாக 33 சதவீத மதிப்பெண்கள், அதாவது 198 மதிப் பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார் கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.
பீகாரில் என்.டி.ஏ. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தி
பாட்னா, அக். 16 பா.ஜனதா தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 12-ஆம் தேதி தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டது. அதில், ஒன்றிய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி. தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டன. இதனால் அக்கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. உபேந்திர குஷ்வாஹாவை சமாதானப்படுத்த ஒன்றிய அமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் மாநில பா.ஜனதா தலைவர்கள் நேற்று முன்தினம் (14.102025) பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதில் சமாதானம் ஏற்படவில்லை. இதையடுத்து, பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேச உபேந்திர குஷ்வாஹா நேற்று டில்லி புறப்பட்டு சென்றார். பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த தடவை தேசிய ஜனநாயக கூட்டணியில் எதுவும் சரியில்லை. எல்லாம் நன்றாக முடியும் என்ற நம்பிக்கையில் டில்லி செல்கிறேன்” என்றார்.